30.03.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 30.11.2004 Om Shanti Madhuban
இப்போது தந்தை பிரம்மாவிற்குச் சமமான அவ்யக்த ரூபத்தை உங்களின் நடத்தையிலும் உங்களின் முகத்திலும் காட்டுங்கள். காட்சிகளை அருளும் ரூபம் ஆகுங்கள்.
இன்று, பாக்கியத்தை அருள்பவரான தந்தை, எங்கும் உள்ள அதிமேன்மையான பாக்கியத்தைக் கொண்டுள்ள தனது குழந்தைகளைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறார். கல்பம் முழுவதிலும் வேறு எவருக்கும் உங்களிடம் உள்ளதைப் போன்ற இத்தகைய பாக்கியத்தை எவரும் கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு கல்பத்திலும் குழந்தைகளான நீங்கள் மட்டுமே இந்த பாக்கியத்தின் உரிமையைப் பெறுகிறீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் உங்களின் உரிமையின் பாக்கியத்தை நீங்கள் நினைக்கிறீர்களா? ஏன் இந்தப் பாக்கியம் அதிமேன்மையான பாக்கியமாக உள்ளது? ஏனென்றால் பாக்கியத்தை அருள்பவரே குழந்தைகளான உங்களுக்கு இந்தத் தெய்வீகப் பிறவிக்கான மேன்மையான பாக்கியத்தை வழங்கியுள்ளார். பாக்கியத்தை அருள்பவரிடமே பிறப்பு எடுக்கும் பாக்கியத்தை விட மகத்தான பாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது. உங்களின் பாக்கியத்தின் போதை உங்களின் விழிப்புணர்வில் உள்ளதா? உங்களின் பாக்கியத்தைப் பட்டியல் இட்டால், அந்தப் பட்டியல் எவ்வளவு நீண்டதாக இருக்கும்? பிராமணர்களான உங்களின் பாக்கிய வாழ்க்கையில் எந்தவிதக் குறைவும் இல்லை. உங்களின் பாக்கியத்தின் பட்டியல் உங்கள் எல்லோருடைய விழிப்புணர்விலும் வெளிப்பட்டுள்ளதா? உங்களின் விழிப்புணர்வில் அதைக் கொண்டு வாருங்கள். அது உங்களின் விழிப்புணர்வில் வந்துவிட்டதா? உங்களின் இதயம் என்ன பாடலைப் பாடுகிறது? ‘ஆஹா, பாக்கியத்தை அருள்பவரே! ஆஹா, எனது பாக்கியமே!’ இந்த மேன்மையான பாக்கியத்தின் சிறப்பியல்பானது, ஒரேயொரு இறைவனிடம் இருந்து நீங்கள் மூன்று உறவுமுறைகளின் பேறுகளைப் பெறுகிறீர்கள். ஒரேயொருவரிடம் இருந்து நீங்கள் மூன்று உறவுமுறைகளைப் பெறுகிறீர்கள். இவை வாழ்க்கையில் விசேடமான உறவுமுறைகளாக நினைவு செய்யப்படுகின்றன: தந்தை, ஆசிரியர், சற்குரு. வேறு எவருக்கும் ஒரேயொருவரிடம் இருந்து மூன்று உறவுமுறைகளும் பேறுகளும் கிடைப்பதில்லை. அவரே உங்களின் தந்தை, உங்களின் ஆசிரியர் மற்றும் உங்களின் சற்குரு என நீங்கள் பெருமையுடனும் போதையுடனும் சொல்கிறீர்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து சகல பொக்கிஷங்களினதும் சுரங்கத்தைப் பெற்றுள்ளீர்கள். பொக்கிஷங்களின் பட்டியல் உங்களின் விழிப்புணர்விற்கு வருகிறதா? நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்ற பொக்கிஷங்களை உங்களின் விழிப்புணர்வில் கொண்டு வாருங்கள். நீங்கள் அவற்றைப் பெற்றுவிட்டீர்களா அல்லது அவற்றைப் பெறப் போகின்றீர்களா? நீங்கள் என்ன சொல்வீர்கள்? குழந்தைகள் எப்படியும் அதிபதிகளே. ஆசிரியரின் கற்பித்தல்களின் ஊடாக நீங்கள் ஏற்கனவே மேன்மையான அந்தஸ்தைப் பெற்றுள்ளீர்கள். எப்படியும் நீங்கள் உலகைப் பார்த்தால், நினைவு செய்யப்படுகின்ற அதிமேன்மையான அந்தஸ்தானது, இராஜ அந்தஸ்தே ஆகும். நீங்கள் இரட்டை அரசர்கள் ஆகியுள்ளீர்கள். தற்சமயம், நீங்கள் சுய இராச்சிய அதிகாரிகளாக, சுய அதிபதிகளாக ஆகியுள்ளீர்கள். அத்துடன் எதிர்காலத்திலும் பல பிறவிகளுக்கு நீங்கள் இராஜ அந்தஸ்திற்கான உரிமையைப் பெறுவீர்கள். இந்தக் கல்வி ஒரு பிறவிக்கானது. அத்துடன் இது குறுகியதொரு பிறப்பாகும். ஆனால் அந்தஸ்து என்ற பேறு பல பிறவிகளுக்கானது. அத்துடன் இராச்சியம் துண்டிக்க முடியாததாகவும் அசைக்க முடியாததாகவும் தடைகளில் இருந்து விடுபட்டதாகவும் இருக்கும். இப்போது நீங்கள் சுய இராச்சிய அதிகாரிகளாக, உங்களுக்கே அதிபதிகளாக, கவலையற்ற சக்கரவர்த்திகளாக இருக்கிறீர்கள். நீங்கள் இத்தகையவர்களா? நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகிவிட்டீர்களா? கவலையற்றவர்களாக இருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களிடம் சிறிதளவேனும் கவலை இல்லாத அளவிற்கு நீங்கள் கவலையற்றவர்களாக இருக்கிறீர்களா? கவனமாக இருங்கள். ஏதாவது பொம்மலாட்டம் உங்களுக்கு முன்னால் வரும்போது, அந்த வேளையில் ஏதாவது கவலைகள் இருக்குமா? மாயையின் பொம்மலாட்டக் காட்சி உங்களுக்கு முன்னால் வருகிறதா இல்லையா? அந்த வேளையில், உங்களுக்குள் சிறிதளவு கவலை இருக்குமா? கவலைகள் இருக்காதா? சிறிது கவலைகள் - சில எண்ணங்கள் இருக்குமா? அல்லது, நீங்கள் அவற்றைப் பற்றிச் சிந்திக்க மாட்டீர்களா? உண்மையில், உங்களின் மேன்மையான பாக்கியம் இப்பொழுதில் இருந்தே உங்களைக் கவலையற்ற சக்கரவர்த்தி ஆக்குகிறது. இடையில் வருகின்ற சில விடயங்கள் உங்களை எதிர்காலத்திற்காக அனுபவசாலிகளாகவும் முதிர்ச்சியானவர்களாகவும் ஆக்குகின்றன.
இப்போது, நீங்கள் எல்லோரும் இந்த வெவ்வேறு சூழ்நிலைகளில் அனுபவசாலிகள் ஆகியுள்ளீர்கள்தானே? நீங்கள் பயப்படவில்லையே? பற்றற்ற பார்வையாளர் என்ற ஆசனத்தில் சௌகரியமாக அமர்ந்திருந்து, பொம்மலாட்டக் காட்சியைப் பாருங்கள். இது உண்மையில் எதுவுமே இல்லை, ஒரு கார்ட்டூன் மட்டுமே. நீங்கள் இப்போது பலசாலிகள் ஆகிவிட்டீர்கள்தானே? நீங்கள் இப்போது பலசாலிகளா? அல்லது, சிலவேளைகளில் நீங்கள் சிறிது பயப்படுகிறீர்களா? அது ஒரு கடதாசிப் புலி போன்றே வருகிறது. அது கடதாசியால் செய்யப்பட்டது. ஆனால் ஒரு புலியின் வடிவில் வருகிறது. இப்போது, காலத்திற்கேற்ப, அனுபவ சொரூபமாகி, காலத்திற்கும் பஞ்சபூதங்களுக்கும் மாயைக்கும் சவால் விடுங்கள்: வாருங்கள், நான் வெற்றி பெற்றவன். நீங்கள் வெற்றி பெற்றவர் என்ற சவாலை விடுங்கள். (பாப்தாதா அவ்வப்போது இருமிக் கொண்டிருந்தார்). இன்று, கருவிக்கு அந்தளவு சுகமில்லை, ஆனால் பாபா உங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.
இரண்டு குழுக்கள் மீண்டும் மீண்டும் பாப்தாதாவின் முன்னால் வருகிறார்கள். எதற்காக? இரண்டு குழுக்களும் பாப்தாதாவிடம் கூறுகிறார்கள்: ‘நாங்கள் தயார்’. ஒரு குழு, காலம், பஞ்சபூதங்கள் மற்றும் மாயையைக் கொண்டது. மாயையும் தனது இராச்சியம் இப்போது போகப் போகிறது என்பதைப் புரிந்து கொண்டுள்ளாள். மற்றைய குழு, முன்னோடிக் குழு. இரண்டு குழுக்களும் திகதியைக் கேட்கிறார்கள். வெளிநாடுகளில், திகதிகள் ஒரு வருடத்திற்கு முன்னரே நிச்சயிக்கப்படுகின்றன, அப்படித்தானே? இங்கே ஆறு மாதங்களுக்கு முன்னரே நிச்சயிக்கப்படுகின்றனவா? பாரதத்தில், எல்லோமே வேகமாகச் செல்கிறது. எனவே, ஒரு நிகழ்ச்சிக்கான திகதியும் 15 நாட்களுக்கு முன்னரே நிச்சயம் செய்யப்பட முடியும். எனவே, சம்பூரணம் ஆகுவதற்கும் முழுமை அடைவதற்கும் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்குமான திகதி என்ன? நீங்கள் பாப்தாதாவிடம் கேட்கிறீர்கள். பிராமணர்களான நீங்கள் இப்போது இந்தத் திகதியை நிச்சயம் செய்ய முடியும். இது சாத்தியமா? ஒரு திகதியை நிச்சயம் செய்ய முடியுமா? பாண்டவர்களே, பேசுங்கள்! மூவரும் கூறுங்கள்! (பாப்தாதா நிர்வேர் பாய், ரமேஷ்பாய், பிரிஜ்மோகன்பாய் இவர்களிடம் கேட்கிறார்) திகதியை நிச்சயம் செய்ய முடியுமா? பேசுங்கள், இதை நிச்சயம் செய்ய முடியுமா? அல்லது, அது சடுதியாக நடக்குமா? அது நாடகத்தில் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் அதை நடைமுறை வடிவத்தில் கொண்டு வரப் போகிறீர்களா இல்லையா? அது எப்போது? பாபாவிற்குச் சொல்லுங்கள். அது சடுதியாக நடக்குமா? திகதி நிச்சயம் செய்யப்பட மாட்டாதா? அதை நிச்சயம் செய்வீர்களா? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்களே, அது நிச்சயம் செய்யப்படுமா? நாடகத்தை நடைமுறை வடிவத்தில் கொண்டு வருவதற்கு ஒரு திகதியை நிச்சயம் செய்வதற்கு தமது மனதில் நினைக்க வேண்டும் என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அதன்பின்னர் நீங்கள் அதைச் செய்ய வேண்டும். இவர் தனது கையை உயர்த்துகிறார் இல்லை. அது சடுதியாக நடக்குமா? உங்களால் ஒரு திகதியை நிச்சயம் செய்ய முடியுமா? பின்னால் அமர்ந்திருப்பவர்கள் இதைப் புரிந்து கொண்டீர்களா? அது சடுதியாக நடக்கும் என்பது சரியே. ஆனால் நீங்கள் நிச்சயமாக உங்களைத் தயார் செய்வதற்கான இலட்சியத்தை வைத்திருக்க வேண்டும். சம்பூரணம் ஆகுவதற்கான இலட்சியம் உங்களிடம் இல்லாவிட்டால், கவனயீனம் வந்துவிடும். ஒரு திகதியை நீங்கள் நிச்சயம் செய்யும்போது, முழுமையான வெற்றியை நீங்கள் பெறுவதை உங்களால் பார்க்க முடியும். நீங்கள் செய்யும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் ஒரு திகதியை நிச்சயம் செய்கிறீர்கள்தானே? நீங்கள் அப்படி ஆகவேண்டும் என நினைக்கிறீர்கள்தானே? அல்லது, அப்படித் தேவையில்லை என நினைக்கிறீர்களா? எல்லாமே நாடகத்தில் இருப்பதனால், அது தானாகவே நடக்குமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள், பேசுங்கள்! பிரேம் (தேராதூன் இலிருந்து வந்திருப்பவர்) பேசுங்கள்! நீங்கள் அதைச் செய்ய வேண்டும். நீங்கள் அதைச் செய்ய வேண்டும். ஜயந்தி, பேசுங்கள்! நீங்கள் அதைச் செய்ய வேண்டும். அது எப்போது நடக்கும்? காலம் வரும்போது இறுதியில் நடக்கும். காலம் உங்களைச் சம்பூரணம் ஆக்குமா அல்லது நீங்கள் அந்த நேரத்தை நெருக்கமாகக் கொண்டு வருவீர்களா?
உங்களின் விழிப்புணர்வில் நீங்கள் இந்த ஞானத்தை வைத்திருப்பதுடன் உங்களிடம் போதையும் நம்பிக்கையும் இருப்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார். எவ்வாறாயினும், இப்போது ஒன்றைச் சேர்க்க வேண்டும். இது உங்களின் நடத்தையிலும் முகத்திலும் புலப்பட வேண்டியது அவசியம். நீங்கள் எல்லாவற்றையும் உங்களின் புத்தியில் மீட்டல் செய்கிறீர்கள். அது உங்களின் விழிப்புணர்விலும் வருகிறது. ஆனால், இப்போது அது உங்களின் ரூபத்தில் வரவேண்டும். சாதாரணமான முறையில், ஒருவரிடம் உயர்ந்ததொரு தொழில் இருந்தால் அல்லது செல்வந்தர் ஒருவரின் குழந்தை படித்திருந்தால் அது அவரின் நடத்தையில் அவர் ஏதோவொன்றாக இருக்கிறார் என்பது புலப்படும். அந்த நபரைப் பற்றிய தனித்துவமான ஏதோவொன்று புலப்படும். எனவே, உங்களிடம் மகத்தான பாக்கியம் உள்ளது. உங்களிடம் ஆஸ்தியும் படிப்பும் அத்துடன் அந்தஸ்தும் உள்ளன. இப்போதும் உங்களிடம் சுய இராச்சிய அதிகாரம் இருக்கிறதல்லவா? உங்களிடம் சகல பேறுகளும் உள்ளன. எவ்வாறாயினும், உங்களின் நடத்தையிலும் முகத்திலும் பாக்கிய நட்சத்திரம் உங்களின் நெற்றியில் புலப்பட வேண்டும். இதைச் சேர்க்க வேண்டியது அவசியம். மேன்மையான பாக்கியத்தைக் கொண்ட ஆத்மாக்களான உங்களின் மூலம் மக்கள் இப்போது இதை அனுபவம் செய்யப் போகிறார்கள். அவர்கள் இதை அனுபவம் செய்ய வேண்டும் என்பதல்ல. ஆனால் அவர்கள் உங்களைத் தமது விசேடமான தேவதேவியராய், தமது இஷ்ட தேவிகளாக - நீங்கள் அவர்களுக்குச் சொந்தமானவர்களாக அனுபவம் செய்யப் போகின்றார்கள். நீங்கள் இதைத் தந்தை பிரம்மாவிடம் கண்டீர்கள். அவர் சாதாரண சரீரத்தில் இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்தே தந்தை பிரம்மாவில் என்ன புலப்பட்டது? அவரில் ஸ்ரீ கிருஷ்ணர் புலப்பட்டார்தானே? எனவே, ஆரம்பத்தில் அவர்கள் தந்தை பிரம்மாவில் ஸ்ரீ கிருஷ்ணரைக் கண்டார்கள். ஆரம்பத்தில் இருந்தவர்களான நீங்கள் இதை அனுபவம் செய்தீர்கள்தானே? உங்களுக்கு இந்த அனுபவம் இருந்தது. இறுதியில் என்ன புலப்பட்டது? நீங்கள் அவ்யக்த ரூபத்தைக் கண்டீர்கள்தானே? அவரின் நடத்தையிலும் முகத்திலும் அது புலப்பட்டதல்லவா? பாப்தாதா இப்போது குறிப்பாகக் கருவி குழந்தைகளான உங்களுக்கு இந்த வீட்டுவேலையை வழங்குகிறார்: இப்போது, தந்தை பிரம்மாவிற்குச் சமமான அவ்யக்த ரூபம் புலப்பட வேண்டும். குறைந்தபட்சம், 108 மணி மாலை அவர்களின் நடத்தையினூடாகப் புலப்பட வேண்டும். இது அவர்களின் முகங்களில் பிரதிபலிக்க வேண்டும். பாப்தாதாவிற்குப் பெயர்கள் தேவையில்லை. அவர் உங்களுக்கு 108 பேரின் பெயர்களைக் கூறவில்லை. ஆனால் அவர்களின் நடத்தையும் அவர்களின் முகங்களும் இயல்பாகவே அதை வெளிப்படுத்தும். பாப்தாதா குறிப்பாகக் கருவிக் குழந்தைகளுக்கு இந்த வீட்டுவேலையை வழங்குகிறார். இது சாத்தியமா? ஓகே, உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை? பிந்தி வந்திருப்பவர்களைப் பற்றி நினைக்காதீர்கள். இது காலத்திற்குரிய கேள்வி இல்லை. இங்கே சில வருடங்கள் மட்டுமே தாம் இருக்கிறோம் என எவரும் நினைக்கக்கூடாது. கடைசியாக வருகின்ற எவராலும் வேகமாகச் சென்று, முதலாவதாக வரமுடியும். இது பாப்தாதாவின் சவால். உங்களால் அதைச் செய்ய முடியும். எவராலும் இதைச் செய்ய முடியும். கடைசியாக வருகின்றவராலும் இதைச் செய்ய முடியும். உறுதியான இலட்சியத்தை வைத்திருங்கள்: ‘நான் இதைச் செய்ய வேண்டும். அது நடக்க வேண்டும்.’
இரட்டை வெளிநாட்டவர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் இரட்டை வாய்ப்பை எடுத்துக் கொள்வீர்கள்தானே? பாப்தாதா எந்தப் பெயர்களையும் அறிவிக்க மாட்டார். ஆனால் அவர்களின் முகங்கள் அவற்றை வெளிப்படுத்தும்: ‘இவர்களே அவர்கள்’. உங்களுக்கு இந்தளவு தைரியம் இருக்கிறதா? பாப்தாதா முதல் வரிசையைப் பார்க்கிறார். உங்களுக்கு இந்தத் தைரியம் இருக்கிறதா? உங்களுக்கு தைரியம் இருந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தமது கைகளை உயர்த்த முடியும். ஆரம்பித்து வைப்பவர் அர்ச்சுனன் ஆவார். அச்சா. நீங்கள் என்ன முயற்சிகளைச் செய்கிறீர்கள், யார் என்ன செய்கிறார் என்ற பெறுபேற்றைப் பார்ப்பதற்கு பாப்தாதா உங்களுக்கு ஆறு மாதங்கள் வழங்குகிறார். பாப்தாதா ஆறு மாதங்களுக்கான பெறுபேற்றைப் பார்த்து அதன்பின்னர் முடிவு செய்வார். இது ஓகேயா? காலத்தின் வேகம் இப்போது துரிதமாக முன்னேறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. படைப்பு வேகமாகச் செல்லக்கூடாது, படைப்பவரே வேகமாகப் போக வேண்டும். இப்போது சிறிது வேகத்தைக் கூட்டுங்கள். இப்போது பறவுங்கள்! நீங்கள் அசைவதாக மட்டும் இருக்கக்கூடாது, ஆனால் நீங்கள் இப்போது பறக்கிறீர்கள். நீங்கள் மிக நல்ல பதில்களைக் கொடுக்கிறீர்கள்: ‘நாங்களே அவர்கள். நாங்கள் இல்லாவிட்டால், வேறு யார் அப்படி ஆகுவார்கள்?’ பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். எவ்வாறாயினும், மக்கள் இப்போது எதையாவது பார்க்க விரும்புகிறார்கள். ஆரம்பத்தில், குழந்தைகளான நீங்கள் சேவைக்காக வெளியே சென்றபோது, குழந்தைகளான உங்களின் ஊடாக மக்கள் காட்சிகளைக் கண்டதை பாப்தாதா நினைவுகூருகிறார். இப்போது சேவை மற்றும் உங்களின் ரூபம் இரண்டிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். எனவே, நீங்கள் எதைக் கேட்டீர்கள்? இப்போது காட்சிகளை அருளும் ரூபம் ஆகுங்கள். புலப்படும் விதத்தில் தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுங்கள். அச்சா.
இன்று, பல புதியவர்கள் வந்துள்ளார்கள். நீங்கள் எல்லோரும் உங்களின் அன்பு சக்தியுடன் இங்கே வந்துள்ளீர்கள். இதனாலேயே, பாப்தாதா புதிய குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அவர்களின் பெயருக்குப் பலமில்லியன் மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். அத்துடன் கூடவே, ஆசீர்வாதங்களை அருள்பவரும் ஆசீர்வாதத்தை வழங்குகிறார்: நீங்கள் சதா இந்த பிராமண வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்வதுடன் தொடர்ந்து பறவுங்கள். அச்சா.
இந்தத் தடவை எல்லோருக்கும் சேவை செய்யும் முறை பஞ்சாபினுடையது: பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், எழுந்து நில்லுங்கள்! மிகவும் நல்லது. இதுவும் உருவாக்கப்பட்டுள்ள நல்லதொரு நடைமுறை. ஏனென்றால் ஒவ்வொரு பிராந்தியமும் ஒரு வாய்ப்பைப் பெறுகிறது. ஒன்று, யக்யத்திற்கு சேவை செய்வதன் மூலம் நீங்கள் ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்கள் வருமானத்தைச் சேகரிக்கின்றீர்கள். ஏனென்றால், உங்களில் பெரும்பாலானோர் எந்தவொரு பணியைச் செய்யும்போதும் நீங்கள் யக்ய சேவையை நினைக்கிறீர்கள். யக்யத்தின் சேவையை நினைப்பதன் மூலம் நீங்கள் அந்த யக்யத்தை உருவாக்கிய தந்தையையும் நினைவு செய்கிறீர்கள். எனவே, இந்தச் சேவை செய்வதன் மூலம் உங்களின் புண்ணியக் கணக்கில் நீங்கள் அதிகபட்ச வருமானத்தைச் சேகரிக்கிறீர்கள். இரண்டாவதாக, உண்மையான முயற்சி செய்யும் குழந்தைகளால் தமது நினைவு அட்டவணையை இலகுவாகவும் நிலையானதாகவும் ஆக்க முடியும். ஏனென்றால், முதலில், இங்கே உங்களிடம் மகாராத்திகளின் சகவாசம் உள்ளது. சகவாசம் உங்களை இலகுவாக அதை ஒத்ததாகச் செய்கிறது. நீங்கள் கவனம் செலுத்தினால், நீங்கள் இங்கே இருக்கும் எட்டு தொடக்கம் பத்து நாட்களில் உங்களால் மிக நன்றாக முன்னேற முடியும். நீங்கள் பொதுவான முறையில் சேவை செய்தால், அது அந்தளவு நன்மையை ஏற்படுத்தாது. ஆனால் முதலில் ஒரு சதா யோகி ஆகுவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது. அதன்பின்னர், உங்களின் புண்ணியக் கணக்கில் சேகரிப்பதற்கும் எல்லாவற்றிலும் மிகப் பெரிய குடும்பத்திற்குச் சொந்தமாக இருக்கும் போதையையும் சந்தோஷத்தையும் பேணச் செய்கிறது. எனவே, பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். ஒவ்வொரு பிராந்தியமும் இந்த வாய்ப்பைப் பெறுகிறது. ஆனால், மூன்று வழிமுறைகளிலும் நன்மையைப் பெறுகின்ற இலட்சியத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் உங்களின் புண்ணியக் கணக்கில் எவ்வளவைச் சேமித்துள்ளீர்கள்? நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் இலகுவாக எந்தளவிற்கு முன்னேறுவீர்கள்? நீங்கள் எந்தளவிற்கு ஒன்றுகூடலினதும் குடும்பத்தினதும் அன்பை அனுபவம் செய்தீர்கள்? எந்தளவிற்கு நெருக்கத்தை நீங்கள் அனுபவம் செய்தீர்கள்? இந்த மூன்று விடயங்களிலும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் பெறுபேற்றைப் பார்க்க வேண்டும். உங்களுக்கு நாடகத்தில் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. எனவே, இப்போது வாய்ப்பைப் பெறுகின்ற சான்ஸிலர்கள் (வேந்தர்கள்) ஆகுங்கள். எனவே, பஞ்சாபைச் சேர்ந்த நீங்கள் புத்திசாலிகள்தானே? நல்லது. நீங்கள் நல்லதோர் எண்ணிக்கையில் வந்துள்ளீர்கள். திறந்த இதயங்களுடன் சேவை செய்வதற்கான வாய்ப்பையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள். வந்துள்ள மக்களின் எண்ணிக்கையும் நல்லதோர் எண்ணிக்கையாக உள்ளது. இது நல்லது. ஒன்றுகூடலும் நன்றாக உள்ளது.
(இன்று, இரண்டு பிரிவுகள் வந்துள்ளார்கள்: கிராம அபிவிருத்தி பிரிவினரும் மகளிர் பிரிவினரும் சந்திப்பிற்காக வந்துள்ளார்கள்.) மகளிர் பிரிவைச் சேர்ந்தவர்கள், எழுந்து நில்லுங்கள்! உங்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்களா? ஆசிரியர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இது சேவை. சேவை செய்வதற்கு முன்னரே நீங்கள் சேவையின் போஷாக்கான பலனைப் பெறுகிறீர்கள். உங்களுக்கு ஒன்றுகூடலின் களிப்பும் தந்தையைச் சந்திப்பதன் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன. எனவே, செய்வதற்கு உங்களுக்குச் சேவையும் கிடைத்தது. அத்துடன் அதன் போஷாக்குப் பழமும் கிடைத்தது. இது நல்லது. இப்போது ஏதாவது புதிய திட்டங்களை நீங்கள் செய்துள்ளீர்களா? என்னென்ன குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அது மகளிர் குழுவோ அல்லது வேறெந்தக் குழுவோ, ஒவ்வொரு குழுவும் உங்களின் நடத்தையின் மூலமும் உங்களின் முகத்தின் மூலமும் நடைமுறையில் ஏதாவதொரு நற்குணத்தை அல்லது சக்தியை வெளிப்படுத்துவதை ஆரம்பித்து வைக்க வேண்டும். அதாவது, மகளிர் அணியான நாங்கள், நிச்சயமாக இந்தக் குறிப்பிட்ட சக்தியை அல்லது நற்குணத்தை நடைமுறை வடிவில் கொண்டு வருவோம். இந்த முறையில், ஒவ்வொரு குழுவும் ஏதாவதொரு நற்குணத்தை அல்லது சக்தியை நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு இடையே நீங்கள் செய்த சேவையின் பெறுபேற்றை நீங்கள் குறித்துக் கொள்வதைப் போல், கடிதங்களின் தொடர்புகள் அல்லது ஒன்றுகூடல்களை நடத்தி நீங்கள் தொடர்ந்தும் அவற்றைச் சோதியுங்கள். எனவே, எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் இதைச் செய்து, பின்னர் எல்லோருக்கும் அதைக் காட்டுங்கள். மகளிர் அணியினர் இதைச் செய்து மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும். ஒவ்வொரு பிரிவும் ஏதாவதொரு திட்டத்தைச் செய்து ஒரு நேரத்தை நிச்சயித்துக் கொள்ள வேண்டும். அதாவது, இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் நான் இந்தளவு சதவீதத்தை நடைமுறையில் அடைய வேண்டும். அதன்பின்னர், உங்களின் நடத்தை மற்றும் ரூபத்தினூடாக பாப்தாதா எதை வெளிப்படுத்த விரும்புகிறாரோ, அது நடக்கும். ஆகவே, இந்தத் திட்டத்தைச் செய்து பாப்தாதாவிடம் கையளியுங்கள். ஒவ்வொரு பிரிவும் என்ன செய்வீர்கள்? சேவை செய்வதற்காக நீங்கள் திட்டங்களைக் குறித்துக் கொள்வதைப் போல், இதையும் குறித்து, அதை பாபாவிடம் கொடுங்கள். இது ஓகேயா? இதைச் செய்து பாபாவிடம் கொடுங்கள். இது நல்லது. சிறிய ஒன்றுகூடல்களால் அற்புதங்களைச் செய்ய முடியும். இது நல்லது. ஆசிரியர்களான நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களால் இதைச் செய்ய முடியுமா? உங்களால் இதைச் செய்ய முடியுமா? அப்படியானால், திட்டங்களைச் செய்யுங்கள். அச்சா. சேவைக்காகப் பாராட்டுக்கள்.
கிராம அபிவிருத்திப் பிரிவைச் சேர்ந்தவர்கள், எழுந்து நில்லுங்கள்! இதுவரை, நீங்கள் எத்தனை கிராமங்களை மாற்றியுள்ளீர்கள்? எத்தனை கிராமங்களுக்கு நீங்கள் சேவை செய்துள்ளீர்கள்? (நாங்கள் ஏழு கிராமங்களுக்குச் சேவை செய்துள்ளோம். ஒவ்வொரு கிராமத்திலும் 75 சதவீதம் வரையிலான பெறுபேற்றைப் பூர்த்தி செய்துள்ளோம். இந்தச் சந்திப்பிலும், நாங்கள் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளோம்: காலத்தின் அழைப்பு - ஓர் அழகான, சுத்தமான, அபிவிருத்தி அடைந்த பாரதம். இந்தச் செயல் திட்டத்துடன் தொடர்பில் நாங்கள் கிராமங்களைப் போதையில் இருந்து விடுவிக்கவும் கிராமங்களைச் சுத்தமாக்கவும் சேவை செய்வாம்.) இது நல்லது. இது நடைமுறையானதுதானே? இவை அனைத்தினதும் ஒட்டுமொத்தப் பெறுபேறு ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா? (நாங்கள் இன்னமும் அதை அனுப்பவில்லை). நீங்கள் அதை அனுப்ப வேண்டும். ஏனென்றால், நடைமுறையில் ஒவ்வொரு கிராமத்திற்கும் நீங்கள் செய்வதெல்லாம் அரசாங்கத்தின் வேலையே. ஆனால் நீங்கள் அவர்களுடன் ஒத்துழைக்கிறீர்கள். எனவே, அவர்கள் அந்தப் பெறுபேறுகளைப் பார்க்கும்போது, நீங்கள் நல்லதொரு பணியைச் செய்கிறீர்கள் என அவர்கள் உணர்வார்கள். ஒரு அறிக்கைத் தாளைத் தயார் செய்து, அரசாங்கத்தில் உள்ள பிரதானமான மனிதர்கள் எல்லோருக்கும் அனுப்புங்கள். ஒரு புத்தகமோ அல்லது சஞ்சிகையோ அன்றி, அவை அனைத்தினதும் முழுமையான பெறுபேற்றின் சாராம்சத்தை அனுப்ப வேண்டும். இது நல்லது. பாராட்டுக்கள். (பாபா இடையில் இருமிக் கொண்டிருந்தார்) இன்று, கருவிக்குச் சிறிது மௌனம் தேவைப்படுகிறது. அச்சா.
எல்லா இடங்களிலும் இடம்பெறுகின்ற சேவைகள் அனைத்தின் பெறுபேறுகளும் பாப்தாதாவைத் தொடர்ந்தும் வந்தடைந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, தற்காலத்தில் நீங்கள் செய்யும் சேவை, ஒரு மூலைமுடுக்கும் கைவிடப்படக்கூடாது, எல்லோரும் செய்தியைப் பெற வேண்டும் என்பதே ஆகும். நீங்கள் நடைமுறையில் இடுகின்ற திட்டங்களின் பெறுபேறுகள் நன்றாக உள்ளன. இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளின் செய்திகளையும் பாப்தாதா பெற்றார். அத்துடன் பாரதத்தில் இடம்பெறுகின்ற மெகா (பெரிய) நிகழ்ச்சிகளின் செய்திகளையும் பாபா தொடர்ந்தும் பெறுகிறார். எல்லா இடங்களிலும் சேவையின் பெறுபேறு வெற்றிகரமாகவே உள்ளது. எனவே, குழந்தைகளான நீங்கள் எல்லோருக்கும் செய்தியைக் கொடுப்பதில் வெற்றி பெற்றுள்ளதைப் போல், தொடர்ந்து உங்களின் வார்த்தைகள், உங்களின் தொடர்புகள் மற்றும் முகங்களினூடாக உங்களின் தேவதை ரூபத்தின் காட்சிகளை வழங்குங்கள். அச்சா.
இங்கே முதல் தடவையாக வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பலர் இருக்கிறார்கள். ‘மிகவும் தாமதமாகிவிட்டது’ என்ற அறிவித்தல் போடப்படுவதற்கு முன்னர் நீங்கள் வந்திருப்பது நல்லதே. இது நல்ல விடயம். உங்களின் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். அற்புதங்களைக் காட்டுங்கள். தைரியமாக இருங்கள். பாப்தாதாவின் உதவி ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ளது. அச்சா.
பாப்தாதா சேவைக்காகவும் தனிப்பட்ட முறையில் பௌதீகமாக பாபாவின் முன்னால் வந்திருக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் அத்துடன் தமது சொந்த நாடுகளில் தமது சொந்த இடங்களில் இந்தச் சந்திப்பைக் கொண்டாடும் குழந்தைகள் எல்லோருக்கும் அதிக, அதிக பாராட்டுக்களை வழங்குகிறார். எவ்வாறாயினும், இப்போது, உங்களின் முயற்சிகளில் தீவிர முயற்சியாளர்கள் ஆகுங்கள். அத்துடன் ஆத்மாக்களை அவர்களின் துன்பம் மற்றும் அமைதியின்மையில் இருந்து விடுவிப்பதற்கு மேலும் அதிக தீவிர முயற்சி செய்யுங்கள். துன்பம், அமைதியின்மை, ஊழல் அனைத்தும் அவற்றின் உச்சக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இப்போது உச்சக்கட்டத்தை முடிவிற்குக் கொண்டுவந்து, ஆத்மாக்கள் எல்லோரும் தந்தையிடம் இருந்து முக்திதாமத்திற்கான தமது ஆஸ்தியைப் பெறச் செய்யுங்கள். சதா இத்தகைய திடசங்கற்பமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு விசேடமான சேவையாளராகி, உங்களின் பணிவு மற்றும் அதிகாரத்தின் சமநிலையால் தந்தையை வெளிப்படுத்துவீர்களாக.சமநிலை இருக்கும்போது, அற்புதங்கள் புலப்படும். நீங்கள் பணிவு மற்றும் அதிகாரத்தின் சமநிலையுடன் தந்தையின் அறிமுகத்தை எவருக்காவது கொடுத்தால், அற்புதங்கள் புலப்படும். இந்த முறையில் நீங்கள் தந்தையைப் பெருமைப்படுத்த வேண்டும். உங்களின் வார்த்தைகள் தெளிவாகவும் அன்பு, பணிவு, இனிமையால் நிரம்பியும் அத்துடன் மகத்துவமாகவும் சத்தியமாகவும் இருக்க வேண்டும். அப்போது வெளிப்படுத்துதல் இடம்பெறும். பேசும்போது இடையில் அவர்களுக்கு அனுபவங்களைக் கொடுங்கள். அதனால் அவர்கள் அன்பிலே மூழ்கியிருப்பதை அனுபவம் செய்வார்கள். இந்த முறையில் சேவை செய்பவர்கள் விசேடமான சேவையாளர்கள் ஆவார்கள்.
சுலோகம்:
அவசியமான வேளையில் உங்களிடம் எந்தவிதமான வசதிகள் இல்லாவிட்டாலும் உங்களின் ஆன்மீக முயற்சியில் எந்தவிதமான தடைகளும் இருக்கக்கூடாது.அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகளின் கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.
கோபப்படுவது விகாரம் இல்லை எனச் சில குழந்தைகள் நினைக்கிறார்கள். அது ஓர் ஆயுதமே தவிர விகாரம் இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், கோபம் என்பது ஞானி ஆத்மாவின் மிகப்பெரிய எதிரி ஆகும். நீங்கள் ஏனைய ஆத்மாக்களுடன் தொடர்பில் வரும்போது அல்லது அவர்களுடன் பழகும்போதே உங்களின் கோபம் வெளிப்படுத்தப்படுகிறது. உங்களின் கோபத்தைப் பார்க்கும்போது, தந்தையின் பெயர் மிகவும் அவமதிக்கப்படுகிறது. வம்பு பேசுபவர்கள், ‘நாங்கள் ஞானோதயம் பெற்ற ஆத்மாக்களைப் பார்த்திருக்கிறோமே!’ எனக் கிண்டலாகச் சொல்வார்கள். ஆகவே, இப்போது கோபத்தின் சகல சுவடுகளையும் முடியுங்கள். மற்றவர்களுடன் மிக நல்ல பண்புகளுடன் பழகுங்கள்.