02.04.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே நீங்கள் இப்பழைய தூய்மையற்ற உலகில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருப்பது அவசியமாகும். ஏனெனில் நீங்கள் தூய்மையாக வேண்டும். உங்கள் ஸ்திதி உயரும்பொழுது அனைவருக்கும் நன்மை ஏற்படுகிறது.

கேள்வி:
ஓர் ஆத்மாவே தனது மிக மோசமான எதிரியும் தனது மிகச்சிறந்த நண்பரும் எனக் கூறப்படுகின்றது. உண்மையான நட்பு என்றால் என்ன?

பதில்:
சதா ஒரேயொரு தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதே உண்மையான நட்பாகும். உண்மையான நட்பு என்றால் ஒரேயொரு தந்தையை நினைவுசெய்து தூய்மையாகி முழு ஆஸ்தியையும் தந்தையிடம் இருந்து கோருவதாகும். தந்தை மாத்திரமே இந்த நட்பை உருவாக்குவதற்கான வழியை உங்களுக்குக் கூறுகின்றார். சங்கம யுகத்திலேயே ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் சொந்த சிறந்த நண்பர் ஆகுகின்றீர்கள்.

பாடல்:
நீங்கள் இரவை உறங்குவதிலும் பகலை உண்பதிலும் கழித்தீர்கள்.

ஓம் சாந்தி.
இப்பாடல் உண்மையில் பக்தி மார்க்கத்துக்கு உரியது. முழு உலகிலும் பாடல்களைப் பாடுவது சமயநூல்களைக் கற்பது யாத்திரைகள் செல்வது அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியதாகும். இந்த ஞான மார்க்கம் என்பதன் அர்த்தம் என்ன, பக்தி மார்க்கம் என்பதன் அர்த்தம் என்ன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே புரிந்து கொள்கின்றீர்கள். வேதங்கள், சமயநூல்கள் உபநிடதங்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. இந்த ஞானத்தின் வெகுமதி முதல் அரைக்கல்பத்திற்கு நீடிக்கின்றது, பக்தி அடுத்த அரைக்கல்பத்திற்கு நீடிக்கின்றது. பக்தி செய்யும் பொழுது நீங்கள் கீழிறங்க வேண்டும். 84 பிறவிகள் எடுக்கும்பொழுது நீங்கள் கீழிறங்கி பின்னர் ஒரு பிறவியில் இது உங்கள் மேலேறும் ஸ்திதி ஆகுகின்றது. இது இந்த ஞான மார்க்கம் என அழைக்கப்படுகின்றது. ஜீவன்முக்தி ஒரு விநாடியில் பெறப்பட முடியும் என இந்த ஞானத்தைப் பற்றி நினைவு கூரப்படுகின்றது. துவாபரயுகம் ஆரம்பமாகியது முதல் தொடர்ந்துள்ள இராவண இராச்சியம் முடிவடைய உள்ளது. பின்னர் இராம இராச்சியம் ஆரம்பமாகும். நாடகத்தில் நீங்கள் 84 பிறவிகளைப் பூர்த்தி செய்யும்பொழுது உங்கள் ஏறும் ஸ்திதியால் அனைவரும் நன்மை அடைகின்றனர். இவ்வார்த்தைகள் ஏதோவொரு சமயநூலில் ஏதோவோர் இடத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. உங்கள் ஸ்திதி உயரும்பொழுது அனைவருக்கும் நன்மை ஏற்படுகின்றது. ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். பல்வேறு வகையான சந்நியாசிகள் இருப்பதால் பல்வேறு வகையான கருத்துக்கள் எழுகின்றன. ஒவ்வொரு கல்பத்தினதும் ஆயுட்காலம் நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனச் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளன. இது 10000 வருடங்கள் நீடிக்கின்றது என்பது சங்கராச்சாரியாரின் கருத்தாகும். அத்தகைய பெரும் வேறுபாடு காணப்படுகின்றது. இது நூறாயிரக்கணக்கான வருடங்கள் நீடிப்பதாக இன்னமும் சிலர் கூறுகின்றனர். கலியுகத்தில் பல மனிதர்களும் பல கருத்துக்களும் பல்வேறு சமயங்களும் உள்ளன. சத்தியயுகத்தில் ஒரேயொரு வழிகாட்டல் மாத்திரமே உள்ளது. தந்தை இங்கிருந்து உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இந்த ஞானத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார். இதை உங்களுக்குக் கூறுவதற்கு அவருக்கு எவ்வளவு காலம் எடுக்கின்றது? அவர் தொடர்ந்தும் உங்களுக்கு இவ்விடயங்களைக் கூறுகின்றார். இவை அனைத்தும் ஏன் முன்னரே உங்களுக்குக் கூறப்படவில்லை என நீங்கள் கேட்கக்கூடாது. ஒரு பாடசாலையில் குழந்தைகளுக்கு வரிசைக்கிரமமாகவே கல்வி புகட்டப்படுகின்றது. சிறு குழந்தைகளின் அங்கங்கள் சிறியவையாகவே உள்ளதால் அவர்களுக்குச் சிறிதளவே கற்பிக்கப்படுகின்றது. அவர்கள் வளர்ந்து வரும்பொழுது அவர்களது அங்கங்களும் வளர்ச்சி அடைவதால் அவர்களது புத்தியில் உள்ள பூட்டு திறக்கப்பட்டு அவர்களால் தங்களது பாடங்களைக் கிரகிக்கக் கூடியதாக உள்ளது. சிறு குழந்தைகளின் புத்தியில் எதுவும் கிரகிக்கப்பட முடியாது. அவர்கள் வளர்ச்சியடையும் பொழுது வழக்கறிஞர்கள், நீதிபதிகள் போன்றோர் ஆகுகின்றனர். இங்கும் அதுவே நிகழ்கின்றது: சிலரின் புத்தியால் இந்த ஞானத்தை மிக நன்றாகக் கிரகிக்க முடியும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குவதற்கே வந்துள்ளேன். எனவே நீங்கள் இப்பொழுது தூய்மையற்ற உலகில் விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாக்கள் தூய்மையாகும் பொழுது அவர்களால் இத்தூய்மையற்ற உலகில் தங்கியிருக்க முடியாது. தூய்மையற்ற உலகில் ஆத்மாக்கள் தூய்மையற்றவர்கள், மனிதர்களும் தூய்மையற்றவர்கள். தூய உலகில் மனிதர்கள் தூய்மையாக இருப்பார்கள். தூய்மையற்ற மனிதர்கள் தூய்மையற்ற இந்த உலகிலேயே வசிக்கின்றனர். இது இராவண இராச்சியம். அரசரும் அரசியும் எவ்வாறோ அவ்வாறே அவர்களது பிரஜைகளும் இருக்கிறார்கள். இந்த ஞானம் முழுவதும் புத்தியால் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்த நேரத்தில் எவருடைய புத்தியிலும் கடவுள் மீது அன்பு இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். உங்களில் சிலர் அவர் மீது உள்ளார்த்தமாக அன்பு கொண்டிருக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையை நேசிக்கின்றீர்கள். நீங்கள் தந்தையை இனங்கண்டு கொண்டதால் அவர்மீது மரியாதை வைத்திருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது இங்கு பாபாவின் முன்னிலையில் நேரடியாக இருக்கின்றீர்கள். நீங்கள் சிவபாபா கூறுவதைச் செவிமடுக்கின்றீர்கள். அவரே மனித உலக விருட்சத்தின் விதையும் ஞானக்கடலும் அன்புக்கடலும் பேரானந்தக்கடலும் ஆவார். கீதை ஞானத்தை அருள்பவராகிய திரிமூர்த்தி சிவனான பரமாத்மாவாகிய பரமதந்தையே பேசுகிறார். நீங்கள் “திரிமூர்த்தி” என்ற வார்த்தையை நிச்சயமாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் திரிமூர்த்தி நினைவு கூரப்பட்டுள்ளது. பிரம்மா மூலம் ஸ்தாபனை இடம்பெறுகின்றது. எனவே இந்த ஞானம் நிச்சயமாக பிரம்மா மூலமாகவே கொடுக்கப்பட்டிருக்கும். “கடவுள் சிவன் பேசுகின்றார்” என ஸ்ரீகிருஷ்ணர் கூறமாட்டார். தூண்டுதல் மூலம் எதுவும் நிகழ்வதும் இல்லை. சிவபாபாவால் அவரில் (கிருஷ்ணரில்) பிரவேசிக்கவும் முடியாது. சிவபாபா அந்நிய உலகினுள் பிரவேசிக்கின்றார். சத்தியயுகம் ஸ்ரீகிருஷ்ணரின் பூமியாகும். எனவே ஒவ்வொருவரின் புகழும் வேறுபட்டது. இதுவே பிரதான விடயம். சத்தியயுகத்தில் எவருமே கீதையைக் கற்பதில்லை. அது பக்தி மார்க்கத்தில் பிறவிபிறவியாகக் கற்கப்படுகின்றது. இந்த ஞான மார்க்கத்தில் அது நிகழ்வதில்லை. இந்த ஞான விடயங்கள் பக்தி மார்க்கத்தில் இருப்பதில்லை. படைப்பவரான தந்தை இப்பொழுது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். எந்த மனிதரும் படைப்பவராக இருக்க முடியாது. “நானே படைப்பவர்” என ஒரு மனிதரால் கூறமுடியாது. தந்தையே கூறுகின்றார்: நானே மனித உலக விருட்சத்தின் விதை; நானே ஞானக்கடலும் அன்புக்கடலும் அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் ஆவேன். ஸ்ரீகிருஷ்ணரின் புகழ் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனவே அவர்களின் புகழ்களின் வேறுபாட்டைச் சரியாக எழுதுங்கள். அதனால் மக்கள் அதை வாசித்தவுடன் ஸ்ரீகிருஷ்ணர் கீதை ஞானத்தை அருள்பவரல்ல என்பதை உடனடியாகப் புரிந்து கொள்வார்கள். இந்த ஒரு விடயத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பொழுது நீங்கள் வெற்றி பெறுவீர்கள். சிவ பக்தர்கள் தங்கள் கழுத்தை வெட்டவும் தயாராக இருப்பதைப் போன்று மக்கள் ஸ்ரீகிருஷ்ணருக்காகத் தங்களை வருத்திக் கொள்ளவும் செய்கின்றனர். அவர்கள் அனைவரும் (சிவ பக்தர்கள்) சிவனிடம் செல்லவே விரும்புகின்றனர். அதேபோன்று ஸ்ரீகிருஷ்ண பக்தர்கள் தாங்கள் ஸ்ரீகிருஷ்ணரிடம் செல்வதாக நினைக்கின்றனர். எவ்வாறாயினும் எவரும் ஸ்ரீகிருஷ்ணரிடம் செல்ல முடியாது. ஸ்ரீகிருஷ்ணரிடம் தங்களை அர்ப்பணித்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. மக்கள் பெண்தெய்வங்களிடம் தங்களை அர்ப்பணிக்கின்றனர்; அவர்களில் எவரும் தேவர்களுக்குத் தங்களை அர்ப்பணிப்பதில்லை. நீங்களே அந்தப் பெண்தெய்வங்கள். நீங்கள் சிவபாபாவிற்கு உரியவர்கள். எனவே அவர்களும் சிவபாபாவிடம் தங்களை அர்ப்பணிக்கின்றார்கள். சமயநூல்களில் வன்முறை விடயங்கள் எழுதப்பட்டுள்ளன. நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள். உங்கள் மனங்கள், சரீரங்கள், செல்வம் ஆகியவற்றை அவரிடம் அர்ப்பணிக்கின்றீர்கள். இதை விடவும் மேலானது எதுவும் கிடையாது. இதனாலேயே மக்கள் சிவனிடமும் பெண்தெய்வங்களிடமும் தங்களை அர்ப்பணிக்கின்றனர். மக்கள் சிவகாசியில் தங்களைப் பலியிடுவதை அரசாங்கம் இப்பொழுது நிறுத்தி விட்டது. அந்த வாள் இப்பொழுது அங்கு இல்லை. பக்தி மார்க்கத்தில் ஒருவர் தற்கொலை செய்வாராயின் அதுவே அவரது சொந்த எதிரி ஆகுவதற்கான வழியாகும். உங்களது சொந்த நண்பர் ஆகுவதற்கு ஒரேயொரு வழி மாத்திரமே உள்ளது. தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார்: தூய்மையாகி உங்கள் முழு ஆஸ்தியையும் தந்தையிடம் இருந்து கோரிக் கொள்ளுங்கள். ஒரேயொரு தந்தையின் ஸ்ரீமத்தைத் தொடர்ந்தும் பின்பற்றுங்கள். இதுவே உண்மையான நட்பாகும். பக்தி மார்க்கத்தில் உள்ள மனித ஆத்மாக்கள் தங்களுக்கே எதிரிகளாக இருக்கிறார்கள். தந்தை வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கும்பொழுது நீங்கள் உங்களின் சொந்த நண்பர் ஆகுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகி தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொள்கின்றீர்கள். தந்தை சங்கமயுகத்தில் வந்து ஒவ்வொரு ஆத்மாவையும் அவரவரது சொந்த நண்பர் ஆக்குகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது சொந்த நண்பர் ஆகுகின்றீர்கள். அவர்கள் ஸ்ரீமத்தைப் பெறும்பொழுது தாங்கள் தந்தையின் வழிகாட்டல்களை மாத்திரமே பின்பற்றுவோம் என உணர்கின்றனர். அரைக்கல்பமாக நீங்கள் உங்களின் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றி வந்தீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலமே நீங்கள் சற்கதியைப் பெறுகிறீர்கள். இதில் நீங்கள் உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பயன்படுத்தக் கூடாது. தந்தை உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். நீங்கள் தேவர்கள் ஆகுவதற்காகவே இங்கே வந்துள்ளீர்கள். இங்கு நற்செயல்களைச் செய்வதன் மூலம் உங்களது அடுத்த பிறவிகளில் அமரத்துவ பூமியில் நல்ல பலனைப் பெறுகிறீர்கள். இது மரண பூமி. எவ்வாறாயினும் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதன் முக்கியத்துவத்தை வரிசைக்கிரமமாகப் புரிந்து கொள்கின்றீர்கள். உங்களில் சிலரின் புத்தியால் இந்த ஞானத்தை மிக நன்றாகக் கிரகிக்கக் கூடியதாக உள்ளது. ஏனையவர்களால் அதைக் கிரகிக்க முடியாதுள்ளது. எனவே ஆசிரியரால் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஓர் ஆசிரியரிடம் கருணையையோ ஆசீர்வாதத்தையோ கேட்பீர்களா? ஓர் ஆசிரியர் கற்பித்த பின்னர் தனது வீட்டுக்குச் செல்கின்றார். குழந்தைகள் பாடசாலைக்குச் செல்லும் பொழுது அவர்கள் முதலில் கடவுளிடம் பிரார்த்தனை செய்கின்றார்கள்: ஓ கடவுளே! என்னைச் சித்தியடையச் செய்யுங்கள், நான் உங்களுக்குப் பிரசாதம் படைக்கின்றேன்! அவர்கள் தங்கள் ஆசிரியரிடம் “எனக்கு ஆசீர்வாதம் கொடுங்கள்” என்று ஒருபொழுதும் கூறமாட்டார்கள். இந்த நேரத்தில் பரமாத்மாவே எங்களது ஆசிரியரும் எங்கள் தந்தையும் ஆவார். ஒரு குழந்தைக்குத் தனது தந்தையின் ஆசீர்வாதம் எப்பொழுதுமே உள்ளது என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. ஒரு மனிதன் குழந்தைகள் பெற விரும்புகின்றான்: எனக்கு ஒரு மகன் பிறக்கும்போது எனது செல்வத்தை என்னால் அவனுக்குக் கொடுக்க முடியும். அதுவே ஆசீர்வாதமாகும். தனது தந்தையின் ஆஸ்தியை மகன் பெறுவது நியதியாக உள்ளது. ஆனால் இப்பொழுது அனைவருமே தொடர்ந்தும் தமோபிரதான் ஆகுகிறார்கள். தந்தையைப் போன்றே குழந்தைகளும் இருக்கின்றார்கள். நாளுக்கு நாள் அனைத்தும் தமோபிரதான் ஆகுகின்றன. இயற்கையும் தமோபிரதான் ஆகுகிறது. இது துன்ப பூமியாகும். இந்த உலகம் இன்னமும் 40000 வருடங்கள் நீடிக்குமாயின் அதன் நிலை என்னவாகும்? மனிதர்களின் புத்தி முற்றிலும் தமோபிரதான் ஆகியுள்ளது. இப்பொழுது உங்கள் புத்தியைத் தந்தையுடனான யோகத்தில் இணைப்பதால் நீங்கள் ஒளியைப் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் நிலைத்து இருக்கின்றீர்களோ அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் ஞானோதயம் பெற்றவர்கள் ஆகுவீர்கள். நினைவு செய்வதனால் ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை ஆகுவதுடன் உங்கள் ஞானோதயமும் அதிகரிக்கின்றது. நீங்கள் நினைவு செய்யாதிருந்தால் ஞானோதயம் பெற மாட்டீர்கள். நினைவு செய்வதனால் உங்கள் ஞானோதயம் அதிகரிக்கின்றது. உங்களுக்கு நினைவு இல்லாவிட்டாலோ அல்லது நீங்கள் பாவச் செயல்களைச் செய்தாலோ உங்கள் ஒளி மங்கும். நீங்கள் சதோபிரதான் ஆகுவதற்கே முயற்சி செய்கின்றீர்கள். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். நினைவு செய்வதனால் ஆத்மாக்களாகிய நீங்கள் தொடர்ந்தும் தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் எழுதலாம்: ஸ்ரீகிருஷ்ணரால் படைப்பவரின் அல்லது படைப்பின் ஞானத்தைக் கொடுக்க முடியாது. ஸ்ரீகிருஷ்ணர் என்ற அந்தஸ்து ஒரு வெகுமதியாகும். ‘ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா இப்பொழுது தனது இறுதி 84வது பிறவியில் இருப்பதுடன் இப்பொழுது மீண்டும் ஒருமுறை இந்த ஞானத்தைப் பெறுகின்றார்’ என்றும் எழுதுங்கள். அதன் பின்னர் மீண்டும் அவர் முதல் இலக்கம் ஆகுவார். சத்தியயுகத்தில் 900000 பேர் இருப்பார்கள் என்றும் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். அதன்பின்னர் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும். 84 பிறவிகளை முழுமையாக எடுக்கின்ற பல பணிப்பெண்களும் வேலையாட்களும் அங்கு இருப்பார்கள். அது 84 பிறவிகளின் கணக்காகும். முழுமையான புள்ளிகளுடன் பரீட்சையில் சித்தி எய்துபவர்களே முதலில் வருபவர்கள் ஆவார்கள். நீங்கள் தாமதமாக வருமளவிற்கு உங்கள் கட்டடமும் பழையதாகவே இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஒரு கட்டடம் முதலில் கட்டப்படும் பொழுது அது புதிதாகவே இருக்கின்றது. பின்னர் நாளுக்கு நாள் அதன் ஆயுட்காலம் குறைவடைகின்றது. அங்கே தங்க மாளிகைகளே இருப்பதால் அவை பழைமை அடைய முடியாது. தங்கம் எப்பொழுதும் பிரகாசமாக உள்ளது. இருப்பினும் அது நிச்சயமாகச் சுத்தம் செய்யப்பட வேண்டும். நிஜத் தங்கத்தில் நகை செய்யப்பட்டிருந்தாலும் அதன் பிரகாசம் குறைவடைவதால் அதனை மெருகூட்ட வேண்டிய அவசியம் உள்ளது. நீங்கள் புதிய உலகிற்குச் செல்ல உள்ளீர்கள், இந்த நரகத்தில் இதுவே உங்கள் இறுதிப் பிறவி என்ற சந்தோஷம் குழந்தைகளாகிய உங்களுக்குச் சதா இருக்க வேண்டும். உங்கள் கண்களால் பார்க்கின்ற அனைத்தும் இப் பழைய உலகிற்கு அல்லது பழைய சரீரங்களுக்கு உரியது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் புதிய சத்தியயுகத்து உலகில் புதிய சரீரத்தைப் பெற உள்ளீர்கள். அங்கு ஐந்து தத்துவங்களும் புதிதாக உள்ளன. இவ்வாறாக இந்த ஞானக்கடலைக் கடையுங்கள். இது உங்கள் கல்வியாகும். உங்களது இக் கல்வி இறுதிவரை தொடரும். கல்வி முடிவடைந்ததும் விநாசம் இடம்பெறும். ஆகையால் உங்களை நீங்கள் மாணவர்கள் என்றே கருதி கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற சந்தோஷத்தில் நிலைத்திருக்க வேண்டும். இந்தச் சந்தோஷம் சிறிய விடயமல்ல. எவ்வாறாயினும் மாயை உங்களைப் பிழையான செயல்களைச் செய்ய வைக்கின்றாள். சிலர் ஐந்து முதல் ஆறு வருடங்கள் தூய்மையாக இருக்கின்றார்கள். பின்னர் மாயை அவர்களை வீழ்த்தி விடுகின்றாள். நீங்கள் ஒருமுறை விழுந்து விட்டால் உங்களால் மீண்டும் அந்த ஸ்திதியைப் பெற முடியாது. நீங்கள் வீழ்ந்து விட்டீர்கள் என்பதை அறிந்ததும் நீங்களே உங்களை வெறுக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அனைத்தையும் நினைவுசெய்ய வேண்டும். ஆத்மாக்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் நீங்கள் இப்பிறவியில் செய்துள்ள பாவங்களைப் பற்றியும் தெரியும். உங்களில் சிலருக்கு மந்த புத்தியே உள்ளது, ஆனால் ஏனையோருக்குத் தொலைநோக்குடைய பரந்த புத்தி உள்ளது. உங்கள் குழந்தைப் பருவ வரலாற்றை உங்களால் நினைவுசெய்ய முடியும். பாபாவும் தனது குழந்தைப் பருவ வரலாற்றை உங்களுக்குக் கூறுகின்றார். பாபா தான் வாழ்ந்த வீட்டைக் கூட நினைவுசெய்கின்றார். ஆனால் இப்பொழுது அந்த இடத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டிருக்கும். உங்களுக்கு ஆறு வயதானதில் இருந்து உங்கள் வாழ்க்கை வரலாற்றை உங்களால் நினைவுசெய்ய முடியும். அதனை நீங்கள் மறந்திருந்தால் நீங்கள் மந்த புத்தி உடையவர் என்றே அழைக்கப்படுவீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் சுயசரிதையை எழுதுங்கள். அது உங்கள் சொந்த வாழ்க்கை பற்றிய கேள்வியாகும். உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்துள்ள அதிசயங்களை உங்களால் அறிய முடியும். காந்தி, நேரு போன்றோரின் வாழ்க்கை வரலாறு பல பெரிய தொகுதிகளைக் கொண்ட புத்தகங்களாக எழுதப்பட்டுள்ளன. உண்மையில் உங்கள் வாழ்க்கை மிகவும் பெறுமதிவாய்ந்தது. இது ஓர் அற்புதமான வாழ்க்கை. இது உங்களின் அதி பெறுமதியான வாழ்க்கையாகும். அதனை உங்களால் விவரிக்கக்கூட முடியாது. இந்நேரத்தில் நீங்கள் மாத்திரமே சேவை செய்கின்றீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் எந்தச் சேவையும் செய்வதில்லை. உங்கள் வாழ்க்கைகள் மிகவும் பெறுமதியானவை. நீங்கள் பிறருடைய வாழ்க்கையையும் உங்களுடையதைப் போன்று பெறுமதியானவை ஆக்குகின்ற சேவையைச் செய்கின்றீர்கள். நன்றாகச் சேவை செய்கின்றவர்கள் புகழ்வதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறார்கள். வைஷ்ணவி தேவி போன்றோரின் ஆலயங்கள் உள்ளன. நீங்கள் இப்பொழுது உண்மையான வைஷ்ணவர்கள் ஆகுகின்றீர்கள். வைஷ்ணவர்கள் என்றால் தூய்மையானவர்கள் என்று அர்த்தம். இப்பொழுது உங்கள் உணவு தூய மரக்கறி உணவு (வைஷ்ணவ்) ஆகும். அதிமுதன்மையான விகாரத்தைப் பொறுத்த வரையும் நீங்கள் வைஷ்ணவர்கள் (தூய்மையானவர்கள்) ஆவீர்கள். பிரம்மா குமார்களும் பிரம்மா குமாரிகளுமாகிய நீங்கள் அனைவரும் ஜெகதாம்பாளின் குழந்தைகள். பிரம்மாவும் சரஸ்வதியும் உள்ளனர். ஏனைய நீங்கள் அனைவரும் அவர்களின் குழந்தைகள். பெண் தெய்வங்கள் வரிசைக்கிரமம் ஆனவர்கள், அதற்கேற்பவே அவர்கள் வழிபடப்படுகின்றார்கள். எனினும் அவர்களுக்கு அதிகளவு கரங்கள் உள்ளன எனக் கூறுதல் பயனற்றதாகும். பலரையும் நீங்கள் உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குவதால் பல கரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. பிரம்மா நூறு கரங்களுடன் அல்லது ஆயிரம் கரங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவ்விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. தந்தை உங்களுக்குக் கூறுகின்றார்: தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். எவருக்கும் பிழையான பாதையைக் காட்டுவதனால் அவர்களுக்குரிய அனைத்தையும் அழித்து விடாதீர்கள். ஒரேயொரு பிரதான கருத்தை விளங்கப்படுத்துங்கள்: தந்தையையும் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. புகழுக்கும் பூஜிப்பதற்கும் தகுதி உடையவர் ஆகுவதற்கு உண்மையான வைஷ்ணவர்கள் ஆகுங்கள். தூய உணவை உண்பதுடன் நீங்கள் தூய்மையாகவும் இருக்க வேண்டும். உங்கள் அதி பெறுமதியான வாழ்க்கையில் ஏனைய பலருக்கும் சேவை செய்து அவர்களின் வாழ்க்கைகளை மேன்மையானது ஆக்குங்கள்.

2. ஆத்மாவான உங்கள் ஒளி அதிகரிக்கும் வகையில் தந்தையுடன் அத்தகைய யோகத்தைச் செய்யுங்கள். உங்கள் ஒளியை மங்கச் செய்யும் எந்தப் பாவச் செயலையும் செய்யாதீர்கள். உங்கள் சொந்த நண்பர் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் ஆதி ஸ்திதி என்ற ஆசனத்தில் ஸ்திரமாக இருப்பதன் மூலம் பாதகமான சூழ்நிலைகளை வெற்றி கொள்ளும் மாஸ்ரர் படைப்பவர் ஆகுவீர்களாக.

பாதகமான சூழ்நிலைகள் சடப் பொருளின் ஊடாக வருகின்றன. எனவே ஒரு சூழ்நிலை என்பது படைப்பாகும். நீங்கள் உங்களின் சொந்த ஸ்திதியுடன் ஒரு படைப்பவர் ஆவீர்கள். ஒரு மாஸ்ரர் படைப்பவர் அல்லது மாஸ்ரர் சர்வசக்திவானால் தோல்வி அடைய முடியாது. அது அசாத்தியமானது. ஒருவர் தனது ஆசனத்தை விட்டு நீங்கும்போதே அவர் தோல்வி அடையமுடியும். உங்களின் ஆசனத்தை விட்டு நீங்குதல் என்றால் சக்தியற்றவர் ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் உங்களின் ஆசனத்தில் இருப்பதன் அடிப்படையில் இயல்பாகவே சக்தியைப் பெறுவீர்கள். தமது ஆசனத்தில் இருந்து கீழே இறங்குபவர்கள் மாயையின் தூசிக்குள் சென்று விடுகிறார்கள். மரணித்து வாழுகின்ற பிறப்பை எடுத்துள்ள பாப்தாதாவின் அதியன்பிற்குரிய பிராமணக் குழந்தைகளால் ஒருபோதும் சரீர உணர்வெனும் களிமண்ணில் விளையாட முடியாது.

சுலோகம்:
திடசங்கற்பம், கடும் சம்ஸ்காரங்களை மெழுகைப் போல் உருகச் செய்துவிடும்.

அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வினால் சதா வெற்றியாளராக இருங்கள்.

நீங்கள் இந்த ஞான சொரூபமாக இருப்பதைப் போல் அன்பு சொரூபம் ஆகுங்கள். இந்த ஞானமும் அன்பும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். ஏனெனில் இந்த ஞானம் விதை, அன்பு தண்ணீர் ஆகும். விதைக்கு நீர் கிடைக்காவிட்டால் அதனால் பழத்தைத் தர முடியாது. இந்த ஞானத்துடன் கூடவே இதயத்தில் அன்பு இருந்தால் நீங்கள் பேறு என்ற பழத்தைப் பெறுவீர்கள்.