31.07.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
இனிய குழந்தைகளே, உங்கள் நேரத்தை நீங்கள் வீணாக்கக்கூடாது. நீங்கள் உள்ளார தொடர்ந்தும் ஞானத்தைக் கடைந்தால், உறக்கத்தை வெல்வதுடன், கொட்டாவி விடுதல் போன்றவையும் இருக்க மாட்டாது.
பாடல்:
குழந்தைகளாகிய நீங்கள் ஏன் தந்தையிடம் உங்களை அர்ப்பணித்துள்ளீர்கள்? “உங்களை அர்ப்பணித்தல்” என்பதன் அர்த்தம் என்ன?பதில்:
‘உங்களை அர்ப்பணித்தல்’ என்றால் தந்தையின் நினைவில் மூழ்கியிருத்தலாகும். நீங்கள் நினைவில் மூழ்கியிருக்கும்பொழுது, மின்கலமான (பற்றரி), ஆத்மாவாகிய நீங்கள் சக்தியூட்டப்படுகிறீர்கள். மின்கலமான ஆத்மாவாகிய நீங்கள், அசரீரியான தந்தையுடன் இணைக்கப்படும்பொழுது, மின்கலம் சக்தியூட்டப்படுவதுடன், உங்கள் பாவங்களும் அழிக்கப்படுகின்றன. உங்களுக்கான வருமானத்தையும் நீங்கள் சேகரிப்பீர்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது இங்கு உங்கள் சரீரங்களுடன் அமர்ந்திருக்கிறீர்கள். இவையே மரண பூமியில், உங்கள் இறுதிச் சரீரங்கள் என்பதனை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அதன் பின்னர் என்ன நடக்கும்? அமைதி தாமத்தில் நீங்கள் தந்தையுடன் ஒன்றாக இருப்பீர்கள். அந்தச் சரீரங்கள் இருக்க மாட்டாது. பின்னர் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகக் கீழறங்கிச் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் அனைவரும் ஒன்றாகக் கீழிறங்க மாட்டீர்கள். அந்த இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. தந்தை அமைதிக்கடலாகவும் சந்தோஷக்கடலாகவும் இருப்பதைப் போன்றே, அவர் குழந்தைகளாகிய உங்களையும் அமைதிக்கடல்களாகவும், சந்தோஷக்கடல்களாகவும் ஆக்குகின்றார். பின்னர் நீங்கள் அமைதி தாமத்திற்குச் சென்று வசிப்பீர்கள். எனவே நீங்கள் தந்தையையும், வீட்டையும், சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்ய வேண்டும். இந்த ஸ்திதியில் நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக இங்கே அமர்ந்திருக்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் எண்ணற்ற பிறவிகளின் பாவங்களும் அழிக்கப்படும். இதுவே யோக அக்கினி என அழைக்கப்படுகின்றது. சந்நியாசிகள் சர்வசக்திவானுடன் யோகம் செய்வதில்லை. அவர்கள் வசிப்பிடமான, பிரம்ம தத்துவத்துடனேயே யோகம் செய்கிறார்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்துடன் யோகம் செய்யும் யோகிகள் ஆவார்கள். அதாவது, அவர்கள் தத்துவத்துடனேயே யோகம் செய்கிறார்கள். இங்கே, இது சரீரங்களில் உள்ள ஆத்மாக்களுக்கான நாடகமாகும். ஆனால், இனிய வீடான அங்கே ஆத்மாக்கள் மாத்திரமே வசிக்கின்றார்கள். முழு உலகமும் அந்த இனிய வீட்டிற்குச் செல்லவே முயற்சி செய்கிறது. சந்நியாசிகளும் தாங்கள் ஒளித் தத்துவத்துடன் இரண்டறக் கலக்க விரும்புவதாகவே கூறுகிறார்கள். அவர்கள் ஒளித் தத்துவத்திற்குச் சென்று வசிக்க விரும்புவதாகக் கூறுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதைப் பற்றி புரிந்து கொள்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் தொடர்ந்தும் பல முரண்பாடான கருத்துக்களைச் செவிமடுக்கிறார்கள். தந்தை இங்கு வந்து நீங்கள் மந்திரத்தை உச்சரிப்பதைப் போன்று, இரு வார்த்தைகளை விளங்கப்படுத்துகின்றார். சிலர் தங்கள் குருவை நினைவுசெய்கிறார்கள். சிலர் வேறு எவரையாவது நினைவுசெய்கிறார்கள். மாணவர்கள் தங்கள் ஆசிரியரை நினைவுசெய்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் தந்தையையும், வீட்டையும் நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் உங்கள் ஆஸ்தியான அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். இதனையே நீங்கள் இதயபூர்வமாக நினைவுசெய்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாயினால் எதனையும் பேச வேண்டியதில்லை. அமைதி தாமத்திற்குச் சென்றபின்னர், நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள் என்பதை உங்கள் புத்தி புரிந்துகொள்கின்றது. முதலில் நாங்கள் முக்திக்குச் சென்று, அதன்பின்னர் ஜீவன்முக்திக்குச் செல்வோம். ஒரேயொரு தந்தை மாத்திரமே முக்தியையும் ஜீவன்முக்தியையும் அருள்பவர். தந்தை மீண்டும் மீண்டும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: உங்கள் நேரத்தை வீணாக்கக்கூடாது. உங்கள் தலைகள்மீது எண்ணற்ற பிறவிகளின் பாவச்சுமைகள் உள்ளன. இப்பிறவியின் பாவங்களைப் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்கள். இவ்விடயங்கள் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. எண்ணற்ற பிறவிகளின் பாவச் சுமை உங்கள் மீதுள்ளன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இங்கே புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் பல பிறவிகளாகச் செய்து வருகின்ற, காம விகாரமே முதற்தரமான பாவமாகும். நீங்கள் தந்தையையும் அதிகளவு அவதூறு செய்துள்ளீர்கள். அனைவருக்கும் சற்கதியை அருள்கின்ற, தந்தையே பெருமளவில் அவதூறு செய்யப்பட்டுள்ளார். நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் உங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். இப்பொழுது இயன்றவரை தந்தையை நினைவுசெய்ய முயற்சி செய்யுங்கள். உண்மையில், இது வெறுமனே குருவினுடையது என்றல்லாது, சற்குருவின் அற்புதமென்றே நீங்கள் கூறவேண்டும். ‘குருவின் அற்புதமே (ஆகா குருவே)’ என்று கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அது சற்குருவின் அற்புதமாக இருக்க வேண்டும். அந்த ஒரேயொருவரே முக்தியையும் ஜீவன்முக்தியையும் அருள்பவர். வேறுபட்ட பல குருமார் உள்ளார்கள். ஆனால் அந்த ஒரேயொருவர் மாத்திரமே சற்குரு. நீங்கள் பல குருமாரை ஏற்றுக்கொண்டிருந்தீர்கள். மக்கள் ஒவ்வொரு பிறவியிலும் 2 முதல் 4 குருமாரை ஏற்றுக் கொள்கிறார்கள். மக்கள் ஒரு குருவை ஏற்றுக்கொண்ட பின்னர், இதை விடச் சிறந்த வழியை வேறு எங்காவது கண்டுகொள்கின்ற எதிர்பார்ப்புடன் பிற இடங்களுக்குச் செல்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் வேறு குருமார்களைப் பரீட்சித்துப் பார்க்கின்றார்கள். ஆனால் அவர்களால் எதனையும் அடைய முடிவதில்லை. நீங்கள் இங்கிருக்கப் போவதில்லை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டுள்ளீர்கள். அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்ல வேண்டும். உங்கள் அழைப்பினாலேயே தந்தை வந்துள்ளார். நீங்கள் அவரைக் கூவியழைத்தீர்கள் என்பதை அவர் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறார்: வந்து எங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆக்குங்கள்! அமைதிதாமம், சந்தோஷதாமம் ஆகிய இரண்டும் தூய்மையானவை. நீங்கள் கூவியழைத்தீர்கள்: எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்! அனைவரும் தங்களின் வீட்டை நினைவுசெய்கிறார்கள். ஆத்மா உடனடியாகவே கூறுகிறார்: எனது வதிவிடம் பரந்தாமமாகும். பரமாத்மாவாகிய பரமதந்தை பரந்தாமத்தில் வசிக்கின்றார். நீங்களும் பரந்தாமத்தில் வசித்தீர்கள். இப்பொழுது உங்கள் மீது வியாழ சகுனம் உள்ளது எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். இது ஓர் எல்லையற்ற விடயமாகும். அனைவர் மீதும் எல்லையற்ற சகுனங்கள் உள்ளன. சக்கரம் தொடர்ந்து சுழல்கின்றது. நாங்களே சந்தோஷத்திலிருந்து துன்பத்திற்கும், துன்பத்திலிருந்து சந்தோஷத்திற்கும் செல்பவர்கள். அமைதிதாமமும் சந்தோஷதாமமும் உள்ளன. இதுவோ துன்பபூமியாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். இது மனிதர்களின் புத்தியில் இருப்பதில்லை. இப்பொழுது தந்தை உங்களுக்கு மரணித்து வாழக் கற்பிக்கின்றார். விட்டில்பூச்சிகள் சுவாலையிடம் தங்களை அர்ப்பணிக்கின்றனர். சிலர் அன்பில் மூழ்கி, எரிந்து, தங்களை அர்ப்பணிக்கின்றனர், ஆனால் ஏனையோர் வட்டமிட்ட பின்னும் மீண்டும் சென்று விடுகின்றனர். இவரும் ஒரு மின்கலம் போன்றவர். அனைவரது புத்தியின் யோகமும் அந்த ஒரேயொருவருடன் உள்ளது. ஒருவருடைய மின்கலம் அசரீரியான தந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளதைப் போன்றுள்ளது. இந்த ஆத்மா மிக நெருக்கமாக உள்ளதால் இவருக்கு இலகுவாக உள்ளது. உங்கள் மின்கலம் தந்தையை நினைவுசெய்வதால் தொடர்ந்தும் சக்தியூட்டப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் சிறிது சிரமத்தை அனுபவம் செய்கின்றபொழுதிலும், இவருக்கு இது இலகுவாக உள்ளது. எனினும் இவரும் குழந்தைகளாகிய உங்களைப் போன்றே முயற்சி செய்ய வேண்டியுள்ளது. எந்தளவிற்கு இவர் நெருக்கமாக உள்ளாரோ, அந்தளவிற்கு அவருக்குப் பொறுப்புக்களும் உள்ளன. தனது தலை மீது பொறுப்புக்களைக் கொண்டிருப்பவரால் இரவில் நிம்மதியாக உறங்க முடியாது என்று கூறப்படுகிறது. இவருக்குப் பல பொறுப்புக்கள் இருக்கின்றன. அந்தத் தந்தை (சிவபாபா) முழுமையானவர்; இவரும் முழுமையடைய வேண்டும். இவர் அனைவரையும் மிகவும் நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். இருவரும் இணைந்துள்ளபொழுதிலும், அக்கறை கொள்ளவே வேண்டும். புத்திரிகள் பெருமளவில் துன்புறுத்தப்படுகின்றார்கள். எனவே இது துன்பத்தின் அனுபவம் உள்ளதைப் போன்றதாகும். இறுதியில் கர்மாதீத ஸ்திதி அடையப்படும். அதுவரை அக்கறையும் உள்ளது. குழந்தைகள் ஒரு கடிதமேனும் எழுதாதபொழுது, அவர்கள் ஒருவேளை சுகவீனம் அடைந்துள்ளார்களோ என்ற அக்கறை இருக்கின்றது. தந்தை சேவைச் செய்திகளைப் பெறும்பொழுது, நிச்சயமாக அவர் அவர்களை நினைவுசெய்வார். பாபா இச்சரீரத்தின் ஊடாகச் சேவை செய்கின்றார். சிலவேளைகளில் முரளி குறுகியதாக இருக்கும். நீங்கள் முரளியை இரண்டு தொடக்கம் நான்கு நாட்களுக்குப் பெறாவிட்டாலும், உங்களிடம் பல குறிப்புக்கள் உள்ளன. உங்கள் நாட்குறிப்பேட்டை நீங்கள் படிக்க வேண்டும். பட்ஜைப் பயன்படுத்தியும் உங்களால் மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இருந்தபொழுது, வேறு எந்தச் சமயங்களும் இருக்கவில்லை. நீங்கள் விருட்சத்தின் படத்தையும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். பல்வேறு சமயங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். பிரிவினையற்ற ஒரேயொரு தர்மம் இருந்தபொழுது, அமைதியும், சந்தோஷமும், தூய்மையும் உலகிலே இருந்தன என ஆரம்பிக்கலாம்; நீங்கள் இந்த ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள், ஏனெனில் தந்தையே அமைதிக்கடலும் சந்தோஷக்கடலும் ஆவார். முன்னர் நீங்களும் எதனையும் அறிந்திருக்கவில்லை. தந்தை இந்த ஞானம் முழுவதையும் தனது புத்தியில் வைத்திருப்பதைப் போன்று, இப்பொழுது நீங்களும் அவ்வாறு ஆகுகின்றீர்கள். நீங்களும் அமைதிக்கடல்களாகவும், சந்தோஷக்கடல்களாகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் உங்கள் அட்டவணையைச் சோதித்து எந்தவிதமான குறைபாடு உங்களிடம் உள்ளதா எனப் பாருங்கள்: நான் உண்மையில் ஓர் அன்புக்கடலாக உள்ளேனா? என்னுடைய நடத்தை பிறரைக் குழப்பமடையச் செய்யக்கூடிய வகையில் இருந்ததா? உங்கள் மீது நீங்கள் முழுக் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு ஆகுவதற்கு பாபா உங்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுப்பார் என எண்ணாதீர்கள்; இல்லை. தந்தை கூறுகிறார்: நான் நாடகத் திட்டத்திற்கேற்ப, எனக்குரிய நேரத்தில் வருகிறேன். ஒவ்வொரு சக்கரத்திலும் இதுவே எனது நிகழ்ச்சி நிரலாகும். இந்த ஞானத்தை வேறு எவராலும் கொடுக்க முடியாது. ஒரேயொரு உண்மையான தந்தையும், உண்மையான ஆசிரியரும், சற்குருவும் மாத்திரமே உள்ளார். இந்த உறுதியான நம்பிக்கையை நீங்கள் கொண்டிருந்தால் வெற்றியாளர் ஆகுவீர்கள். இப்பொழுது இருக்கின்ற வேறுபட்ட சமயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். சூரியவம்ச இராச்சியமான சத்தியயுகம் இருந்தபொழுது, வேறெந்த வம்சமும் இருக்கவில்லை. அதேபோன்று மீண்டும் இடம்பெறும். நாள்முழுவதும் இவ்வாறாக தொடர்ந்தும் உங்களுடனேயே உரையாடுங்கள். ஞானக் கருத்துக்கள் உங்களுக்குள் இருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். தந்தையிடம் இருக்கின்ற ஞானம் இப்பொழுது உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த ஞானத்தைக் கிரகிக்க வேண்டும். இதை விடுத்து உங்கள் நேரத்தை நீங்கள் வீணடிக்கக் கூடாது. உங்களுக்கு இரவிலும் நேரம் உள்ளது. அங்கங்களினால் வேலை செய்த களைப்பினால் ஆத்மாக்கள் உறங்கச் சென்று விடுவது அவதானிக்கப்படுகிறது. தந்தை பக்தி மார்க்கத்தின் உங்கள் களைப்புக்கள் அனைத்தையும் அகற்றி, உங்களைக் களைப்பற்றவர் ஆக்குகின்றார். ஆத்மாக்கள் இரவில் களைப்படையும்பொழுது, தங்கள் சரீரங்களிலிருந்து வேறாகி விடுகிறார்கள், அதுவே உறக்கம் எனப்படுகிறது. உறங்குவது யார்? ஆத்மாவுடன் புலனங்கங்களும் உறங்கி விடுகின்றன. ஆதலால், இரவில் உறங்கச் செல்வதற்கு முன் தந்தையை நினைவுசெய்த பின்னர் அந்த எண்ணங்களுடன் உறங்கச் செல்லுங்கள். இறுதியில் இரவிலும் பகலிலும் நீங்கள் உறக்கத்தை வென்றவராகுவது சாத்தியமாகும். பின்னர் நீங்கள் நினைவில் நிலைத்திருந்து பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைத் தொடர்ந்தும் சுழற்றுவீர்கள். நீங்கள் கொட்டாவி விடவோ அல்லது தூக்கத்தை உணரவோ மாட்டீர்கள். உறக்கத்தை வென்ற குழந்தைகளே, ஒரு வருமானத்தை ஈட்டும் நேரத்தில் ஒருபொழுதும் தூங்கி விழாதீர்கள்! ஞானத்தில் நீங்கள் போதை கொண்டிருக்கும்பொழுது, உங்களால் அந்த ஸ்திதியைப் பேண முடியும். இங்கு நீங்கள் சிறிதளவு நேரமே அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதால், கொட்டாவி விடவோ அல்லது தூங்கிவிழவோ வேண்டாம். உங்கள் கவனம் திசை திரும்பும்பொழுதே நீங்கள் கொட்டாவி விடுகிறீர்கள். பிறரை உங்களைப் போன்று ஆக்க வேண்டும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் மனதிற் கொள்ள வேண்டும். பிரஜைகளும் தேவை. இல்லாவிடில் எவ்வாறு நீங்கள் அரசராகலாம்? நீங்கள் செல்வத்தைத் தானம் செய்யும்பொழுது, அது ஒருபொழுதும் குறைவடைந்து விடாது. நீங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்துவதுடன் தொடர்ந்தும் செல்வத்தைத் தானம் செய்தால், செல்வத்திற்கு ஒருபொழுதும் குறைவிருக்காது. இல்லாவிடில், நீங்கள் எதனையும் சேமித்துக்கொள்ள மாட்டீர்கள். மனிதர்கள் மிகவும் உலோபிகள். செல்வத்திற்காக அவர்கள் அதிகளவு சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுகிறார்கள். இங்கு தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்குக் கொடுக்கின்ற, அழிவற்ற செல்வத்தை நீங்கள் தொடர்ந்தும் பிறருக்குக் கொடுங்கள். இதில் உலோபியாக இருக்காதீர்கள். அதனைத் தானம் செய்யாவிட்டால் அது உங்களிடம் இல்லையென்றே அர்த்தமாகும். இந்த வருமானம் சண்டை, சச்சரவு என்ற கேள்விக்கு இடமில்லாததாகும். இது மறைமுகமான தானம் எனப்படுகிறது. நீங்கள் மறைமுகமான போர்வீரர்கள். உங்கள் யுத்தம் ஐந்து விகாரங்களுடனாகும். நீங்கள் அறியப்படாத போர்வீரர்கள் எனப்படுகிறீர்கள். காலாட்படையினர் மிகப் பெரியளவில் உள்ளனர். இங்கும் அவ்வாறே இங்கும் பல பிரஜைகளும், அத்துடன் கப்டன்களும், தளபதிகள் போன்றோரும் உள்ளனர். நீங்களும் ஒரு சேனையினரே. அதனுள்ளேயும் நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். கொமாண்டர்கள் யார், தளபதிகள் யார் என்பதை பாபா புரிந்துகொள்கிறார். அங்கு மகாராத்திகளும், குதிரைப்படையினரும் உள்ளனர். விளங்கப்படுத்துவதிலும் மூன்று வகையினர் உள்ளனர் என்று தந்தை அறிவார். நீங்கள் அழியாத ஞான இரத்தினங்களை வியாபாரம் செய்கிறீர்கள். அம்மக்களும் வியாபாரத்தைக் கற்பிக்கிறார்கள். ஒரு குரு தனது சரீரத்தை நீக்கும்பொழுது, அவரது சீடர்களும், அவரைப் பின்பற்றுபவர்களும் பணியைத் தொடர்கின்றார்கள். அது பௌதீகமானது, ஆனால் இது இங்கு சூட்சுமமானது. பல்வேறு சமயங்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் சொந்த எண்ணக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் என்ன கூறுகிறார்கள், அவர்கள் எதனைக் கற்பிக்கின்றார்கள், அவர்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என நீங்களும் சென்று செவிமடுக்கலாம். தந்தை 84 பிறவிகளின் சக்கரம் பற்றிய கதையை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு உங்களின் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுதும்கூட கலியுகத்தின் இறுதியிலும் ஆத்மாக்கள் தொடர்ந்தும் வந்து கொண்டே இருக்கிறார்கள். விரிவாக்கம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. தந்தை இங்கு இருக்கும்வரை சனத்தொகையும் தொடர்ந்து அதிகரிக்கும். பின்னர் அந்த ஆத்மாக்கள் அனைவரும் எங்கு வசிப்பார்கள், அவர்கள் எங்கே உண்பார்கள்? இதுவும் கருத்திற் கொள்ளவேண்டிய விடயம். அங்கு மனிதர்கள் அதிகளவில் இருப்பதில்லை. உணவளிப்பதற்கு ஒரு சிலரே இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் சொந்த வயல்கள் இருக்கும். தானியங்களைச் சேமிப்பதில் என்ன பயன்? இங்கு மழை வேண்டும் என்று யாகங்கள் செய்வது போன்ற எதையுமே அங்கு செய்ய வேண்டிய அவசியமில்லை. இப்பொழுது தந்தை இந்த யாகத்தை உருவாக்கியுள்ளார். பழைய உலகம் முழுவதும் இந்த யாகத்தில் அர்ப்பணிக்கப்பட வேண்டும். இது எல்லையற்ற யாகம். மழைக்காக அவர்கள் எல்லைக்குட்பட்ட யாகங்களை வளர்க்கின்றார்கள். மழையுள்ளபொழுது அவர்கள் சந்தோஷமடைந்து தங்கள் யாகம் வெற்றி அடைந்துள்ளது என எண்ணுகிறார்கள். மழை இல்லாவிட்டால் தானியங்களும் இல்லாததினால் அங்கு பஞ்சம் ஏற்படுகின்றது. அவர்கள் யாகங்களை உருவாக்கினாலும் அங்கு மழையில்லாது விட்டால் அவர்களால் என்ன செய்ய முடியும்? அனர்த்தங்கள் யாவும் இடம்பெறவுள்ளன. கடும் மழை, பூமி அதிர்ச்சி அனைத்தும் இடம்பெறும். குழந்தைகளாகிய நீங்கள் நாடகச் சக்கரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சக்கரத்தின் படம் மிகவும் பெரிதாக இருக்க வேண்டும். பிரபல்யமான இடங்களில் விளம்பரம் இடப்பட்டால், முக்கியஸ்தர்கள் அதனை வாசிப்பார்கள். நிச்சயமாக இதுவே அதி மங்களகரமான சங்கமயுகம் என அவர்கள் புரிந்துகொள்வார்கள். கலியுகத்தில் அதிகளவு மனிதர்கள் உள்ளனர். ஆனால், சத்தியயுகத்திலோ சொற்ப மனிதர்களே உள்ளனர். ஆகவே ஏனைய அனைவரும் அழிக்கப்பட்டு விடுகிறார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். சிவனின் பிறப்பு என்றால், சுவர்க்கத்தின் பிறப்பும், இலக்ஷ்மி நாராயணனின் பிறப்பும் ஆகும். இது ஓர் இலகுவான விடயம். சிவனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரே எல்லையற்ற தந்தை. அந்த ஒரேயொருவரே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர். நீங்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தமை நேற்றைய விடயமாகும். இது புரிந்துகொள்வதற்கு மிக இலகுவான விடயம். குழந்தைகளாகிய நீங்கள் இதனை மிகத்தெளிவாகப் புரிந்துகொண்டு, பிறருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். நீங்களும் மிகச் சந்தோஷமாக இருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது எக்காலத்திற்கும் நோயிலிருந்து விடுபட்டவர்களாகி, நூறு வீதம் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் ஆகுகின்றோம். மிகச் சொற்ப காலமே எஞ்சியுள்ளது. துன்பம், மரணம் போன்றன எவ்வளவு வர நேர்ந்தாலும், நீங்கள் அந்நேரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். மரணம் வரவிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இது ஒவ்வொரு சக்கரத்தினதும் நாடகம். இதில் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை. மிக உறுதியானவர்கள் விரக்திக் கூக்குரலிட மாட்டார்கள். ஒருவருக்குச் சத்திரசிகிச்சை செய்வதைப் பார்க்கும் மக்கள் மயக்கம் அடைகிறார்கள். அநேக மரணங்கள் இப்பொழுது இடம்பெறவுள்ளன. அவை அனைத்தும் இடம்பெறப் போவதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். மரணத்தின்பொழுது இரைக்குத் திண்டாட்டம், வேடனுக்குக் கொண்டாட்டம் எனக் கூறப்பட்டுள்ளது. இப்பழைய உலகில் நீங்கள் பெரும் துன்பம் அடைந்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்லவேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையிடமிருந்து அழியாத ஞானச் செல்வத்தைப் பெற்று அதனைப் பிறருக்குத் தானம் செய்யுங்கள். ஞானத்தைத் தானம் செய்வதில் உலோபியாக இருக்காதீர்கள். ஞானக் கருத்துக்கள் உங்களுக்குள் எப்பொழுதும் வெளிப்பட்டவாறு இருக்கட்டும். ஓர் அரசராகுவதற்கு நிச்சயமாக நீங்கள் பிரஜைகளை உருவாக்க வேண்டும்.2. நீங்கள் உங்களுடைய அட்டணையைச் சோதிக்க வேண்டும்: 1. தந்தையைப் போல் நான் அன்புக்கடல் ஆகிவிட்டேனா? 2. எப்பொழுதாவது நான் எவரையாவது குழப்பமடையச் செய்கிறேனா? 3. நான் எனது நடத்தையில் முழுக் கவனம் செலுத்துகின்றேனா?
ஆசீர்வாதம்:
தெய்வீகக் குணங்களும், ஞானமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்ற, தெய்வீகக் குணங்கள் நிறைந்த ஒரு தெய்வீகக் குணங்களின் சொரூபம் ஆகுவீர்களாக.உங்கள் ஒவ்வொருவரிடமும் அதிகளவு ஞானம் உள்ளது, ஆனால் இப்பொழுது தெய்வீகக் குணங்களை வெளிப்படுத்துவதற்கான தேவையே உள்ளது. ஆகையால், விசேட செயல்களை செய்வதன் மூலம் தெய்வீகக் குணங்களை அருள்பவர் ஆகுங்கள். நீங்கள் கொண்டிருக்க வேண்டிய எண்ணம்: நான் சதா தெய்வீகக் குணங்களின் சொரூபமாக இருந்து, பிறரையும் தெய்வீகக் குணங்களின் சொரூபமாக ஆக்குகின்ற பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதனை செய்வதன் மூலம், உங்களுக்கு வீணான எதனையும் பார்க்கவோ, செய்யவோ நேரம் இருக்க மாட்டாது. இந்த வழிமுறையை பயன்படுத்துவதால், உங்கள் சொந்தப் பலவீனங்களும், பிறரின் பலவீனங்களும் இலகுவாக முடிந்துவிடும். இதற்கு, நீங்கள் ஒவ்வொருவருமே முதல் இலக்க தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் ஆகுவதிலும் பிறரையும் அவ்வாறு ஆக்குவதிலும் எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள் என உங்களை நீங்கள் கருதுபவர்களாக இருக்க வேண்டும்.
சுலோகம்:
உங்கள் மனதினால் யோகத்தையும், உங்கள் வார்த்தைகளால் ஞானத்தையும், உங்கள் செயல்களால் தெய்வீகக் குணங்களையும் தானம் செய்யுங்கள்.