27.10.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த ஞானத்தைக் கடைவதில் உங்கள் புத்திகளை மும்முரமாக வைத்திருந்தால், நீங்கள் சகல கவலைகளில் இருந்தும் விடுபட்டுச் சதா சந்தோஷமாக இருப்பீர்கள்.

கேள்வி:
சிவபாபாவின் யாகத்தின் பணியாளர்கள் எனத் தம்மைக் கருதுபவர்களின் அடையாளங்கள் எவை?

பதில்:
பிரம்மாவின் வாயினூடாக சிவபாபா கூறும் அனைத்தையும் அவர்கள் உடனடியாகவே ஏற்றுக் கொள்கின்றார்கள். சிவபாபா கூறுவனவற்றை ஏற்றுக் கொள்வதே ஸ்ரீமத்தைப் பின்பற்றுதல் ஆகும். ஸ்ரீ ஸ்ரீ சிவபாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலமே நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். மேன்மையானவர் ஆகுதல் என்றால் வெற்றிமாலையில் ஒருவர் ஆகுதல் என்று அர்த்தம்.

பாடல்:
ஓம் நமசிவாய...

ஓம் சாந்தி.
சாலிகிராம்களான உங்களுடன் சிவபாபா பேசுகின்றார். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகின்றார். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் போது உங்களை ஆத்மாக்கள் என்று கருத வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தன்னை ஓர் ஆத்மா என்று கருதுகின்ற ஒரு மனிதரேனும் இவ் உலகில் இல்லை. அவர்களுக்கு ஆத்மா என்றால் என்னவென்பது தெரியாதிருக்கும் போது, அவர்கள் எவ்வாறு பரமாத்மாவை அறிந்திருக்க முடியும்? உண்மையில் ஓர் ஆத்மா என்றால் என்ன என்பதன் விளக்கத்தை நீங்கள் தந்தையிடம் இருந்து மாத்திரமே அறிந்து கொள்கின்றீர்கள். மனிதர்களுக்கு எதுவுமே தெரியாததால், அவர்கள் மிகவும் சந்தோஷமிழந்து இருக்கின்றார்கள். இந்த நாடகத்தின் கால எல்லை, அதாவது உலகக் கல்ப விருட்சம் 5000 வருடங்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒரு மாமரத்தின் விதை உயிருடன் இருக்குமாயின், நானே விதை என்றும், தன்னிலிருந்து மரம் வளர்கின்றது என்றும் அது விளங்கப்படுத்தும். எவ்வாறாயினும், அது உயிரற்றது. உயிருள்ள ஒரேயொரு மரமே உள்ளது. நீங்கள் முழு விருட்சத்தினதும், அதாவது, ஆரம்பம் முதல் இறுதிவரையான இந்த ஞானத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். நீங்கள் முயற்சி செய்வதற்கு ஏற்ப, வரிசைக்கிரமமாகவே அதனைப் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நானே சத்தியமும், உயிருள்ளவரும், பேரானந்த சொரூபமுமான மனித விருட்சத்தின் விதையாவேன். நான் ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றேன். இது அசரீரியானவரின் புகழாகும். தந்தையின் புகழ் தனித்துவமானது என்பதை நீங்கள் அறிவீர்கள். மனிதர்கள் தந்தையின் புகழைச் சற்றேனும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் தேவர்களாக இருந்த போதும், அவர்களிடமும் இந்த ஞானம் இல்லை. நீங்கள் நாடகத்தின் இந்த ஞானத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். இந்த உலகச் சக்கரம் தொடர்ந்தும் எவ்வாறு சுழல்கின்றது என்றும், நீங்கள் தேவர்கள் ஆகும் போது, ஏன் இந்த ஞானம் நிலைத்திருப்பதில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அது ஓர் அற்புதம்! நீங்கள் இந்த நாடகத்தின் நடிகர்கள், அப்படித்தானே? உங்களிடம் படைப்பவரதும். படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானமும் உள்ளது. சூத்திர குலத்தினரிடமோ அல்லது தேவ குலத்தினரிடமோ இந்த ஞானம் இருப்பதில்லை. பண்டிகைகள் தொன்று தொட்ட காலத்திலிருந்து தொடர்கின்றது என்று அவர்கள் கூறுவதைப் போன்று, இந்த ஞானமும் தொன்று தொட்ட காலத்தில் இருந்து தொடரவில்லை. சத்தியயுகத்தில் எவருக்கும் இந்த பண்டிகைகளைப் பற்றி எதுவுமே தெரியாது என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அங்கே, உங்களுக்கு எதுவுமே ஞாபகத்தில் இருக்க மாட்டாது. அங்கே நீங்கள் ஓர் இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள். உங்கள் அனைவரதும் புத்திகளின் பு௧௦ட்டு திறக்கப்பட்டுள்ளது. உங்களுக்குப் பிரதான படைப்பவரையும், இயக்குனரையும், கதாநாயகனையும் தெரியும். நீங்கள் மிகவும் சிறந்ததோர் ஞானத்தைப் பெறுகின்றீர்கள்! இந்த ஞானத்தை அறியாதவர்கள் விவேகம் அற்றவர்கள், நீங்களும் விவேகம் அற்றவராகவே இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றீர்கள். எவரது புத்தியில் இந்த ஞானம் எப்பொழுதும் இருக்கின்றதோ அவர் அளவற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்வார். உங்களைத் தவிர வேறு எவராலும் இந்த ஞானத்தைப் புரிந்து கொள்ள முடியாது. தந்தையான கடவுளே, ஞானம் நிறைந்த உலகச் சர்வசக்திவான் என்று அழைக்கப்படுகின்றார். அவர் கொடுக்கும் ஞானம் என்ன? அவரிடம் வேதங்களினதும், சமயநூல்களினதும், முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் உள்ளது. சமயநு}ல்களில் கூடப் படைப்பவரினதோ படைப்பினதோ ஞானம் இல்லை. இதனாலேயே ரிஷிகளும் முனிவர்களும் படைப்பவர் அல்லது அவரின் படைப்பைப் பற்றித் தமக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். ஒரேயொருவரால் மட்டுமே விளங்கப்படுத்த முடியும். அப்படி இருக்கும்போது ஏனையோரால் எப்படி அதைத் தெரிந்து கொள்ள முடியும்? குழந்தைகளாகிய உங்களைத் தவிர, இந்த ஞானத்தை வேறு எவராலும் கொடுக்க முடியாது. தந்தையே அதனை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவரே மகத்துவமானவரும் ஞானம் நிறைந்தவரும் ஆவார்! நீங்கள் மிகவும் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றீர்கள்! நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதையிட்டு அதிகளவு சந்தோஷப்பட வேண்டும். உங்கள் புத்திகள் இந்த ஞானத்தால் நிறைந்து வழிய வேண்டும். உங்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. நீங்கள் இப்பொழுது மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் ஆவீர்கள். தமோபிரதான் ஆகியுள்ள ஆத்மா தந்தையை நினைவு செய்வதன் மூலம் சதோபிரதான் ஆகுகின்றார். அது வரிசைக்கிரமாக உள்ளது. உங்களில் சிலரது புத்தி தமோவிலிருந்து ரஜோவாகவும், ஏனையோரது ரஜோவில் இருந்து சதோவாகவும் ஆகியுள்ளது. இந்த நேரத்தில், எவரிடமும் சதோபிரதான் புத்தியில்லை. அவர்கள் சதோபிரதான் ஆகும் போது, நீங்கள் கர்மாதீத நிலையை அடைவீர்கள். அப்பொழுது நீங்கள் ஆட்சி செய்வதற்குப் புதியதோர் உலகம் தேவை. இந்த யாகம் முடிவடையும் போது, பழைய உலகம் முழுவதும் அதில் அர்ப்பணிக்கப்படும். அப்பொழுது நீங்கள் செய்யும் முயற்சிக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாகக் கல்வியும் முடிவடையும். ஒரு பாடசாலையில் உள்ள மாணவர்களும் தாம் பரீட்சையில் சித்தியெய்தும் போது, அடுத்த வகுப்புக்கு மாற்றம் செய்யப்படுவோம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். உங்கள் கர்மாதீத ஸ்திதியை நீங்கள் அடையும் போது, நீங்கள் இந்த மரண உலகிலிருந்து அமரத்துவ உலகிற்கு மாற்றம் செய்யப்படுவீர்கள். நீங்கள் இங்கிருந்து மாற்றம் செய்யப்படுவீர்கள் என்பதை அறிந்திருக்கின்றீர்கள். நீங்கள் தூய்மையாகி, அமரத்துவ உலகிற்குச் செல்வீர்கள். ஆதியில், நாங்கள் அமைதிதாம வாசிகள் ஆவோம். பின்னர் எங்கள் பாகங்களை நடிக்கும் போது, நாங்கள் அமரத்துவ உலகிலிருந்து மரண உலகிற்கு வந்து சேர்ந்தோம். உங்கள் புத்தியில் இந்த ஞானம் முழுவதும் இருக்கும் போது, நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். இந்த ஞானத்தைத் தவிர நீங்கள் வேறு எதனைப் பற்றியும் சிந்திக்க மாட்டீர்கள். நாங்கள் இப்பொழுது கற்று, புதிய உலகிற்கு அதிபதிகள் ஆகுவோம் என்றும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இங்கே தூய்மை அற்றவர்கள் மாத்திரமே உள்ளார்கள். தேவர்கள் எவரும் இல்லை. உங்களை மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆக்குபவர் யார்? தந்தையால் மாத்திரமே உங்களை அவ்வாறு ஆக்க முடியும். சுவர்க்கம் உண்மையில் இருந்தது என்றும், அங்கே இலக்ஷமி நாராயணனின் இராச்சியம் நிலவியது என்றும் உங்களால் இப்பொழுது விளங்கப்படுத்த முடியும். அதனை ஸ்தாபித்தவர் யார்? தந்தையான சுவர்க்கக் கடவுளே, தேவர்கள் ஆட்சி செய்த வைகுந்தத்தை ஸ்தாபித்தார். அங்கே வேறு எந்தச் சமயமும் இருக்கவில்லை. இது ஒரு பெரிய எல்லையற்ற நாடகம். நீங்கள் உயிருள்ளவர்கள். இந்த விருட்சத்தின் விதை மேலே உச்சியில் உள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை அழியாதவர், நீங்களும் அழியாதவர்கள். முழு விருட்சமும் இப்பொழுது அதன் முற்றிலும் உக்கிய நிலையை அடைந்துள்ளது. இந்த நேரத்தில், மனிதர்கள் அனைவரும் முட்களைப் போன்று ஆகியுள்ளார்கள். இது ஒரு முட்காடு. அனைவரும் ஒருவருக்கொருவர் துன்பத்தையே கொடுக்கின்றார்கள். தந்தையே பூந்தோட்டக்காரன் ஆவார். அவர் படகோட்டி என்றும் அழைக்கப்படுகின்றார். நீங்களும் எவ்வாறு உங்கள் படகுகளை ஓட்டுவது என்று கற்கின்றீர்கள். உங்கள் ஒவ்வொருவரின் படகும் எவ்வாறு கரையேறும் என்பதைத் தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். படகு சரீரம் அல்ல. சரீரம், ஆத்மா இரண்டையும் படகு உள்ளடக்குகின்றது. ‘எனது படகைக் கரையேற்றுங்கள்!’ என்று அவர்கள் பாடுகின்றார்கள். ஆத்மா, சரீரம் இரண்டும் இப்பொழுது தூய்மை அற்றுள்ளது. இப்பொழுது நீங்கள் எவ்வாறு கரையேற முடியும்? அத்துடன் உங்களால் எங்கு செல்ல முடியும்? நீங்கள் இப்பொழுது சத்தியயுகத்தில் இருந்து கலியுகம் வரையில் உள்ள அசரீரி உலகம், சூட்சும உலகம், சரீர உலகம் பற்றிய இரகசியங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். எனவே உங்கள் புத்திகளில் ஏன் இவை நிலைத்து இருப்பதில்லை? நீங்கள் ஏன் மறக்கின்றீர்கள்? உங்கள் புத்திகளில் இவை தொடர்ந்தும் இருக்குமாயின், நீங்கள் சந்தோஷமாக இருப்பதுடன், நீங்கள் சகல கவலைகளில் இருந்தும் விடுபட்டிருப்பீர்கள். பாபா உங்களை வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்லவே வந்திருக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை தன்னிடம் உள்ள ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். தந்தையை அன்றி வேறு எவராலும் விளங்கப்படுத்த முடியாத இவ்விடயங்கள் முற்றிலும் புதியவை. அசரீரி தந்தை சரீரதாரியான இவரினூடாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்களும் உங்கள் சரீரத்தினூடாகவே செவிமடுக்கின்றீர்கள் என்பதால் தந்தை உங்களை தனக்குச் சமமானவர் ஆக்குகின்றார். தந்தையின் புகழ் எதுவோ, அவை உங்களது புகழாகவும் இருக்க வேண்டும். அதில் எந்த வேறுபாடும் இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் பிறப்பு, இறப்புச் சக்கரத்திற்குள் பிரவேசிப்பதில்லை, ஆனால் நீங்கள் பிரவேசிக்கின்றீர்கள் என்பது மாத்திரமே ஒரேயொரு வேறுபாடு. நீங்கள் ஞானக்கடல் என்றும், சந்தோஷக்கடல் என்றும் அழைக்கின்றீர்கள். ஆகையால், நான் உங்களுக்கு நிச்சயமாக இந்த ஞானத்தைக் கொடுக்கின்றேன். நான் ஒவ்வொரு கல்பத்திலும் கொடுக்கின்றேன். நீங்கள் உண்மையிலேயே 84 பிறவிச் சக்கரத்தை சுற்றி வந்திருக்கின்றீர்கள் என்பதையும், இப்பொழுது இறுதியை வந்து அடைந்திருக்கின்றீர்கள் என்பதையும் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தந்தை பின்னர் உங்களை முதல் இலக்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இதுவே ஞானம், அப்படித்தானே? ஞானம் வருமானத்தை சம்பாதிப்பதற்கான வழிமுறை. ஒவ்வொருவரும் கற்பதற்கேற்பவே அவரவரின் வருமானம் உள்ளது. இது ஞானமும் அத்துடன் ஒரு வியாபாரமும் ஆகும். நீங்கள் பாபாவிடம் குப்பையைக் கொடுக்கின்றீர்கள்! ஒருவர் மரணிக்கும் போது, அந்த நபரின் உடமைகள் அனைத்தையும் பிராமணப் புரோகிதரிடம் அவர்கள் கொடுக்கின்றார்கள். இங்கே, நீங்கள் உயிருடன் இருக்கும் போதே அனைத்தையும் கொடுக்க வேண்டும். உண்மையில், அது இந்த நேரத்தையே குறிக்கின்றது. தந்தை கூறுகின்றார்: மரணிக்கும் முன்னரே உங்களிடம் உள்ள அனைத்தையும் பாபாவிடம் கொடுத்து விட்டு, ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகுங்கள். தவறினால் இறுதியில் உங்களிடம் உள்ளவற்றையே நீங்கள் நினைவு செய்வீர்கள். செல்வந்தர்கள் இந்த ஞானத்தை எடுக்க மாட்டார்கள். அவர்களின் செல்வம் ஒரு பிறவிக்கானது. அவர்கள் தமது சரீரங்களை விட்டு நீங்குவார்கள். தமது கர்மக் கணக்கிற்கு ஏற்ப அடுத்த பிறவியில் தாம் எங்கே பிறக்கின்றோம் என்பது அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் என்ன முயற்சி செய்தாலும், அதற்கேற்ற பலனை நீங்கள் பெறுவீர்கள் என்பதை அறிந்திருக்கின்றீர்கள். இந்த நேரத்தில் அனைவருமே பௌதீகச் சேவை செய்கின்றார்கள். எவருக்கும் ஆன்மீகச் சேவையைப் பற்றித் தெரியாது. பரமாத்மா வந்து இந்த ஞானத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவரே சந்தோஷக்கடலும், துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரும் ஆவார். மக்கள் சிவனின் பிறப்பைக் கொண்டாடுகின்றார்கள். ஆனால் அவர்களின் புத்தியில் அது இருப்பதில்லை. பாபா 5000 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் வந்து இந்த ஞானத்தை உங்களுக்குக் கூறுவார் என்ற ஞானத்தை உங்கள் புத்தியில் நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். இந்த ஞானம் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. அவ்வாறாயின் அது எங்கிருந்து கலியுகத்திற்கு வருகின்றது? இலக்ஷ்மி நாராயணனுக்கு தாம் ஏன் ஆலயங்களைக் கட்டுகின்றோம் என்பது உலகிலுள்ள எவருக்குமே தெரியாது. அவர்கள் யார்? அவர்களது இராச்சியத்தை அவர்களுக்குக் கொடுத்தது யார்? அது அவர்கள் செய்த செயல்களுக்கான பலனாகும். தந்தை இங்கே அமர்ந்திருந்து செயல், நடுநிலைச்செயல், பாவச்செயலின் தத்துவத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இவை கடவுளின் வாசகங்கள். கீதையின் மூலமே ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அங்கே வெகுசில மக்களே உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவருமே முக்தியைப் பெறுவார்கள். அவர்கள் மகாபாரத யுத்தம் பற்றி எழுதியுள்ளார்கள். பல அனர்த்தங்கள் இடம்பெறும். இயற்கை அழிவுகளும் இடம்பெறும். பழைய உலகம் அழிக்கப்படும். இவை அதே குண்டுகளும், ஏவுகணைகளும், விநாசத்திற்கான அதே காலமும் ஆகும். இப்பொழுதே கடவுள் வந்து உருத்திர ஞான யாகத்தை உருவாக்குகின்றார், இதன் மூலமே விநாசத்தின் சுவாலை வெளிப்படுகின்றது. கடவுள் அமைதியும், சந்தோஷத்திற்காகவும் யாகத்தை உருவாக்குகின்றார். எவ்வாறாயினும், துன்பமும் அமைதியின்மையும் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். கடவுளின் இந்த ஞான யாகத்தில் முழு உலகமும் அர்ப்பணிக்கப்படும். இவ்விடயங்கள் உங்கள் புத்திகளில் உள்ளது. நாங்கள் பிராமணர்கள். பிராமணர்களாகிய நாங்களே சிவபாபாவின் யாகத்தின் பணியாட்கள். நாங்களே உண்மையான வாய்வழித் தோன்றல்களான பிராமணர்கள். தந்தை தனது வாயினூடாகக் கூறுகின்ற அனைத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். ஸ்ரீ ஸ்ரீ சிவபாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றினால் நீங்கள் மேன்மையாகவும் மாலையின் மணிகளாகவும் ஆகுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். வம்சாவளி விருட்சம் மாலையின் மணிகளை உள்ளடக்குகின்றது. தொடர்ந்தும் வளர்கின்ற வம்சாவளி விருட்சமும் உள்ளது. இந்த வம்சாவளி விருட்சத்தை பாபாவே உருவாக்கியுள்ளார்: அதுவும் வம்சாவளி விருட்சமே. ஆக உச்சியில் இருப்பவர் சிவபாபாவும், அதன் பின்னர் ஆத்மாக்களும் உள்ளனர். அசரீரி வம்சாவளி விருட்சம் பின்னர் சரீர விருட்சம் ஆகுகின்றது. பிரஜாபிதா முதல் இலக்கத்தில் உள்ளார். இவர் பௌதீகமானவர், அவர் சூட்சுமமானவர். ஆன்மீகத் தந்தை வந்து பிரஜாபிதா பிரம்மாவினூடாக அதனை உருவாக்குகின்றார். நீங்கள் கூறுகின்றீர்கள்: தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்க வாருங்கள். பிரளயம் என்றுமே இடம்பெறுவதில்லை. உலக வரலாறும் புவியியலும் மீண்டும் மீண்டும் சுழல்கின்றது. பழைய உலகம் மீண்டும் புதியதாக ஆகுகின்றது. நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்காக முயற்சி செய்கின்றீர்கள். எல்லையற்ற தந்தையே இந்த எல்லையற்ற ஞானத்தைக் கொடுக்கின்றார். எல்லைக்கு உட்பட்ட ஆஸ்தி உங்களுக்கு இருந்த போதும், நீங்கள் எல்லையற்ற தந்தையையே நினைவு செய்கின்றீர்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: ஓ கடவுளே! ஒருவர் மரணிக்கும் தறுவாயில், தந்தையான கடவுளை நினைவு செய்யுங்கள் என மக்கள் கூறுகின்றார்கள். எனவே இரு தந்தையர் உள்ளனர் என்பதையே இது நிரூபிக்கின்றது. ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். ஆத்மாக்களே அழைக்கின்றார்கள்: ஓ துன்பத்தை அகற்றுபவரே, சந்தோஷத்தை அருள்பவரே, விடுதலையளிப்பவரே, வாருங்கள்! எங்களுக்கு எங்கள் வீட்டிற்கான வழியைக் காட்டுங்கள். எங்கள் வீட்டையே நாங்கள் நினைவு செய்கின்றோம். ஆனால் மாயை எங்கள் இறக்கைகளைத் துண்டித்து விட்டதால், எங்களால் திரும்பிச் செல்ல முடியாதுள்ளது, எவராலுமே வீடு திரும்ப முடியாது. நீங்கள் இப்பொழுது உங்கள் சொந்த ஒளியை ஏற்ற வேண்டும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றப்படும். ஒளியை முற்றாக அணைக்க முடியாது. ஒருவர் மரணிக்கும் போது, அவர்கள் ஒரு விளக்கை ஏற்றுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் விளக்கில் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருக்க விசேடமாக ஒருவரையும் நியமிக்கின்றார்கள். இல்லாவிட்டால், இருண்டு விடும். நீங்கள் இப்பொழுது யோகசக்தியினூடாக எண்ணெய் ஊற்றுவதனால், காரிருளில் இருந்து ஒளி கிடைக்கும். அது தீபமாலை ஆகும். தீபமாலை சத்தியயுகத்திலேயே உள்ளது. இங்கு அல்ல. கொண்டாடப்படும் பண்டிகைகள் அனைத்தினதும் உட்கருத்துக்களை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். அவர்கள் எதனையும் புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும் ராக்கி போன்ற விழாக்கள் தூய்மையைக் கடைப்பிடிப்பதற்கே என்று விளக்கப்பட்டுள்ளது. மக்கள் தாம் உண்மையிலேயே சீரழிந்துள்ளோம், தந்தையால் மாத்திரமே தம்மை மேன்மையானவர் ஆக்க முடியும் என்று உணரும் வகையில் நீங்கள் அவர்களுக்குத் திறமையாக இந்த ஞான ஊசியை ஏற்ற வேண்டும். தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ, நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். நீங்கள் சாதுரியமாக அம்பை எய்ய வேண்டும். நீங்கள் பேசுவதற்கு அந்தச் சக்தி தேவை. நீங்கள் இப்பொழுது சர்வசக்திவான் தந்தையிடம் இருந்து சக்தியைப் பெற்று மாயையை வெற்றி கொண்டால் மாத்திரமே உங்கள் பாக்கியமான இராச்சியத்தை உங்களால் பெற முடியும். தந்தையைத் தவிர வேறு எவராலும் அதனை உங்களுக்குப் பெற்றுத் தர முடியாது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, எவ்வாறிருந்த உங்களை நான் எவ்வாறு ஆக்குகின்றேன் என்று பாருங்கள்! அத்தகைய தந்தையை நீங்கள் சதா நினைவு செய்தாலே உங்கள் பாவங்கள் அழியும். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்தால் உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். உங்கள் எண்ணங்கள் எவ்வாறு உள்ளனவோ, அவ்வாறே ஆகுவீர்கள். ஆகையால், தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்வதனால், நீங்களும் அவ்வாறு ஆகுவீர்கள். நினைவு செய்வதனால் உங்கள் பாவங்கள் அழிவதுடன், நீங்கள் வீட்டிற்கும் திரும்பிச் செல்வீர்கள். இந்த ஞானமே உங்களின் வருமானத்திற்கான வழியாகும். உங்களுக்கு ஆரோக்கியமும் செல்வமும் இருந்தால், நீங்கள் சந்தோஷமாகவும் இருப்பீர்கள். அங்கே, நீங்கள் மிகவும் நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள். கிருஷ்ணரை யோகேஷ்வர் என்று அழைக்க முடியாது. நீங்களே யோகேஷ்வர் ஆவீர்கள். ஈஸ்வர் (கடவுள்) உங்களுக்கு யோகம் கற்பிக்கின்றார். இது இராஜயோகம். நீங்கள் யோகம் செய்து உங்கள் பாக்கியமான இராச்சியத்தைப் பெற்றுள்ளீர்கள். கடவுள் உங்களுக்கு யோகம் கற்பித்து உங்கள் ஆஸ்தியான இராச்சியத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். இராச்சியத்தை உங்களுக்குக் கொடுத்தது யார்? தந்தையாவார். தந்தை கூறுகின்றார்: அல்ஃபாவை நினைவு செய்யுங்கள். தந்தையையும் உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் தொடர்ந்தும் அழிக்கப்படும். இது மிகவும் இலகுவானது. உங்கள் புத்திகளில் அதிகளவில் இந்த ஞானம் உள்ளது. கடவுளின் குழந்தைகள் மாஸ்டர் கடவுள்கள் ஆவார்கள். நீங்கள் இங்கே தந்தையோடு அமர்ந்திருக்க முடியாது. உங்கள் பாகங்களை நீங்கள் நடிக்க வேண்டும். நீங்கள் சேவை செய்யும் போது ஆத்ம உணர்வில் இருக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற இந்த ஞானத்தைச் சதா கடையுங்கள். பிறருடன் தொடர்ந்தும் சாதுர்யமாகப் பேசுங்கள். அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்துங்கள்.

2. நீங்கள் உயிர்வாழும் போதே உங்களிடம் உள்ள அனைத்தையும் தந்தையிடம் கொடுங்கள். நம்பிக்கைப் பொறுப்பாளராக இருந்து தந்தையை நினைவு செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இந்த யாகத்திற்குள் ‘நான்’ என்ற சரீர உணர்வைப் போடுகின்ற தாரணை சொரூபம் ஆகுவீர்களாக.

உங்களின் எண்ணங்களில் அல்லது கனவுகளில் ‘நான்’ என்ற உணர்வு இல்லாதபோது, உங்களின் அநாதியான ஆத்ம உணர்வு ரூபத்தின் விழிப்புணர்வு இருக்கும்போது, சத்தமற்ற உச்சாடனமான ‘பாபா, பாபா’ என்பது தொடர்ந்து வெளிப்படும்போது, நீங்கள் தாரணையின் சொரூபம், ஓர் உண்மையான பிராமணர் எனப்படுவீர்கள். பிராமணர்களான நீங்கள் ‘நான்’ என்ற உணர்வைப் பலியிடும்போது, அதாவது, இந்த உலகிற்கான உங்களின் சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களை இந்த மகாயாகத்திற்குள் பலியிடும்போது, இந்தப் பழைய உலகமும் பலியிடப்படும். எனவே, இந்த யாகத்தை உருவாக்குவதற்கு நீங்கள் கருவிகள் ஆகியிருப்பதைப் போல், இந்த இறுதிப் படையலைச் செய்து, அதை நிறைவு செய்வதற்குக் கருவிகள் ஆகுங்கள்.

சுலோகம்:
சுயம், சேவை மற்றும் ஏனைய அனைவரிடம் இருந்தும் திருப்திக்கான சான்றிதழைப் பெறுவதென்றால் வெற்றி சொரூபம் ஆகுவதாகும்.

அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.

ஒரு யோகி வாழ்க்கை என்ற அதியுயர்ந்த இலக்கை அடையப் போகும் ஓர் ஆத்மா, அவதூறுகளைப் புகழ்ச்சியாகவும், நிராகரிப்பை மரியாதையாகவும், அவமதிப்பை தன்னம்பிக்கையாகவும் இகழ்ச்சியை ஈடேற்றமாகவும் மாற்றி, சதா வெற்றியாளராகத் திகழ்வார். இத்தகையதோர் ஆத்மா தந்தைக்குச் சமமாகவும் எட்டு இரத்தினங்களில் ஒருவராகவும் பக்தர்களின் இஷ்ட தெய்வமாகவும் இருப்பார். அவர் சிறிது மாறினால், நீங்களும் மாறுவீர்கள் என்ற உணர்வைக் கொண்டிராதீர்கள். இது எடுத்துக் கொள்ளும் உணர்வு. நான் அதிர்வலைகளைக் கொடுக்க வேண்டும். நான் கருணை நிறைந்தவன் ஆகவேண்டும். நான் நற்குணங்கள் மற்றும் சக்திகளின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இதில் மாஸ்ரர் அருள்பவர் ஆகுங்கள். பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டிருங்கள்.