28.10.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, பாபா மிகவும் தொலைதூரத்தில் இருந்து உங்களுக்குக் கற்பிப்பதற்காக வருகின்றார். இக்கல்விக்காக அவர் எந்தக் கட்டணமும் அறவிடுவதில்லை. ஆகையால், நீங்கள் அதிகளவு அன்புடன் கற்க வேண்டும்.
கேள்வி:
ஆன்மீக அரசாங்கம்; இந்தப் பாடசாலையை முழு உலகிலும் இலவசமாகத் திறந்திருப்பது ஏன்?பதில்:
அனைவருமே அநாதைகள் ஆகியுள்ளதால். அத்தகைய ஏழைக் குழந்தைகளிடம் தந்தையால் எவ்வாறு கட்டணம் அறவிட முடியும்? உங்களை உலக அதிபதிகள் ஆக்கக் கூடியதொரு கல்வியை இந்த இறுதிப் பிறவியில் தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். இங்கு கற்க வருகின்ற புதிய குழந்தைகளும் எந்த இழப்பையும் அனுபவம் செய்வதில்லை. அவர்கள் தாமதித்து வந்திருந்தாலும், அவர்கள் மேலும் முயற்சி செய்து பழையவர்களை விட முந்திச் செல்ல முடியும்.பாடல்:
விழித்தெழுங்கள்! ஓ மணவாட்டிகளே, விழித்தெழுங்கள்! புதிய நாள் விடிய உள்ளது.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளான நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். ஆன்மீகத் தந்தை குழந்தைகளாகிய உங்களை இங்கு ஆத்ம உணர்வுடன் அமர்ந்திருக்குமாறு கூறியுள்ளார். பரமாத்மாவான பரமதந்தையும், குழந்தைகளாகிய நீங்களும் இப்பொழுது ஒருவரையொருவர் சந்தித்துள்ளீர்கள். இதுவே பௌதீகமான உலகில் நடைபெறுகின்ற, ஆத்மாக்களுக்கும், பரமாத்மாவான பரமதந்தைக்குமான சந்திப்பு என்று அழைக்கப்படுகின்றது. இந்தச் சந்திப்பு ஒருமுறை மாத்திரமே இடம்பெறுகின்றது. சத்தியயுகத்திலோ, திரேதாயுகத்திலோ அரைக்கல்பத்திற்கு எவருமே அவரை அழைப்பதில்லை. அங்கே குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்கள், நீங்கள் அந்தச் சந்தோஷத்தை இப்பொழுது பெறுகின்றீர்கள். முதன்முதலில் நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், அதன் பின்னர் இப்பொழுது நீங்கள் தமோபிரதானாகவும் தூய்மை அற்றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். தந்தை மீண்டும் ஒருமுறை உங்களைத் தூய்மை ஆக்குகின்றார். நீங்கள் பூஜிப்பவர்கள் ஆகும்பொழுது, சந்தோஷத்தை இழக்கின்றீர்கள். ஐந்து விகாரங்களினாலேயே நீங்கள் துன்பத்தை அனுபவம் செய்கின்றீர்கள். நீங்கள் ஏணியில் தொடர்ந்தும் கீழிறங்கும் பொழுது, தொடர்ந்தும் அதிகத் துன்பத்தை அனுபவம் செய்கின்றீர்கள். இப்பொழுது துன்ப மலைகள் விழ உள்ளன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்தப் பழைய உலகம் இப்பொழுது அழிவடைய உள்ளது. பாபா அசரீரியானவர் என்பதை உங்கள் புத்தி அறிந்துள்ளது. அவர் ஆசிரியராகி, சாலிகிராம்களான எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்காக மீண்டும் ஒருமுறை வந்துள்ளேன். 5000 வருடங்களின் முன்னரும் நீங்களே சுவர்க்க அதிபதிகளாக இருந்தீர்கள். உங்களுக்கு அது ஞாபகம் உள்ளதா? நீங்கள் சங்கமயுகத்திலேயே அவ்வாறு ஆக்கப்பட்டீர்கள். நான் இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாகவும், சுவர்க்கமான, வைகுந்தத்தின் அதிபதிகளாகவும் மாற்றுவதற்கு வந்துள்ளேன். நான் உங்களுக்கு இந்த ஆஸ்தியைக் கொடுத்தேன், அதன்பின்னர் நீங்கள் 84 பிறவிகளை எடுக்க நேர்ந்தது. இப்பொழுது உங்கள் 84 பிறவிகளும் முடியும் தறுவாயில், நான் வந்துள்ளேன். பின்னர் உங்கள் முதல் பிறவியிலிருந்து நீங்கள் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். நான் உங்கள் தந்தை, அத்துடன் நான் உங்களுக்குக் கற்பிக்கின்றேன். தனது சொந்தக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்குத் தந்தை கட்டணம் அறவிட முடியுமா? தனது குழந்தைகளிடம் இருந்து அவரால் எவ்வாறு கட்டணம் அறவிட முடியும்? கட்டணமாக ஒரு சதத்தையேனும் அவர் வாங்குவதில்லை. அவர் மிகவும் தொலைதூரத்தில் இருந்து, அதாவது, பரந்தாமத்தில் இருந்து உங்களுக்குக் கற்பிப்பதற்காக வருகின்றார். நான் ஒவ்வொரு நாளும் இந்தத் தொழிலைச் செய்வதற்காக வருகின்றேன். ஒருவரது வேலைத்தலம் தொலைவில் இருந்தால், அவர் ஒவ்வொரு நாளும் பயணிக்க வேண்டும். பாபா ஞானக்கடல் என்பதையும், அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தை எங்களுக்குக் கொடுக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். கடவுள் பேசுகின்றார்: அசரீரியான நானே பரமாத்மா, ஸ்ரீ கிருஷ்ணரல்ல. நீங்கள் கடவுள் என்று கருதுகின்ற ஸ்ரீகிருஷ்ணர் கடவுளாக இருக்க முடியாது. அவர் முழுமையான 84 பிறவிகளையும் எடுக்கின்றார். கடவுளுக்கெனச் சொந்தமாகச் சரீரம் ஒன்றில்லை. நீங்கள் ஆத்மாக்கள் என்பதைப் போன்றே, அவரும் ஆத்மாவே. எவ்வாறாயினும், நீங்கள் அவரை ஆத்மா என்று மாத்திரம் அழைத்தால், அவர் ஏனைய அனைவரையும் போன்றவர் ஆகிவிடுவார். இதனாலேயே நான் பரமாத்மா என்று அழைக்கப்படுகின்றேன். நாடகத் திட்டப்படி, ஆத்மாவான எனது பெயர் சிவன் ஆகும். நான் அசரீரியானவர். நான் சிவபாபா என்று அழைக்கப்படுகின்றேன். உண்மையில், எனக்கு ஒரேயொரு பெயரே உள்ளது, ஆனால் அவர்கள் எனக்குப் பல்வேறு பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். எனது பெயர் உருத்திரன் அல்ல. ஸ்ரீகிருஷ்ணரால் யாகம் வளர்க்கப்படவில்லை. அவை அனைத்தும் பொய்களே. நான் மாத்திரமே வந்து, உங்களுக்கு உண்மையைக் கூறுகின்றேன். நான் உண்மையிலேயே உங்களைச் சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆக்குவதற்கு வந்துள்ளேன். எனது வீடு மிகவும் தொலைவில் உள்ளது. நான் வந்து, இந்தச் சரீரத்தின் மூலம் உங்களுக்குக் கற்பிக்கின்றேன். நான் நாள் முழுவதும் இவரின் சரீரத்தில் அமர்ந்திருப்பதில்லை. நான் தொடர்ந்தும் எங்கும் பயணிக்கின்றேன். நீங்கள் என்னை இகழ்ந்ததால், மிகவும் சந்தோஷம் அற்றவர்களாகவும் மிகவும் தூய்மை அற்றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். சிலர் பிரம்மாவை ஆதிதேவர் என்றும், சிலர் அவரை ஆதாம் என்றும், சிலர் அவரை மகாவீர் என்றும் அழைக்கின்றார்கள். நீங்கள் அவரைப் பிரஜாபிதா என்று அழைக்கின்றீர்கள். நீங்கள் என்னை அரைக்கல்பமாக நினைவு செய்ததாலேயே, நான் இந்த அந்நிய நாட்டிற்கு வந்துள்ளேன். அனைவரும் தூய்மை அற்றவர்களாகவும் சந்தோஷம் அற்றவர்களாகவும் உள்ளார்கள். அனைவரும் அநாதைகள்; உங்களுக்குப் பிரபுவோ அதிபதியோ இல்லை. அநாதைகளுக்குக் கற்பிப்பதற்கு, அரசாங்கம் எந்தக் கட்டணத்தையும் அறவிடுவதில்லை. இந்த ஆன்மீக அரசாங்கம் மிகவும் பெரியது. எவருக்கும் எல்லையற்ற தந்தையைத் தெரியாது. அவர்கள் அதிகளவு ஓதுகின்றார்கள், தபஸ்யா செய்கின்றார்கள், தான தர்மங்கள் செய்கின்றார்கள். அவற்றை ஏன் நீங்கள் செய்கின்றீர்கள் என்று அவர்களிடம் வினவினால், அவை அனைத்தையும் செய்வதனால், தாங்கள் கடவுளை அடைவார்கள் என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஓதுவதாலும், தபஸ்யா செய்வதாலும் சிலர் அங்கு சென்றடைவார்கள் என்றும், சமயநூலைக் கற்பதால் ஏனையோர் அங்கு சென்றடைவார்கள் என்றும் அவர்கள் நம்புகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அது அவ்வாறில்லை. பக்தி செய்வதனால் நீங்கள் மேலும் அதிகம் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். உங்கள் இறக்கைகள் துண்டிக்கப்பட்டதால், நீங்கள் இந்த ஞான எண்ணெயைப் பெறும்வரை, உங்களால் பறக்க முடியாதுள்ளது. எண்ணெய், அதாவது, பெற்றோல் இப்பொழுது முடிவடைந்து விட்டதால், ஒளி அணைக்கப்பட்டுள்ளது. நான் வந்து உங்களை மீண்டும் நிரப்புகின்றேன். பாபா வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கே நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் வீடு திரும்பியதுமே, மறந்து விடுகின்றீர்கள். நான் உங்களிடம் இருந்து இக்கல்விக்கு எந்தக் கட்டணமும் அறவிடுவதில்லை. நீங்கள் ஒரு கைப்பிடி அரிசி கொடுப்பதாகக் கூறுகின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் ஒரு கைப்பிடி அரிசியைக் கொடுத்து, அதற்கான பிரதிபலனை அடுத்த பிறவியில் பெறுவதாக நீங்கள் கூறுகின்றீர்கள். தந்தை இப்பொழுது உங்கள் முன்னிலையில் அமர்ந்திருந்து, எந்தக் கட்டணமும் அறவிடாது உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை அறிவீர்கள். உங்களிடம் எதுவுமே இல்லை என்பது தந்தைக்குத் தெரியும் என்பதனால் எவ்வாறு அவரால் உங்களிடமிருந்து எதனை அறவிட முடியும்? அக்கல்விகளில் நீங்கள் அதிகளவு செலவிட வேண்டும். நீங்கள் பல பரீட்சைகளிலும் சித்தியெய்த வேண்டியுள்ளது. நான் உங்களுக்கு ஒரேயொரு கல்வியை மாத்திரமே கற்பிக்கின்றேன். பாடசாலைக்குப் புதியவர்கள் வரும்பொழுது, நான் அவர்களையும் தொடர்ந்தும் சேர்த்துக் கொள்கின்றேன். ஆம், சற்றுத் தாமதமாக வந்தவர்கள் இன்னமும் சிறிதளவு முயற்சி செய்ய வேண்டும். அதற்குப் பிரதிபலனாகத் தாமதமாக வந்தவர்கள், பல நல்ல கருத்துக்களைப் பெறுகின்றார்கள். விரைவாகக் கற்பவர்கள் எந்த இழப்பையும் அனுபவிப்பதில்லை. அவர்கள் பல நல்ல, புதிய கருத்துக்களைப் பெறும்பொழுது, பழையவர்களையும் முந்திச் செல்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: ஆரம்பத்தில் வந்த பலரும் இப்பொழுது ஓடிவிட்டார்கள். நீங்கள் தாமதித்து வந்ததும் நல்லதே, ஏனெனில் நீங்கள் அனைத்திலும் மிகவும் ஆழமான கருத்துக்களைத் தொடர்ந்தும் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உலகக் கல்வியையும் கற்றிடுங்கள். உங்கள் சரீரத்தின் வாழ்வாதாரத்திற்காக உங்கள் வியாபாரங்கள் போன்றவற்றில் ஈடுபடலாம். ஆனால் என்னை நினைவு செய்வதுடன், சக்கரத்தையும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் இதனை மறக்கக்கூடாது. இப்பொழுது இது உங்கள் 84 பிறவிகளின் இறுதி என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். உங்கள் தந்தையையும், உங்கள் கணவனையும் நீங்கள் நினைவு செய்கின்றீர்கள். நான் இப்பொழுது கணவர்களுக்கு எல்லாம் கணவனாகவும், தந்தைகளுக்கு எல்லாம் தந்தையாகவும், உங்கள் ஆசிரியராகவும் உள்ளேன். உங்களுக்கு அனைத்தும் நானே. நான் உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றேன். அந்தத் தூய்மையற்ற உறவினர்கள் உங்களுக்குத் துன்பத்தையே ஏற்படுத்துகிறார்கள். சத்தியயுகத்தில் எவருமே எவருக்கும் துன்பத்தை விளைவிப்பதில்லை. நான் இப்பொழுது உங்கள் சத்தியயுக இராச்சிய பாக்கியத்தைக் கொடுப்பதற்கே வந்துள்ளேன். சங்கமயுகத்தில் மாத்திரமே தந்தையிடம் இருந்து இந்த ஆஸ்தியை நீங்கள் பெறுகின்றீர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் எவ்வளவு கற்கின்றீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. இந்தக் கல்வி மிகவும் இலகுவானது. இது இலகு ஞானமும், இலகு நினைவும் ஆகும். மரணம் முன்னிலையிலேயே உள்ளது. நான் உங்கள் அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்லவே வந்திருக்கின்றேன், இதனாலேயே நான் மகாமரணம் என்றும் அழைக்கப்படுகின்றேன். ‘மரணம் அவரை எடுத்துச் சென்று விட்டது’ என்றும் கூறப்படுகின்றது. மரணம் சரீரத்திற்கே வருகின்றதே, அன்றி ஆத்மாவிற்கு அல்ல. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கின்றார். ஓர் ஆத்மா தனது பாகத்தை நடிக்கின்றார். இப்பொழுது இவை அனைத்துமே ஒரே அடியில் முடியவுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். எவருமே எவரது மரணத்திற்காக அழ முடியாத அளவிற்கு அத்தகைய மரணங்கள் இடம்பெறும். அனைவருமே வீடு திரும்ப வேண்டும். துன்ப உலகில் மீண்டும் மீண்டும் மறுபிறப்பு எடுக்கும் பொழுது, மக்கள் அழுகின்றார்கள். வந்து உங்களைத் திரும்பவும் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு நீங்கள் தந்தையை அழைக்கின்றீர்கள். இப்பொழுது பாபா வந்திருப்பதால், அவர் சகல மனித ஆத்மாக்களையும் திரும்பவும் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். விநாசம் இடம்பெறும் பொழுது, அனைவரும் மரணிப்பார்கள்; எவருமே எஞ்சியிருக்க மாட்டார்கள். அரசாங்கம் தனது சொந்தத் திட்டத்தை வகுக்கின்றது. மனித உலகம் தொடர்ந்தும் வளர்கின்றது. சிறிய கொப்புகள், கிளைகள் அனைத்தில் இருந்தும் பல இலைகள் வெளிப்படுகின்றன. விருட்சம் வளரும், ஆனால் அதன் ஆயுளுக்கு ஓர் எல்லை உள்ளது. கல்ப விருட்சத்தின் கால எல்லை நூறாயிரம் ஆண்டுகளாக இருக்க முடியாது. தந்தை உங்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்கள் ஆக்குவதற்காகவே இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தை வந்து உங்களையே முதன்முதலில் சந்திக்கின்றார். ஏனைய சமயத்தினர் இறுதியில், பின்னரே வருகின்றார்கள். நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்கின்றீர்கள். நான் உங்களுக்கே கற்பிக்கின்றேன். நான் உங்களுக்குக் கூறுகின்றேன்: தூய உலகிற்கு நீங்கள் செல்ல விரும்பினால், விகாரத்தில் ஈடுபடாதீர்கள். எனவே, நான் கூறுவதை நீங்கள் ஏன் கேட்கக்கூடாது? உங்களால் நஞ்சு இல்லாமல் இருக்க முடியாதா? நீங்கள் எனது வழிகாட்டல்களைப் பின்பற்றாது விட்டால், உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. கிருஷ்ணரின் உலகிற்குச் செல்வதே உங்கள் விருப்பமாக இருந்தது. எனவே, நீங்கள் ஸ்ரீகிருஷ்ணரின் இராச்சியத்திற்குள் செல்ல விரும்புகின்றீர்களா அல்லது அங்கே பிரஜைகளில் ஒருவராக இருக்க விரும்புகின்றீர்களா? இளவரசர்களும், இளவரசிகளும் மாத்திரமே ஸ்ரீகிருஷ்ணருடன் விளையாட்டுக்களை விளையாடுவார்கள். பிரஜைகள் அவருடன் விளையாட மாட்டார்கள். மம்மாவும், பாபாவும் கற்கின்றார்கள். இராதையும் கிருஷ்ணருமே தங்கள் திருமணத்தின் பின்னர் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இராச்சியத்தில் ஒருவராக ஆகுபவர்களைக் கொண்டே மாலை உருவாக்கப்படுகின்றது. எட்டுப் பேர் அடங்கிய மாலையில் ஒருவர் ஆகுங்கள். எட்டில் ஒருவராக முடியாது விட்டால், குறைந்தபட்சம் 108 மணிமாலையில் ஒருவர் ஆகுங்கள். குறைந்தபட்சம் 16,108 பேரில் ஒருவராகவேனும் ஆகுங்கள். இது இராஜயோகம். நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். உங்கள் குடும்ப அங்கத்தவர்களுக்கும் இதனை விளங்கப்படுத்துங்கள். நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துவதற்காகவே தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பழைய உலகம் அழிய வேண்டும். கடவுள் வந்தபொழுது இடம்பெற்ற மகாபாரத யுத்தமும் மிகவும் பிரபல்யமானது. கடவுள் வந்து உங்களுக்குக் கற்பித்து, சுவர்க்கத்தை ஸ்தாபித்து, நரகத்தை அழித்தார். இது அதே நேரமாகும். இராச்சியம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படும். சத்தியயுகத்தில் வேறு எந்தச் சமயங்களும் இருக்க மாட்டாது. பாரதம் கிரீடமாக இருந்தது, அது செல்வம் மிக்கதாக இருந்தது. இங்கிருந்தே, கிறிஸ்தவர்கள் அதிகளவு செல்வம் நிறைந்தவர்கள் ஆகினார்கள். சோமநாதர் ஆலயத்தில் இருந்து பல ஒட்டகங்களில் செல்வம் எடுத்துச் செல்லப்பட்டது. அது ஓர் ஆலயம் பற்றிய விடயம், பாரதத்தில் பல ஆலயங்கள் உள்ளன. தந்தை உங்களுக்கு முழு விருட்சத்தின் இரகசியங்களையும் கூறுகின்றார். விதையான, நான் மேலே உள்ளேன். இது தலைகீழானதொரு விருட்சம். நான் ஞானம் நிறைந்தவன். ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!’ என்று என்னை நீங்கள் அழைக்கிறீர்கள். இருப்பினும், அவர் பெயருக்கும், வடிவத்திற்கும் அப்பாற்பட்டவர் என்று கூறப்படுகின்றது. இராவணன் அனைவரையும் முற்றிலும் விவேகமற்றவர்கள் ஆக்கியுள்ளான். உங்கள் தந்தை யார் என்பதையும், இச்சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதையும் நீங்கள் இப்பொழுது நினைவு செய்கின்றீர்கள். அனைவரும் ஒரேயளவு புரிந்துணர்வைக் கொண்டிருப்பதில்லை. இரு வேறுபட்டோர் ஒரே புரிந்துணர்வைக் கொண்டிருப்பதில்லை. இருவர் ஒரேமாதிரியான முகச்சாயல்களைக் கொண்டிருக்க முடியாது. ஆகவே, குழந்தைகளான நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள் ஆக வேண்டும். அவரே தந்தையும் ஆசிரியரும் சற்குருவும் ஆவார். அவர் எக்கட்டணத்தையும் அறவிடுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒரு சிப்பியளவு கூட செலவழிக்காமலே 21 பிறவிகளுக்கான இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். பக்திமார்க்கத்தில் நீங்கள் கடவுளின் பெயரைக் கூறி, எதனையோ கொடுத்து, அதற்கான பிரதிபலனை உங்கள் அடுத்த பிறவியில் பெற்றீர்கள். நான் இப்பொழுது வந்து விட்டேன், நான் நேரடியாகவே பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றேன். அதற்கான செலவுகள் அனைத்தும் குழந்தைகளாலேயே செலுத்தப்படுகின்றது. அவர் தனது குழந்தைகளிடம் செலவழிக்குமாறு மட்டுமே கூறுகின்றார். அவர் இந்தப் பிரம்மாவைச் சகல செலவுகளையும் செய்வதற்காக மிகவும் நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொண்டார். அவர் இவருக்குள் பிரவேசித்து, இவரை அனைத்தையும் செய்ய வைத்தார். இவர் (பிரம்மா) விரைவாகத் தன்னை அர்ப்பணித்தார். இவர் தன்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தார். பாபா கூறினார்: ஒரு பிச்சைக்காரன் ஆகினால், உங்களை நான் இவரைப் போன்று இளவரசன் ஆக்குவேன். அவர் பின்னர், இவருக்கு ஒரு காட்சியைக் கொடுத்தார். ஆகவே, அப்பொழுது அவர் சிந்தித்தார்: இவை அனைத்தையும் வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்? விநாசம் இடம்பெற வேண்டும். பாபா கூறினார்: ஒரு குரங்கைப் போன்று உங்கள் கைகளை மூடிக் கொள்ளாதீர்கள்! அதனைத் திறந்து வைத்திருங்கள்! ஆகவே உடனடியாகவே இவர் அதனைத் திறந்தார். வேறு எவ்வாறு இந்தக் குழந்தைகள் அனைவருக்குமான செலவுகளைச் செய்ய முடியும்? குழந்தைகள் சக்கரவர்த்திகளாகவும், மூதாதை ஆலோசகராகவும் ஆகினார். பணம் செலவழிக்கக்கூடிய ஒருவரையே அவர் பிடித்துக் கொண்டார் என்பதே இதன் அர்த்தம். ஒரு பத்தி (சூளை) குழந்தைகளாகிய உங்களுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு பாடசாலையும் திறக்கப்பட்டது. நீங்கள் இப்பொழுது திறமைசாலிகளாக இருப்பதுடன், பிறருக்கும் கற்பிக்கின்றீர்கள். நீங்கள் பலருக்கும் நன்மை அளிக்கின்றீர்கள். தந்தையே நன்மையளிப்பவர்; அவர் உங்கள் அனைவரையும் நரகத்தில் இருந்து அகற்றிச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக முயற்சி செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். கண்காட்சிகள் போன்றவற்றின் மூலம் பல பிரஜைகளை உருவாக்குவதற்காக உங்களுக்குத் தொடர்ந்தும் அதிகக் கருத்துக்கள் கொடுக்கப்படுகின்றன. பல பிரஜைகள் தொடர்ந்தும் உருவாக்கப்படுவார்கள். வெகுசில அரசர்களும் அரசிகளும், ஆனால் மில்லியன் எண்ணிக்கையில் பிரஜைகளும் உள்ளனர். ஒரேயொரு அரசனும், அரசியுமே இருக்கின்றார்கள். அங்கே யுத்தங்கள், சண்டைகள் இடம்பெறுவதில்லை. மரணம் இப்பொழுது உங்கள் முன்னிலையில் உள்ளதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக யோகத்தில் நிலைத்து இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக ஆத்மாக்களான நீங்கள் பாவாத்மாக்களில் இருந்து புண்ணியாத்மாக்கள் ஆகுவீர்கள். வேறு வழியேதும் இல்லை. கீழ்ப்படிவான குழந்தைகள் தங்கள் தாயையும், தந்தையையும் பின்பற்றுகின்றார்கள். ஒரு தந்தை (லௌகீக) தூய்மையாகிய பொழுதிலும், குழந்தைகள் தூய்மை ஆகாமல் இருந்தால், அவர்கள் தந்தைக்குக் கீழ்ப்படிவில்லாத குழந்தைகள். நீங்கள் பற்றை வென்றவராக வேண்டும். என்னுடையவர் ஒரு சிவபாபாவே அன்றி, வேறெவரும் இல்லை. நீங்கள் அவரிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்கான உங்கள் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெற வேண்டும். ஆகவே, தூய்மை அற்றவர்கள் ஆகாதீர்கள். தூய்மை ஆகாமல், உங்களால் புதிய உலகிற்குச் செல்ல முடியாது. பிறவிபிறவியாகச் செய்துள்ள பாவங்களுக்கான தண்டனைகள் இருக்க வேண்டும். 63 பிறவிகளாகச் செய்துள்ள பாவங்களுக்கான தண்டனையைப் பெற்றுள்ளதைப் போன்றுள்ளது. கருப்பை என்ற சிறையிலும் தண்டனைகளை அனுபவம் செய்ய வேண்டும். சத்திய யுகத்தில் சிறைகள் போன்றவை இல்லை; அது சுவர்க்கம். தந்தை இப்பொழுது ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசித்துள்ளார், இதனாலேயே அவரை எவராலும் இனங்காண முடியாதுள்ளது. தந்தையுடன் யோகம் செய்வதாலேயே ஆத்மாக்களாகிய உங்களால் தூய்மையாக முடியும். தந்தை கூறுகின்றார்: நான் தூய்மையற்ற உலகிற்குள் ஒரு தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசித்து, அவரை முதல் இலக்கமுடைய தூய ஆத்மாவாக ஆக்குகின்றேன். உங்களுக்கும் அது பொருந்துகின்றது. நீங்களும் தூய்மை ஆகுகின்றீர்கள். நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளும் என்பதால், நீங்கள் “பாப்தாதா” என்று கூறுகின்றீர்கள்: தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இப்பொழுது இன்னமும் மிகச்சிறிதளவு காலமே எஞ்சியுள்ளது. உங்கள் சரீரங்களுக்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. தந்தையைத் தொடர்ந்தும் நினைவுசெய்து, சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுங்கள். நாள் முழுவதும் இந்த எண்ணங்களையே பேணுங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. முற்றிலும் பற்றை வென்றவர்கள் ஆகுங்கள். வேறெவருக்கும் அன்றி, ஒரேயொரு சிவபாபாவிற்கு உரியவராக இருக்கின்ற பாடத்தை உறுதியாக்குங்கள். கீழ்ப்படிவான குழந்தைகளாகி, தாயையும் தந்தையையும் பின்பற்றுங்கள்.2. நீங்கள் ஒரு சிப்பியளவு கூட செலவு செய்யத் தேவையற்ற கல்வியைக் கற்பதால், 21 பிறவிகளுக்கான ஓர் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். ஆகவே, பெருமளவு அன்புடன் கற்றிடுங்கள். ஒரு சுயதரிசனச் சக்கரதாரி ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் பலமில்லியன்மடங்கு பாக்கியசாலியாகி, சதா உங்களின் மேன்மையான பாக்கியத்தின் சந்தோஷத்திலும் போதையுடனும் இருப்பீர்களாக.உலகம் முழுவதிலும் மதத்தின் தந்தை அல்லது ஜகத்குரு என்று அழைக்கப்படும் எவரும் தாயிடம் இருந்தும் தந்தையிடம் இருந்தும் இந்த அலௌகீகப் பிறப்பை அல்லது பராமரிப்பைப் பெறுவதில்லை. அவர்களால் அவர்களின் கனவுகளில்கூட அலௌகீகத் தாயினதும் தந்தையினதும் அனுபவத்தைப் பெற முடியாது. ஆனால் பலகோடி மடங்கு பாக்கியசாலி மேன்மையான ஆத்மாக்களான நீங்கள், தினமும் தாய் மற்றும் தந்தையிடம் இருந்து அன்பையும் நினைவுகளையும் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுவதுடன் அவர்களுடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருக்கிறீர்கள். சர்வசக்திவான் தந்தையே குழந்தைகளான உங்களின் சேவகராகி, ஒவ்வோர் அடியிலும் சகவாசத்தின் பொறுப்பை நிறைவேற்றுகிறார். ஆகவே, இந்த மேன்மையான பாக்கியத்தின் சந்தோஷத்திலும் போதையுடனும் இருங்கள்.
சுலோகம்:
உங்களின் உடலையும் மனதையும் சதா சந்தோஷமாக வைத்திருப்பதற்கு, சக்திவாய்ந்த சந்தோஷமான எண்ணங்களைக் கொண்டிருங்கள்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
பாப்தாதா எப்போதும் இந்த ஸ்ரீமத்தை வழங்குகிறார்: உங்களின் மனதில் சதா ஒவ்வோர் ஆத்மாவிற்காகவும் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் இருக்க வேண்டும். உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுகின்ற மனோபாவத்தைக் கொண்டிருங்கள். இது சுத்தமான மனதைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது. உங்களைப் பற்றி அல்லது மற்றவர்களைப் பற்றிய வீணான எண்ணங்களை நீங்கள் கொண்டிருந்தால், அது சுத்தமான மனதைக் கொண்டிருப்பது அல்ல. உங்களிடம் சுத்தமான மனம், சுத்தமான, தெளிவான புத்தி என்பவை இருக்கும்போது டபிள் லைற் ஸ்திதியை உங்களால் உருவாக்க முடியும். இதுவே உங்களின் ஸ்திதியை தந்தைக்குச் சமமாக ஆக்குவதற்கான இலகுவான வழிமுறை.