31.10.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே உங்களைப் போன்று பாக்கியசாலிகள் எவரும் இல்லை. ஏனெனில் முழு உலகமும் அழைத்துக் கொண்டிருக்கின்ற தந்தையே உங்களுக்குக் கற்பிப்பதுடன் அவருடன் நீங்கள் உரையாடிக் கொண்டும் இருக்கின்றீர்கள்.
கேள்வி:
ஞானக்கடலைக் கடைவது எவ்வாறு என்பதை அறிந்துள்ள குழந்தைகளின் அடையாளங்கள் என்ன?பதில்:
நாள் முழுவதும் அவர்களது புத்தி எவ்வாறு அனைவருக்கும் பாதையைக் காட்டி அவர்களுக்கு நன்மை செய்ய முடியும் என்ற அக்கறையைக் கொண்டிருக்கும். அவர்கள் சேவைக்கான புதிய திட்டங்களைத் தொடர்ந்தும் தீட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்களது புத்தியில் எந்நேரமும் இந்த ஞானத்துளிகள் கசிந்து கொண்டேயிருக்கும். அவர்கள் என்றும் தமது நேரத்தை வீணாக்க மாட்டார்கள்.ஓம் சாந்தி.
பரமாத்மாவான அசரீரியான பரமதந்தை குழந்தைகளாகிய உங்கள் முன்னிலையில் உரையாடிக் கொண்டிருக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். கடவுள் அதிமேலானவர் என்று அழைக்கப்படுகின்றார். அவரது வசிப்பிடமும் அதியுயர்வானது. வசிப்பிடம் மிகவும் பிரபல்யமானது. நாங்கள் அசரீரியான உலக வாசிகள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மனிதர்களுக்கு இவ்விடயங்கள் பற்றி எதுவும் தெரியாது. தந்தையான கடவுளே பேசுகின்றார். அசரீரியான கடவுளே பேசுகின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களை அன்றி வேறு எந்த மனிதருக்கும் தெரியாது. அவர் அசரீரியானவர் என்பதால் கடவுளால் எவ்வாறு பேச முடியும் என்பது எவரது புத்திக்கும் எட்டுவதில்லை. இதனை அறியாததால் அவர்கள் கிருஷ்ணரின் பெயரைக் கீதையில் இட்டுள்ளார்கள். அவர் இப்பொழுது உங்களுடன் நேரடியாகவே பேசிக் கொண்டிருக்கின்றார். நீங்கள் அவர் முன்னிலையில் நேரடியாக இல்லாதிருந்தால் அவர் கூறுவதை உங்களால் செவிமடுக்க முடியாது. சிலர் தொலைவில் இருந்து செவிமடுக்கக் கூடும், ஆனால் அதில் அந்தளவிற்கு நம்பிக்கை இருக்க முடியாது. இவை கடவுளின் வாசகங்கள் என்றே அவர்கள் செவிமடுக்கின்றார்கள். உங்களுக்கு இது மிகச்சரியாகத் தெரியும். சிவபாபா கடவுள் ஆவார். பாபா இந்த ஞானத்தை நடைமுறை ரீதியாகவே உங்களுடன் பேசுகின்றார். உங்கள் புத்தி உடனடியாகவே மேல் நோக்கிச் செல்கின்றது. சிவபாபா அதிமேலானதொரு இடத்தில் வசிக்கின்றார். பிரபல்யமான ஒருவரோ அல்லது இராணியோ வரும் போது அவர் இன்ன இன்ன இடத்திலிருந்து வந்திருக்கின்றார் என்றும் அவர் இப்பொழுது இங்கு வந்திருக்கின்றார் என்பதும் உங்களுக்குத் தெரியும். பாபா உங்களைத் தன்னுடன் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றார் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நாங்களும் பாபாவுடன் வீட்டிற்கு திரும்பிச் செல்வோம். நாங்கள் பரந்தாம வாசிகள் ஆவோம். நீங்கள் இப்பொழுது தந்தையையும் உங்கள் வீட்டையும் அறிவீர்கள். அந்தத் தந்தையே உலகைப் படைப்பவர் ஆவார். தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு அசரீரி உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகத்தின் இரகசியங்களைக் கூறியுள்ளார். இதனைத் தமது புத்தியில் வைத்திருப்பவர்களால் உண்மையிலேயே எங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கான எங்களது ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து பெறுவதற்காக நாங்கள் முயற்சி செய்கின்றோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் முயற்சி செய்வதை என்றுமே நிறுத்தக் கூடாது. பாடசாலை மாணவர்களும்இ தமது பரீட்சை இடம்பெறும் வரை தாம் கற்க வேண்டும் என்பதை அறிந்திருக்கின்றார்கள். அனைத்திலும் அதி சிறந்த பரீட்சையில் தாம் சித்தியெய்த வேண்டும் என்ற இலக்கும் குறிக்கோளும் அவர்களுக்கு உள்ளது. அவர்கள் ஒரு கல்லூரியை விட்டு விலகிய பின்னர் மேலும் கற்பதற்காக இரண்டாவது பின்னர் மூன்றாவது என உயர்ந்த கல்லூரிகளுக்குச் செல்வார்கள். தொடர்ந்தும் கற்க வேண்டும் என்பதே பிரதான விடயம். முக்கியஸ்தர் ஒருவரின் குழந்தை உயர்வான பரீட்சைகளில் சித்தியெய்த வேண்டுமென்றே நிச்சயமாக நினைப்பார். நீங்கள் மகத்தான தந்தையின் குழந்தைகள் என்பதை அறிவீர்கள். நாங்கள் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள் என்பது உலகில் உள்ள எவருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் அதிமேலான தந்தையின் குழந்தைகள். உங்கள் கல்வி மிகவும் முக்கியமானதொரு கல்வி. இது அதிமேலானதொரு கல்வி என்பது உங்களுக்குத் தெரியும். தந்தையே உங்களுக்குக் கற்பிப்பவர் என்பதால் உங்களுக்கு அதிகளவு ஆர்வமும் சந்தோஷமும் இருக்க வேண்டும். இதனை நீங்கள் எவருக்குமே விளங்கப்படுத்தலாம். நாங்கள் அனைவரிலும் பார்க்க அதிமகத்துவமான தந்தையின் குழந்தைகள் ஆவோம். நாங்கள் மகத்துவமான சற்குருவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றோம். நீங்கள் ஆசிரியரினதும் குருவினதும் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் தம்மை சிஷ்யர்கள் என்று அழைக்கின்றார்கள். இங்கே நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களையும் ஆசிரியரின் வழிகாட்டல்களையும் குருவின் வழிகாட்டல்களையும் பின்பற்ற வேண்டும். அவர் உங்களது தந்தையும் ஆசிரியரும் சற்குருவும் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் நிச்சயமாக அவரது வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். அவர் ஒரேயொருவரே. அதிமேலானவர் சிவபாபா ஆவார். அவரே பேசுகின்றார். பாபா குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார்: சிவபாபா பேசுவாரா? சங்கரர் பேசுவாரா? பிரம்மா பேசுவாரா? விஷ்ணு பேசுவாரா? (சிவனும் பிரம்மாவும் பேசுவார்கள், ஆனால் விஷ்ணுவும் சங்கரரும் பேசமாட்டார்கள் என்று யாரோ கூறினார்கள்) விஷ்ணுவின் இரு வடிவங்களே இலக்ஷ்மியும் நாராயணனும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறாயின் அவர்களால் பேச முடியாதா? அவர்கள் ஊமையா? (அவர்கள் இந்த ஞானத்தைப் பேச மாட்டார்கள்). நான் ஞானத்தைப் பற்றி பேசவில்லை. நான் அவர்களால் பேச முடியுமா என்றே கேட்கின்றேன். விஷ்ணுவோ அல்லது இலக்ஷ்மி நாராயணனோ பேசுவார்களா? சங்கரர் பேசமாட்டார் என்பது சரிதான். ஆனால் ஏனைய மூவராலும் ஏன் பேச முடியாது? இலக்ஷ்மியும் நாராயணனும் விஷ்ணுவின் இரு வடிவங்கள் என்பதால் நிச்சயமாக அவர்கள் பேசுவார்கள். அவர்களால் பேச முடியாதா? சிவபாபா அசரீரியானவர் என மக்கள் நம்புவதால் அவரால் எவ்வாறு பேச முடியும் என்று அவர்கள் வியக்கின்றார்கள். சிவபாபா இவரின் சரீரத்தில் பிரவேசித்துப் பேசுவதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பிரம்மாவும் பேச வேண்டும், ஏனெனில் அவர் தத்தெடுக்கப்பட்டுள்ளார். சந்நியாசிகள் துறவறம் மேற்கொண்டவுடன் தமது பெயர்களை மாற்றிக் கொள்கின்றார்கள். நீங்களும் துறவறமே மேற்கொண்டுள்ளீர்கள் என்பதால் உங்கள் பெயர்களும் மாற்றப்பட வேண்டும். பாபா ஆரம்பத்தில் வெவ்வேறு பெயர்களை உங்களுக்குக் கொடுத்தார். எனினும் புதிய பெயர்கள் கொடுத்தவர்கள் கூட மரணித்து விடுவதை அவர் கண்டார். அவர்கள் இந்த ஞானத்தைச் செவிமடுத்தவுடன் வியப்படைந்தார்கள். அவர்கள் இந்த ஞானத்தைச் செவிமடுத்தார்கள், அதனைப் பிறருக்கும் கூறினார்கள், அதன் பின்னர் ஓடிவிட்டார்கள். எனவே எத்தனை குழந்தைகளுக்கு பாபாவினால் பெயர்கள் கொடுக்க முடியும்? இக்காலத்தில் மாயை மிகவும் சக்திவாய்ந்தவளாக உள்ளாள். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்த போது அது விஷ்ணுதாமம் என்று அழைக்கப்பட்டது என்று புத்தி கூறுகின்றது. உங்கள் புத்தியில் இந்த குறிக்கோளும் உள்ளன. விஷ்ணுவின் இரு வடிவங்களான இலக்ஷ்மியும் நாராயணனும் இராச்சியத்தை ஆட்சி செய்தார்கள். அவ்வாறாயின் அவர்களால் ஏன் பேச முடியாது? பாபா இங்கு அல்லது இப்பொழுது என்பதைப் பற்றிப் பேசவில்லை. அசரீரியானவரால் எவ்வாறு பேச முடியும் என்று மக்கள் வினவுகின்றார்கள். அசரீரியானவர் எவ்வாறு வருகின்றார் என்பதுவும் அவர்களுக்குத் தெரியாது. அவரைத் தூய்மையாக்குபவர் என்று அவர்கள் அழைக்கின்றார்கள். அவரே ஞானக்கடலும் உயிருள்ளவரும் அன்புக்கடலும் ஆவார். அன்பு தூண்டுதலின் அடிப்படையில் இடம்பெற மாட்டாது. அவர் இவருக்குள் பிரவேசித்து குழந்தைகளாகிய உங்கள் மீது அன்பு செலுத்துகின்றார். ஆகையாலேயே நீங்கள் பரமாத்மா பரமதந்தையின் மடிக்குச் செல்லுங்கள் என்று கூறுகின்றீர்கள்: பாபா நான் உங்களுடனேயே உண்ணுகின்றேன், நீங்கள் கூறுவதையே நான் செவிமடுக்கின்றேன்…..அவரை நோக்கியே புத்தி செல்கின்றது. ஸ்ரீகிருஷ்ணர் உங்கள் புத்தியில் வருவதில்லை. தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உங்களைப் போன்று பாக்கியசாலிகள் வேறெவரும் இல்லை. நீங்கள் மிகவும் மேன்மையானதொரு பாகத்தைப் பெற்றுள்ள நடிகர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது ஒரு நாடகம். இதற்கு முன்னர் உங்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. தந்தை இப்பொழுது இவருக்குள் பிரவேசித்துள்ளார் என்பதால் நாடகத்திற்கு ஏற்ப அவர் மூலம் நாங்கள் செவிமடுக்கின்றோம். தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, பாபா அசரீரியானவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் ஆத்மாக்களான எங்களின் தந்தை ஆவார். இவ்விடயங்கள் எந்தச் சமயநூல்களிலும் எழுதப்படவில்லை. உங்கள் புத்தி இப்பொழுது எல்லையற்றதாக ஆகியுள்ளது. மாணவர்கள் கற்கும் போது வரலாறு, புவியியல் அனைத்தும் அவர்களது புத்திகளில் உள்ளன. எவ்வாறாயினும் பாபா எங்குள்ளார் என்பது எவரது புத்தியிலும் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனை மிகச்சரியாகப் புரிந்து கொள்கின்றீர்கள். இதனால் இந்தச் சந்தோஷம் உங்களுக்கு நடைமுறைரீதியாகவே உள்ளது. பாபா பரந்தாமத்திலிருந்து வந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த இதயபூர்வமான உரையாடலை நாள் முழுவதும் உங்கள் மத்தியில் நீங்கள் நடாத்த வேண்டும். இந்த ஞானத்தை அன்றி வேறு எதனைப் பற்றிப் பேசினாலும் அது அனைத்தையும் முற்றாக அழித்துக் கொள்வதாகும். நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்துக்காகவே உங்கள் வேலை போன்றவற்றைச் செய்ய வேண்டும். அத்துடன் இந்த ஆன்மீகச் சேவையையும் நீங்கள் செய்ய வேண்டும். இந்த பாரதம் உண்மையிலேயே சுவர்க்கமாக இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. இப்பொழுது தேவர்களின் படங்கள் அனைத்தினதும் மிகச்சரியான ஞானம் உங்களிடம் உள்ளது. முதல் இலக்கப் படமான இலக்ஷ்மி நாராயணனின் படத்தை எடுத்து அதை பற்றிச் சிந்தியுங்கள்: அவர்கள் உண்மையிலேயே பாரத இராச்சியத்தை ஆட்சி செய்தார்கள். எனவே ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருந்தது. இரவு முடிவடைந்ததும் பகல் ஆரம்பமானது. அதாவது கலியுகம் முடிவடைந்ததும் சத்தியயுகம் ஆரம்பமானது. கலியுகம் இரவு, சத்தியயுகம் காலை. அவர்கள் எவ்வாறு தமது இராச்சியத்தை அடைகின்றார்கள் என இந்த ஞானக்கடலைக் கடையுங்கள். ‘கடலினுள் கல்லை எறிந்தால் சிற்றலைகள் ஏற்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறே நீங்களும் ஒரு கல்லை எறிந்து மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். இதனையிட்டுச் சிந்தியுங்கள்: பாரதத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்தது அப்படித்தானே? அவர்களே பக்தி மார்க்கத்தில் தேவர்களுக்கு ஆலயங்களைக் கட்டினார்கள். பின்னர் அந்த ஆலயங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. அது நேற்றைய விடயமே. இப்பொழுது இது பக்தி மார்க்கமாயின் நிச்சயமாக அதன் பின்னர் இந்த ஞான மார்க்கம் இருக்கும். இவ்விடயங்கள் அனைத்தும் உங்கள் புத்திகளில் உள்ளது. தந்தை வந்து தனது வாழ்க்கை வரலாற்றை உங்களுக்குக் கூறுகின்றார். அதனை நீங்கள் ஏன் நினைவு செய்யவில்லை? பாபா வந்து இந்த ஞானம் முழுவதையும் எங்களுக்குக் கூறுகின்றார். நீங்களும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இதனை எவருக்கும் கூறலாம். இப்படமே எங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். இலக்ஷ்மியும் நாராயணனும் அதிசிறந்த அரசனும் அரசியும் ஆவார்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. அது நேற்றைய விடயமே. அவ்வாறாயின் அவர்கள் எவ்வாறு தமது இராச்சியத்தை இழந்தார்கள்? குழந்தைகள் இந்த ஞானம் முழுவதையும் செவிமடுத்த போதிலும் அவை சதா உங்கள் புத்தியில் நிலைத்து இருப்பதில்லை. நீங்கள் அதனை நினைவு செய்வதும் இல்லை. நீங்கள் அதனை நினைவு செய்வீர்களாயின் உங்களால் பிறருக்கு விளங்கப்படுத்தவும் முடியும். இது மிகவும் இலகுவானது! நீங்கள் இங்கே இலக்ஷ்மி நாராயணனைப் போன்று ஆகுவதற்கே வருகின்றீர்கள். இது 5000 வருடங்களுக்குரிய விடயம் என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ‘முன்னொரு காலத்திலே’ என்பதற்கு முன்னர் எதுவும் இருக்க முடியாது. பாரதத்தின் இக்கதையே அனைத்திலும் பழைமையானது. உண்மையிலேயே இதுவே உண்மையான கதையாகும். இதுவே அனைத்திலும் சிறந்த கதை. அது அவர்களது இராச்சியம். அந்த இராச்சியம் இப்பொழுது இல்லை. எவருக்கும் அதனைப் பற்றி எதுவும் தெரியாது. அது வரிசைக்கிரமமாக உங்கள் புத்தியில் கசிந்து கொண்டேயிருக்கும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள். எவ்வாறாயினும் எவரும் என்னை மிகச் சரியாக நினைவு செய்வதில்லை. தந்தையும் புள்ளியாவார், நாங்களும் புள்ளிகளே ஆவோம். இதுவுமே உங்கள் புத்தியில் நிலைத்திருப்பதில்லை. இது சிலரது புத்தியில் மிகவும் நன்றாகத் தொடர்ந்தும் கசிந்து கொண்டேயிருக்கிறது. நீங்கள் ஒருவருக்கு விளங்கப்படுத்துவதற்கு நாலைந்து மணித்தியாலங்கள் கூட ஆகலாம். இவை மிகவும் அற்புதமான விடயங்கள். அவர்கள் அமர்ந்திருந்து சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுக்கும் போது அதில் ஆர்வம் உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் தொடர்ந்தும் செவிமடுப்பார்கள். இங்கும் அவ்வாறே. இதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்களால் வேறு எதனைப் பற்றியும் சிந்திக்க முடியாது. இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதிலேயே அவர்கள் சந்தோஷம் அடைகின்றார்கள். அவர்கள் இவ்விடயங்களில் சந்தோஷம் அடைகின்றார்கள். ஏனைய அனைத்து வியாபாரங்கள் போன்றவற்றைக் கைவிட்டு இந்தச் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் உணர்கின்றார்கள். எவ்வாறாயினும் எவராலும் அவ்வாறு எதுவும் செய்யாது அமர்ந்திருக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுக்கின்றீர்கள். அத்தகைய மிகவும் நல்ல விடயங்களையே நீங்கள் புத்தியில் கடைகின்றீர்கள். நாங்கள் இந்தப் பொருட்களை விநியோகம் செய்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கின்றோம். எல்லாப் பொருட்களும் விநியோகத்திற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். இலக்ஷ்மி நாராயணன் எவ்வாறு தமது இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பதை இப்படத்தைக் காட்டி நீங்கள் எவருக்கும் விளங்கப்படுத்தலாம். அவர்களே பல ஆண்டுகளுக்கு முன்னர் உலக அதிபதிகளாக இருந்தார்கள். அந்த நேரத்தில் உலகில் எத்தனை பேர் இருந்தார்கள்? இப்பொழுது எத்தனை பேர் இருக்கின்றார்கள்? இவ்வாறாக நீங்கள் அவர்கள் மீது ஏதோ ஒரு கல்லை (உருவகமாக பேசுதல்) எறிந்து கொண்டே இருந்தாலே அவர்களால் இந்த ஞானக்கடலை தொடர்ந்தும் கடைய முடியும். அவர்கள் இக்குலத்தைச் சேர்ந்தவர்களாயின் அவர்கள் விரைவில் கவரப்படுவார்கள். அவர்கள் இக்குலத்தைச் சேராதவர் என்றால் அவர்களால் எதனையுமே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும், அதனால் அவர்கள் இங்கிருந்து சென்று விடுவார்கள். இது நாடித்துடிப்பைச் சோதித்துப் பார்க்கும் ஒரு விடயம். இந்த இனிய ஞானத்தையன்றி நீங்கள் வேறு எதனைப் பற்றியும் பேசக்கூடாது. இந்த ஞானத்தைத் தவிர வேறு எதனை நீங்கள் பேசினாலும் அது தீயது என்றும் அதில் எந்தச் சாரம்சமும் இல்லை என்றும் புரிந்து கொள்ளுங்கள். அனைத்தையும் செவிமடுப்பதில் ஆர்வமுள்ள பல குழந்தைகள் என்னிடம் உள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: தீயவை எதனையும் செவிமடுக்காதீர்கள். நன்மை பயக்கும் விடயங்களை மாத்திரமே செவிமடுங்கள். தவறினால் நீங்கள் உங்களிடமுள்ள சகல உண்மைகளையும் எக்காரணமும் இல்லாமல் அழித்துக் கொள்கின்றீர்கள். தந்தை வந்து இந்த ஞானத்தை மாத்திரமே உங்களுடன் பேசுகின்றார். அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் கூறுகின்றார்: வேறு எதனைப் பற்றியும் பேசாதீர்கள். அதில் நீங்கள் அதிகளவு நேரத்தை வீணாக்குகின்றீர்கள். ‘இன்ன இன்னார் இவ்வாறானவர், அவர் இதைச் செய்தார்’. இதுவே தீயது என்று அழைக்கப்படுகின்றது. உலகைப் பொறுத்தவரையில் அது வேறு விடயம். உங்களது ஒவ்வொரு விநாடியும் மிகவும் பெறுமதியானது. ஆகையால் நீங்கள் அத்தகைய விடயங்களைப் பேசவோ செவிமடுக்கவோ கூடாது. அதனைவிட எல்லையற்ற தந்தையை நினைவு செய்வது சிறந்தது. அதனால் உங்களால் அதிகளவு வருமானத்தையும் ஈட்ட முடியும். எங்கும் சென்று தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். இந்த ஆன்மீகச் சேவையைத் தொடர்ந்தும் செய்யுங்கள். நீங்களே உண்மையான மகா வீரர்கள். இந்தப் பாதையைக் காட்டுவதற்கு யாராவது உங்களைத் தேடி வரவேண்டும் என்ற அக்கறையை நாள் முழுவதும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: அல்ஃபாவான என்னை நினைவு செய்தால் நீங்கள் இராச்சியமான பீற்றாவைப் பெறுவீர்கள். அது மிகவும் இலகுவானது! இவ்வாறாக நீங்கள் எங்கும் சென்று சேவை செய்ய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்வதில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கும் ஏனையோருக்கும் நன்மை அளிங்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கே இங்கு வந்துள்ளார். குழந்தைகளாகிய நீங்களும் கற்று, பின்னர் பிறருக்குக் கற்பிக்கவுமே இங்கு வருகின்றீர்கள். நீங்கள் இங்கே உங்கள் நேரத்தை வீணாக்கவோ அல்லது சப்பாத்திகள் செய்யவோ வரவில்லை. நாள் முழுவதும் உங்கள் புத்திகள் சேவையை இட்டே வேலை செய்ய வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்குப் பயனற்ற எந்த விடயங்களையும் செவிமடுப்பதிலோ அல்லது பேசுவதிலோ உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இயன்றளவு படிப்பதில் உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள்.2. உங்களுக்கு யார் கற்பிக்கின்றார் என்ற ஆர்வத்தையும் சந்தோஷத்தையும் சதா பேணுங்கள். முயற்சி செய்வதை என்றுமே நிறுத்தாதீர்கள். உங்கள் உதடுகளில் இருந்து இந்த ஞான இரத்தினங்களை மாத்திரமே வெளிப்படுத்துங்கள்.
ஆசீர்வாதம்:
விவேகமானவர் ஆகி ஒரேநேரத்தில் மூவகையான சேவையையும் செய்து வெற்றியின் சொரூபம் ஆகுவீர்களாக.தற்காலத்திற்கு ஏற்ப எண்ணங்களினால், வார்த்தைகளினால், செயல்களால் ஒரேநேரத்தில் மூன்று வகையான சேவையும் இடம்பெற வேண்டும். உங்கள் வார்த்தைகள், செயல்களால் சேவை செய்யும் அதேவேளை உங்கள் மனதினால் தூய எண்ணங்களையும் மேன்மையான மனோபாவத்தையும் கொண்டிருந்து தொடர்ந்தும் சேவை செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் அதற்கான பலனைப் பெறுவீர்கள். ஏனெனில் உங்கள் மனம் சக்திவாய்ந்ததாக இருக்கின்ற போது உங்கள் வார்த்தைகளும் சக்தியினால் நிறைந்திருக்கும். இல்லாவிடின் அனைத்தையும் வாசித்த பின்னர் ஒரு கிளியைப் போன்று திரும்பவும் சொல்கின்ற பண்டிதர்கள் போல் ஆகுகிறீர்கள். ஒரு கியானி ஆத்மா, அதாவது ஒரு விவேகமான நபர், ஒரேநேரத்தில் மூவகையான சேவையையும் செய்வதால் வெற்றி அடைதல் என்ற ஆசீர்வாதத்தை பெறுகிறார்.
சுலோகம்:
வார்த்தைகளாலும் திருஷ்டியினாலும் அமைதியின், சக்தியின், சந்தோஷத்தின் அனுபவத்தைக் கொடுப்பதே மகாத்மாக்களின் சிறப்பாகும்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
சின்னஞ்சிறிய ஹோமியோபதி மாத்திரைகளால் கடுமையான நோயையும் பூரணமாகக் குணப்படுத்த முடிவது போன்றே மாஸ்ரர் சர்வசக்திவான்களாகிய உங்களால் எவருடைய கடுமையான சம்ஸ்காரங்கள் என்ற நோயையும் உங்களின் மனோபாவத்தாலும் பார்வையாலும் பூரணமாகக் குணப்படுத்த முடியும். ‘இந்த நோயை எவ்வாறு நான் பூரணமாகக் குணப்படுத்துவது?’ என்று அந்த மாத்திரை கேட்பதில்லை. அதேபோன்று மற்றவர்களை ஈடேற்றும் ஆத்மாக்களான நீங்கள் இந்த ஞானத்தின் மாஸ்ரர் ஞான சூரியன்களாகி ஆத்மாக்கள் அனைவரினதும் தூய்மையற்ற எண்ணங்களையும் மனோபாவங்களையும் எரிக்கும் சேவையைச் செய்ய வேண்டும். உங்களை இகழ்பவர்களை ஈடேற்றுங்கள்.