28.10.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, சரீர உணர்வைத் துறந்து ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள் என்பதே உங்களுக்கான சற்குருவின் முதலாவது ஸ்ரீமத் ஆகும்.

பாடல்:
குழந்தைகளாகிய நீங்கள் ஏன் இந்நேரத்தில் எந்த ஆசைகளையும் கொண்டிருக்கக்கூடாது?

பதில்:
ஏனெனில், நீங்கள் அனைவரும் ஓய்வு ஸ்திதியில் இருக்கின்றீர்கள். இந்நேரத்தில் உங்கள் பௌதீகக் கண்களால் காண்பவை அனைத்தும் அழியப் போகின்றன என உங்களுக்குத் தெரியும். இப்பொழுது உங்களுக்கு எதுவும் தேவையில்லை; நீங்கள் முழுமையான பிச்சைக்காரர்கள் ஆகவேண்டும். நீங்கள் விலையுயர்ந்த எதனையாவது அணிவீர்களாயின், அது உங்கள் புத்தியை ஈர்க்கும், அப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் சரீர உணர்வில் சிக்கிக்கொள்வீர்கள். இதற்கே முயற்சி தேவைப்படுகின்றது. நீங்கள் முயற்சி செய்து முற்றிலும் ஆத்ம உணர்வுடையவராகும்பொழுது, உலக இராச்சியத்தைப் பெறுவீர்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் 15 நிமிடங்கள் அல்லது அரை மணித்தியாலம் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள், எனவே நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யும் வகையில் பாபாவும் குழந்தைகளாகிய உங்களை 15 நிமிடங்கள் இங்கு அமர வைக்கின்றார். நீங்கள் ஒரு தடவை மாத்திரமே இக்கற்பித்தல்களைப் பெறுகின்றீர்கள், பின்னர் எப்பொழுதும் இதனை நீங்கள் பெற மாட்டீர்கள். சத்தியயுகத்தில் ஆத்ம உணர்வில் இருக்குமாறு உங்களுக்குக் கூறப்பட மாட்டாது. சற்குரு ஒருவர் மாத்திரமே இதனைக் கூறுகின்றார். 'சற்குரு ஒருவரே உங்களை அக்கரைக்குக் கொண்டு செல்கின்றார், ஏனைய அனைவரும் உங்களை மூழ்கடித்து விடுகின்றனர்’ என அவரைப் பற்றிக் கூறப்படுகின்றது. இங்கு, தந்தை உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்குகின்றார். அவரும் ஆத்ம உணர்வுடையவராகவே இருக்கின்றார். உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக அவர் கூறுகின்றார்: நான் ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரதும் தந்தையாவேன். அவர் சரீரமற்றவராகித் தந்தையை நினைவுசெய்ய வேண்டிய அவசியமில்லை. ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் மாத்திரமே அவரை நினைவுசெய்வார்கள். பலர் தங்கள் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக உரியவர்களாக உள்ளனர். இது, மிக நன்றாகப் புரிந்துகொண்டு விளங்கப்படுத்தப்பட வேண்டிய ஒரு விடயமாகும். பரமாத்மா பரமதந்தையே உங்கள் அனைவரதும் தந்தையும், அத்துடன் ஞானம் நிறைந்தவரும் ஆவார். ஆத்மாவிலேயே ஞானம் உள்ளது. ஆத்மாக்களாகிய நீங்கள் சமஸ்காரங்களைக் கொண்டு செல்கின்றீர்கள். தந்தை ஏற்கனவே அந்தச் சமஸ்காரங்களைக் கொண்டிருக்கின்றார். அவரே தந்தை என்பதை நீங்கள் அனைவரும் நம்புகின்றீர்கள். அவர் அந்த உண்மையான ஞானத்தைக் கொண்டிருப்பது அவரிடமுள்ள இன்னுமொரு சிறப்பியல்பாகும். அவரே விதையானவர். தந்தை இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துவதைப் போன்றே, நீங்களும் பின்னர் மற்றவர்களுக்கு அமர்ந்திருந்து விளங்கப்படுத்த வேண்டும். தந்தையே மனித உலகின் விதையானவர், அத்துடன் அவர் சத்தியமானவரும், உணர்வுள்ளவரும், ஞானம் நிறைந்தவரும் ஆவார். அவர் முழு விருட்சத்தினதும் ஞானத்தைக் கொண்டுள்ளார். வேறு எவருமே இந்த விருட்சத்தின் ஞானத்தைக் கொண்டிருக்கவில்லை. பரமாத்மா பரமதந்தை, என அழைக்கப்படுகின்ற தந்தையே அதன் விதையாவார். உதாரணமாக, ஒரு மாமரத்துக்கும் அதுவே பொருந்துகின்றது, அதன் விதையே அம்மரத்தின் படைப்பாளி எனப்படும். விதை தந்தையைப் போன்றதாயினும், அது உணர்வற்றது. அது உணர்வுள்ளதாக இருந்திருந்தால், எவ்வாறு முழு விருட்சமும் தன்னிலிருந்து வெளிப்படுகின்றது என்பதை அது அறிந்திருக்கும், எனினும் அது உணர்வற்றது. அதன் விதை நிலத்திற்கு அடியிலேயே விதைக்கப்படுகின்றது. அவர் உணர்வுள்ள விதையாவார்; அவர் மேலேயே வசிக்கின்றார். நீங்களும் மாஸ்டர் விதைகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் தந்தையிடமிருந்து இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். அவர் அதிமேலானவர். நீங்களும் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். சுவர்க்கத்தில் உங்களுக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்து தேவை. சுவர்க்கத்தில் தேவர்களின் இராச்சியம் இருப்பதை மக்கள் புரிந்துகொள்வதில்லை. இராச்சியத்தில் எவ்வாறு அரசர், அரசி, ஏழைகள், செல்வந்தர்கள், பிரஜைகள் போன்ற அனைவரும் உருவாக்கப்படுவார்கள்? ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகின்றது, யார் அதனை ஸ்தாபிக்கின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். கடவுளே அதனை ஸ்தாபிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, எது நிகழ்ந்தாலும், அது நாடகத் திட்டப்;படியே நிகழ்கின்றது. அனைவரும் நாடகத்தினால் கட்டுண்டுள்ளனர். தந்தையும் கூறுகின்றார்: நான் நாடகத்திற்குக் கட்டுப்பட்டுள்ளேன். நானும் ஒரு பாகத்தைப் பெற்று, அந்தப் பாகத்தை நடிக்கின்றேன். அவர் பரமாத்மா. அவர் பரமதந்தை என அழைக்கப்படுகின்றார். ஏனைய அனைவரும் சகோதரர்கள் எனப்படுகின்றனர். வேறு எவரையும் தந்தை, ஆசிரியர், குரு என அழைக்க முடியாது. அவரே அனைவரதும் பரம தந்தையும், ஆசிரியரும், அத்துடன் சற்குருவும் ஆவார். இவ்விடயங்கள் மறக்கப்படக்கூடாது. எவ்வாறாயினும், சில குழந்தைகள் மறந்து விடுகின்றனர். ஏனெனில், நீங்கள் செய்கின்ற முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாகவே இராச்சியம் ஒன்று ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு முயற்சி செய்கின்றீர்கள், நீங்கள் தந்தையை நினைவுசெய்கின்றீர்களா, இல்லையா, ஆத்ம உணர்வுள்ளவர் ஆகுகின்றீர்களா, இல்லையா என்பது விரைவில் புலப்படுகின்றது. ஒருவர் ஞானத்தில் திறமைசாலியா என்பதை, அவரின் செயற்பாடுகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும். நேரடியாகக் கூறினால் எவராவது உணர்வற்றவராகி, பாபா என்ன கூறினார், மற்றவர்கள் என்ன கூறுவார்கள் எனக் குழப்பமடைவார் என்பதால், தந்தை எவருக்கும் எதனையும் நேரடியாகக் கூறுவதில்லை. இன்னார் இன்னார் எவ்வாறு சேவை செய்கின்றார் என்பதைத் தந்தையால் கூறமுடியும். அனைத்தும் சேவையிலேயே தங்கியுள்ளது. தந்தையும் வந்து சேவை செய்கின்றார். குழந்தைகளே தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நினைவு என்ற பாடம் சிரமமானது. தந்தை உங்களுக்கு யோகத்தையும், ஞானத்தையும் கற்பிக்கின்றார். ஞானம் மிக இலகுவானது; நினைவிலேயே குழந்தைகள் தோல்வியடைகின்றனர்; அவர்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகுகின்றனர். பின்னர் அவர்கள் இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கின்றனர்: நான் இதனை விரும்புகின்றேன், நான் இச்சிறந்த பொருளை விரும்புகின்றேன். தந்தை கூறுகின்றார்: இங்கே, நீங்கள் வனவாசத்தில் உள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது ஓய்வு ஸ்திதிக்குச் செல்ல வேண்டும். எனவே நீங்கள் அவ்வாறான (விலையுயர்ந்த) எதனையும் அணிய முடியாது. நீங்கள் இப்பொழுது வனவாசத்தில் உள்ளீர்கள். நீங்கள் உலகியல் பொருட்கள் எதனையாவது வைத்திருந்தால், அவை உங்களை ஈர்க்கும். உங்கள் சரீரங்களும் உங்களை ஈர்த்து, மீண்டும் மீண்டும் உங்களைச் சரீர உணர்வுக்குக் கொண்டு வரும். இதற்கு முயற்சி தேவை. முயற்சி செய்யாமல் உங்களால் உலக இராச்சியத்தைப் பெற முடியாது. நீங்கள் முயற்சி செய்வதுடன், கல்பம் கல்பமாகத் தொடர்ந்தும் வரிசைக்கிரமமாக முயற்சி செய்வீர்கள். பெறுபேறுகள் தொடர்ந்தும் வெளிப்படுத்தப்படும். ஒரு பாடசாலையிலும் மாணவர்கள் வரிசைக்கிரமமாகவே மாற்றப்படுவார்கள். இன்னார் சிறந்த முயற்சி செய்துள்ளார் என்பதை ஓர் ஆசிரியர் புரிந்துகொள்வார். அவர் மற்றவர்களுக்குக் கற்பிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார்; அவர் அந்த உணர்வைக் கொண்டுள்ளார். அங்கே, அவர்கள் ஒரு வகுப்பிலிருந்து மறு வகுப்பிற்கு மாற்றப்பட்டு, பின்னர் இரண்டாவதற்கும், மூன்றாவதற்கும் செல்வார்கள். இங்கே, நீங்கள் ஒரு தடவை மாத்திரமே கற்க வேண்டும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, எந்தளவிற்கு நெருக்கமாக வருகின்றீர்களோ, அதற்கேற்ப அனைத்தும் வெளிப்படுத்தப்படும். நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது நீங்கள் நிச்சயமாக உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். சிலர் அரசர்கள், அரசிகளாகவும், சிலர் வேறொன்றாகவும் ஆகுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரஜைகள் பலரும் உருவாக்கப்படுகின்றார்கள். அனைத்தையும் அவர்களின் செயற்பாடுகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்: இவர் எந்தளவிற்குச் சரீர உணர்வில் இருக்கின்றார்? இவர் தந்தை மீது எந்தளவிற்கு அன்பு கொண்டிருக்கின்றார்? நீங்கள் சகோதரர்களில் அன்றி, தந்தை மீது மாத்திரமே அன்பு கொண்டிருக்க வேண்டும். நீங்கள் சகோதரர்களில் அன்பு கொண்டிருப்பதால் எதனையும் பெற மாட்டீர்கள். நீங்கள் அனைவரும் தந்தை ஒருவரிடமிருந்தே உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதுவே பிரதான விடயம். நீங்கள் நினைவின் மூலம் பலத்தைப் பெறுவீர்கள். நாளுக்கு நாள், உங்கள் மின்கலம் தொடர்ந்தும் சக்தியூட்டப்படும். ஏனெனில் நீங்கள் தொடர்ந்தும் ஞானத்தைக் கிரகிக்கின்றீர்கள்; அம்பு தொடர்ந்தும் எய்யப்படுகின்றது. நாளுக்கு நாள் நீங்கள் செய்கின்ற முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக, தொடர்ந்தும் முன்னேறுகின்றீர்கள். அந்த ஒரேயொருவர் மாத்திரமே நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கான கற்பித்தல்களைக் கொடுக்கின்ற தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். வேறு எவராலும் இக்கற்பித்தல்களைக் கொடுக்க முடியாது; அவர்கள் அனைவரும் சரீர உணர்வுடையவர்கள். எவருமே எவ்வாறு ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவது எனும் ஞானத்தைப் பெறுவதில்லை. எந்த மனிதரும் தந்தையாகவோ, ஆசிரியராகவோ, அல்லது குருவாகவோ இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்தப் பாகத்தை நடிக்கின்றார்கள். நீங்கள் தொடர்ந்தும் இதனைப் பற்றற்ற பார்வையாளர்களாக அவதானிக்கின்றீர்கள். நீங்கள் முழு நாடகத்தையும் பற்றற்ற பார்வையாளர்களாக அவதானிக்கிறீர்கள். நீங்கள் செயற்படவும் வேண்டும். தந்தையே படைப்பவரும், இயக்குனரும், நடிகரும் ஆவார். சிவபாபா வந்து செயற்படுகின்றார். அவரே அனைவரதும் தந்தையாவார். அவர் வந்து புத்திரர்கள், புத்திரிகள் அனைவருக்கும் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அவர் மாத்திரமே தந்தையாவார், ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். தந்தை ஒருவரிடமிருந்து மாத்திரமே இந்த ஆஸ்தி பெறப்படுகின்றது. நீங்கள் இவ்வுலகம் பற்றிய எதனையும் உங்கள் புத்தியில் வைத்திருப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் காண்பவை அனைத்தும் அழியக்கூடியவை. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். அவர்கள் பிரம்ம தத்துவத்தை நினைவுசெய்கின்றார்கள், அதாவது, வீட்டை நினைவுசெய்கின்றார்கள். தாங்கள் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலந்துவிடுவார்கள் என அம்மக்கள் நம்புகின்றார்கள். அது அறியாமை எனப்படுகின்றது. முக்தியையும், ஜீவன்முக்தியையும் பற்றி மக்கள் கூறுகின்ற அனைத்தும் தவறானவை. அவர்கள் உருவாக்குகின்ற வழிமுறைகள் அனைத்தும் தவறானவை. ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்குச் சரியான பாதையைக் காட்டுகின்றார். தந்தை கூறுகின்றார்: நாடகத்திட்டப்படி நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குகின்றேன். சிலர் கூறுகின்றனர்: இது எங்கள் புத்தியில் பதிவதில்லை. பாபா, எங்களை வாயைத் திறக்கச் செய்யுங்கள்! இந்தக் கருணையைக் காட்டுங்கள்! தந்தை கூறுகின்றார்: இதிலே பாபா எதனையேனும் செய்வார் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் என்பதே பிரதான விடயம். தந்தையிடமிருந்து மாத்திரமே நீங்கள் சரியான வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். மனிதர்களின் வழிகாட்டல்கள் அனைத்தும் தவறானவை, ஏனெனில் அனைவரும் தங்களுக்குள் ஐந்து விகாரங்களையும் கொண்டுள்ளனர். நீங்கள் தொடர்ந்து கீழிறங்கும்பொழுது, தொடர்ந்தும் தவறானவர்கள் ஆகுகின்றீர்கள். மக்கள் தொடர்ந்தும் எவ்வளவு மாயாஜால சக்திகளைப் பயன்படுத்துகின்றார்கள் எனப் பாருங்கள். அதில் எந்தச் சந்தோஷமும் கிடையாது. அவையனைத்தும் தற்காலிகமான சந்தோஷமே என்பதை நீங்கள் அறிவீர்கள். அது காக்கையின் எச்சம் போன்ற சந்தோஷம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் ஏணியினதும், விருட்சத்தினதும் படங்களை மிக நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் எச்சமயத்தையும் சேர்ந்த எவருக்கும் இவ்வாறு விளங்கப்படுத்தலாம்: உங்கள் சமய ஸ்தாபகர் இந்த நேரத்தில் வருகின்றார். கிறிஸ்து இந்த நேரத்தில் வருவார். ஏனைய சமயங்களுக்கு மாற்றப்பட்டவர்கள், இந்தத் தர்மத்தை விரும்பி உடனடியாகவே இங்கு வருவார்கள். ஏனையோர் இதனை விரும்ப மாட்டார்கள். எனவே, அவர்களால் எவ்வாறு முயற்சி செய்ய முடியும்? மனிதர்கள் மனிதர்களைத் தூக்கிலிடுகின்றார்கள். ஆனால் நீங்களோ தந்தை ஒருவரின் நினைவில் இருக்க வேண்டும். இவை மிக இனிமையான தூக்கு மேடைகளாகும். ஆத்மாவின் புத்தி தந்தையுடனான யோகத்தில் இணைக்கப்படுகின்றது. ஆத்மாவிற்குத் தந்தையை நினைவுசெய்யுமாறு கூறப்படுகின்றது. இவை நினைவு என்ற தூக்கு மேடையாகும். தந்தை மேலே வசிக்கின்றார். நாங்கள் ஆத்மாக்கள் என்பதையும், தந்தையை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இச்சரீரங்கள் இங்கேயே துறக்கப்பட வேண்டும். உங்களிடம் இந்த ஞானம் முழுவதும் உள்ளது. நீங்கள் இங்கு அமர்ந்திருந்து என்ன செய்கின்றீர்கள்? நீங்கள் சத்தத்திற்கு அப்பால் செல்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: அனைவரும் என்னிடம் வர வேண்டும். எனவே, அவரே மகா காலன். அந்த மரணம் ஒருவரை மாத்திரமே கொண்டு செல்கின்றது. உண்மையில் அந்த மரணம் எவரையும் வந்து அழைத்துச் செல்கின்ற ஒரு நபர் அல்ல. அவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆத்மா தனக்குரிய நேரத்தில் தானாகவே சரீரத்தை விட்டுச் செல்வார். இத்தந்தை சகல ஆத்மாக்களையும் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்கின்றார். எனவே, உங்கள் அனைவரினதும் புத்தியின் யோகம் வீடு திரும்புவதிலேயே இருக்க வேண்டும். உங்கள் சரீரத்தை நீக்குவதே மரணித்தல் எனப்படுகின்றது. சரீரம் மரணிக்கும்பொழுது, ஆத்மா பிரிந்து செல்கின்றார். இதனாலேயே நீங்கள் தந்தையை அழைக்கின்றீர்கள்: பாபா, வந்து எங்களை இவ்வுலகிலிருந்து அப்பால் அழைத்துச் செல்லுங்கள். இனிமேலும் நாங்கள் இங்கு வாழ விரும்பவில்லை. இப்பொழுது, நாடகத் திட்டப்;படி நாங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். மக்கள் கூறுகின்றார்கள்: பாபா, இங்கு எல்லையற்ற துன்பமே உள்ளது. நாங்கள் இனிமேலும் இங்கு வாழ விரும்பவில்லை. இது மிக அழுக்கான உலகமாகும். அனைவரும் நிச்சயமாக மரணிக்க வேண்டும். இது அனைவரினதும் ஓய்வு பெறும் ஸ்திதியாகும். நீங்கள் இப்பொழுது சத்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும். மரணம் உங்களிடம் வராது. நீங்கள் சந்தோஷமாகவே செல்கிறீர்கள். சமயநூல்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை, அவை மீண்டும் தோன்றும். இவை நாடகத்தில் உள்ள மிக அற்புதமான விடயங்களாகும். இந்நேரத்தில் நீங்கள் காண்கின்ற இந்தப் பதிவுநாடா, கடிகாரம் போன்ற அனைத்தும் மீண்டும் தோன்றும். இது பற்றிக் குழப்பமடைய வேண்டியதில்லை. உலக வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றது என்றால், அதேபோன்று மீண்டும் இடம்பெறுவதாகும் என்றே அர்த்தமாகும். நீங்கள் மீண்டும் ஒரு தடவை தேவர்கள் ஆகுகின்றீர்கள், நீங்கள் மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுவீர்கள் என்பதை அறிவீர்கள். இதில் சிறிதளவு வேறுபாடும் இருக்க முடியாது. நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் எல்லையற்ற தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மனிதர் எவரும் அவ்வாறு இருக்க முடியாது. நீங்கள் இவரை பாபா என்று அழைக்கின்றீர்கள், இவரை பிரஜாபிதா பிரம்மா என்றும் அழைக்கின்றீர்கள். இவரும் கூறுகின்றார்: நீங்கள் என்னிடமிருந்து ஆஸ்தி எதனையும் பெற மாட்டீர்கள். பாபு காந்திஜி மக்களின் தந்தையாக இருக்கவில்லை. தந்தை கூறுகின்றார்: இவ்விடயங்கள் பற்றிக் குழப்பம் அடையாதீர்கள். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் பிரம்மாவைக் கடவுள் என்றோ அல்லது தேவர் என்றோ அழைப்பதில்லை. முழு உலகையும் தூய்மையாக்குவதற்கு, இவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில், இவரது ஓய்வு ஸ்திதியில் தான் இவரினுள் பிரவேசிப்பதாகத் தந்தை எங்களுக்குக் கூறியுள்ளார். விருட்சத்தின் படத்தில், அவர் எவ்வாறு உச்சியிலே நின்றுகொண்டிருக்கின்றார் எனப் பாருங்கள். அனைவரும் இப்பொழுது முற்றிலும் சீரழிந்த, தங்கள் தமோபிரதான் ஸ்திதியில் உள்ளனர். இவரும் தமோபிரதான் ஸ்திதியில் இருப்பதுடன், அந்த அதே சாயல்களையே கொண்டிருக்கின்றார். தந்தை அவரினுள் பிரவேசித்து, அவருக்கு பிரம்மா எனப் பெயரிடுகின்றார். இல்லாவிடில், பிரம்மா என்ற பெயர் எங்கிருந்து வருகின்றது எனக் கூறுங்கள் பார்ப்போம்? இவர் தூய்மையற்றவர், அவர் தூய்மையானவர். அந்தத் தூய தேவர்கள் 84 பிறவிகள் எடுத்துத் தூய்மையற்ற மனிதர்கள் ஆகுகின்றனர். இவர் ஒரு மனிதனிலிருந்து தேவராக மாறப் போகின்றார். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவது தந்தையின் கடமையாகும். இவையனைத்தும், புரிந்துகொள்ளப்பட வேண்டிய அற்புதமான விடயங்கள். இவர் (பிரம்மா) ஒரு விநாடியில் அவர் (விஷ்ணு) ஆகுகின்றார், பின்னர் 84 பிறவிகள் எடுத்தே மீண்டும் இவர் (பிரம்மா) ஆகுகின்றார். தந்தை இவரினுள் பிரவேசித்து இவருக்குக் கற்பிக்கின்றார். நீங்களும் கற்கின்றீர்கள்; அவரது வம்சமும் உள்ளது. இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும், இராதை கிருஷ்ணருக்கும் ஆலயங்கள் உள்ளன. எவ்வாறாயினும், இராதையும் கிருஷ்ணரும் முதலில் இளவரசியாகவும் இளவரசராகவும் இருந்து, பின்னர் இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றார்கள் என்பதை எவரும் அறியார். இவர் ஒரு பிச்சைக்காரனிலிருந்து இளவரசராகுவார். இளவரசர் பின்னர் பிச்சைக்காரர் ஆகுகின்றார். இவை அத்தகைய இலகுவான விடயங்கள்! 84 பிறவிகளின் கதை இவ்விரு படங்களிலும் உள்ளது. இவரே அவ்வாறு ஆகுகின்றார். தம்பதிகளாக இருப்பதனால், அவர்கள் அவரை நான்கு கரங்களுடன் காட்டுகின்றார்கள்; இது இல்லறப் பாதையாகும். சற்குரு ஒருவர் மாத்திரமே உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றார். தந்தை உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். ஆனால் உங்களுக்குப் பின்னர் தெய்வீகக் குணங்களும் தேவை. நீங்கள் ஒரு கணவனிடம் அவரது மனைவியைப் பற்றியோ அல்லது மனைவியிடம் அவளது கணவனைப் பற்றியோ கேட்டிருந்தால், அவர்கள் ஒவ்வொருவரும் உடனடியாகவே மற்றவரிடமுள்ள குறைபாடுகளைப் பற்றிக் கூறியிருப்பார்கள். இவர் என்னை இவ்விதமாகத் தொந்தரவு செய்கின்றார் என்றோ அல்லது தாங்கள் இருவருமே நன்றாக இருப்பதாகவோ அவர்கள் கூறுவார்கள், அல்லது அவர்கள் கூறுவார்கள்: நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் தொந்தரவு செய்வதில்லை, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவியாக சகபாடிகளாக முன்னேறுகின்றோம். சிலர் மற்றவரைக் கீழே விழுத்த முயற்சி செய்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்கள் சுபாவத்தை மிக நல்லதாக மாற்ற வேண்டும். அவர்கள் அனைவரும் அசுர சுபாவங்களைக் கொண்டுள்ளனர். தேவர்கள் தெய்வீக சுபாவங்களைக் கொண்டுள்ளனர். நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் அறிவீர்கள். அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றதில்லை. எவ்வாறு பழைய உலகத்தவர்களால் புதிய உலகத்தவர்களைச் சந்தித்திருக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: மக்கள் கடந்த காலத்தில் நடைபெற்ற விடயங்களைப் பற்றி அமர்ந்திருந்து எழுதியுள்ளார்கள், அவை கதைகள் எனப்படுகின்றன. பண்டிகைகள் போன்ற அனைத்தும் இந்நேரத்தையே குறிக்கின்றன. அவர்கள் துவாபர யுகத்திலிருந்து அவற்றைக் கொண்டாடி வருகின்றனர். அவை சத்தியயுகத்தில் கொண்டாடப்படுவதில்லை. இவ்விடயங்கள் அனைத்தும் புத்தியினால் புரிந்துகொள்ளப்பட வேண்டும். சரீர உணர்வு காரணமாக, குழந்தைகள் பல கருத்துக்களை மறந்து விடுகின்றார்கள். ஞானம் இலகுவானது. ஏழு நாட்களில் முழு ஞானத்தையும் கிரகிக்க முடியும். அனைத்திற்கும் முதலில், நினைவு யாத்திரையில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த எல்லையற்ற நாடகத்தில் நடிக்கும்பொழுது, முழு நாடகத்தையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக அவதானியுங்கள். அதனையிட்டுக் குழப்பமடையாதீர்கள். இவ்வுலகில் எதையாவது பார்க்கும்பொழுதும், உங்கள் புத்தி அதனை நினைவுசெய்வதற்கு அனுமதிக்காதீர்கள்.

2. உங்கள் அசுர சுபாவத்தை மாற்றி, தெய்வீக சுபாவத்தைக் கிரகியுங்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும்பொழுது, ஒருவருக்கொருவர் உதவியாளர்கள் ஆகுங்கள். எவரையும் விரக்தியடையச் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:
சகல சக்திகளும் உங்களில் வெளிப்பட்டதாக இருப்பதை அனுபவம் செய்து, வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

உலக மக்களிடம் செல்வம், அவர்களின் புத்திகள், அவர்களின் உறவுமுறைகளும் தொடர்புகளும் என்ற ஏதாவதொரு ரூபத்தில் சக்தி உள்ளது. ஆகவே, அது பெரிய விடயம் அல்ல என அவர்கள் நம்புகிறார்கள். அந்தச் சக்தியின் அடிப்படையில், அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். உங்களிடம் சகல சக்திகளும் உள்ளன: உங்களுடன் சதா அழியாத செல்வத்தின் சக்தி உள்ளது, உங்களின் புத்தியின் சக்தி உள்ளது, அத்துடன் உங்களின் பதவியின் சக்தியும் உள்ளது. உங்களிடம் சகல சக்திகளும் உள்ளன. அவை உங்களுக்குள் வெளிப்பட்டிருப்பதை அனுபவம் செய்யுங்கள். சரியான வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அந்த வேளையில் வெற்றி பெறுவீர்கள். அதனால் வெற்றி சொரூபம் ஆகுவீர்கள்.

சுலோகம்:
எப்போதும் உங்களின் மனதை இறை சொத்தாகக் கருதி, அதை மேன்மையான பணிகளுக்காகப் பயன்படுத்துங்கள்.