14.11.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அதிகாலையில் விழித்தெழுந்து தந்தையை நினைவுசெய்தால், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். அதிகாலை அமிர்தவேளை மிகவும் சிறந்தவை.
கேள்வி:
கீழ்ப்படிவான குழந்தைகளின் அடையாளங்கள் என்ன?பதில்:
கீழ்ப்படிவான குழந்தைகள் அதிமேலான தந்தையின் மேன்மையான வாசகங்களைத் தங்கள் தலைமேல் வைத்திருக்கின்றார்கள், அதாவது, அதனைப் பயிற்சி செய்கிறார்கள். அவர்களின் நடத்தை இராஜரீகமாக இருக்கின்றது. அவர்கள் மிகவும் பொறுமைசாலிகளாக இருக்கின்றார்கள். உலக அதிபதிகள் ஆகுகின்ற மறைமுகமான போதையை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். கீழ்ப்படிவான குழந்தைகள் தங்களது எச்செயல்களினாலும் தந்தைக்கு அவதூறை ஏற்படுத்த மாட்டார்கள். தந்தையை அவதூறு செய்கின்ற குழந்தைகள், அதாவது, தந்தைக்குக் கீழ்ப்படிவற்ற குழந்தைகள் பெருமளவு அவச்சேவை செய்கின்றார்கள். கீழ்ப்படிவான குழந்தைகள் சதா தந்தையைப் பின்பற்றுவதுடன், ஒருபோதும் பிழையான செயல்களில் ஈடுபடவும் மாட்டார்கள்.பாடல்:
உங்கள் ஆகாய சிம்மாசனத்தை விட்டிறங்கிக் கீழே பூமிக்கு வாருங்கள்!ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இரு வரிகளைச் செவிமடுத்தீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதன் அர்த்தத்தை, அதாவது, தந்தை இங்கிருக்கின்றார் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இந்த ஞானத்தைப் பற்றி அல்லது கடவுளைச் சந்திப்பதைப் பற்றி மக்கள் கூறுவன யாவும் பிழை என்பதால், தந்தை இங்கே அமர்ந்திருந்து சரியான விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் பாடலின் வார்த்தைகளைச் செவிமடுத்தீர்கள்:உங்கள் ஆகாய சிம்மாசனத்தை விட்டிறங்கிக் கீழே பூமிக்கு வாருங்கள். எவ்வாறாயினும், ஆகாய சிம்மாசனம் எதுவென்பது எவருக்கும் தெரியாது. தூய்மையாக்குபவர் வரவேண்டும். கடவுள் இல்லை எனச் சிலர் கூறுகின்றார்கள், ஆனால் சிலரோ அனைவருமே கடவுள் எனக் கூறுகின்றார்கள். எனவே, அவர் ஏன் வரவேண்டும்? தந்தை இப்பொழுது வந்து விட்டார் என்பதனால், நீங்கள் பக்தி மார்க்கத்தின் அந்தப் பாடல்களைச் செவிமடுக்க விரும்புவதில்லை என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். தூய்மையாக்குபவர் வந்து, உங்களுக்குத் தனது அறிமுகத்தைக் கொடுத்து, உங்களுக்குப் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களையும் விளங்கப்படுத்துகின்றார். இவ்வுலகிலுள்ள வேறு எவராலும் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. இங்கும்கூட வெவ்வேறான எண்ணக் கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் கொண்ட பலர் இருக்கின்றார்கள். மனிதர்கள் தூய்மையாகுவது அசாத்தியம் என்று அவர்கள் கூறுகின்றார்கள். கடவுள் வராது விட்டால், எவ்வாறு எவரேனும் தூய்மையாக முடியும்? கடவுள் மாத்திரமே வந்து, உங்களுக்கு இந்தக் கற்பித்தல்களைக் கொடுப்பதுடன், இதன் மூலம் பெறப்படுகின்;ற பேறுகள் எத்தனை மகத்தானவை என்ற ஆசையையும் ஏற்படுத்துகின்றார். ‘எனக்கு உரியவராகிய பின்னர், நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாது விட்டால், தண்டனை இருக்கும்' எனத் தந்தை கூறுகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தனது சொந்த மகனின் நடத்தை சரியில்லாததை ஒரு (லௌகீக) தந்தை பார்க்கும் பொழுது, அவர் மகனை கன்னத்தில் அறைவார். இந்தத் தந்தை எவரது கன்னத்தையும் அறைவதில்லை. அவர் விளங்கப்படுத்துகின்றார். சிலர் தங்கள் சத்தியத்தை இரத்தத்தில் எழுதிய பின்னரும், தோற்கடிக்கப்படுகின்றார்கள். தூய்மை ஆகுவதனால், தாங்கள் எதனைப் பெறுகிறோம் என்பதை மக்கள் அறியாமல் உள்ளார்கள். தூய்மையற்றவர் என்று அழைக்கப்படுகின்றவர் யார்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: விகாரத்தில் ஈடுபடுகின்றவர்கள் தூய்மையற்றவர்கள் ஆவார்கள். விகாரத்தைத் துறப்பது அசாத்தியம் என மக்கள் நினைக்கிறார்கள். தேவர்கள் முற்றிலும் விகாரம் அற்றவர்களாக இருந்தார்கள் என அவர்களிடம் கூறுங்கள். அவர்களிடம் நீங்கள் படங்களைக் காட்ட வேண்டும். இவ்வுலகம் விகாரம் அற்றதாக இருந்தது. தூய்மை இருந்தபொழுது, பாரதம் செல்வம் மிக்கதாக இருந்தது; அது சிவாலயமாக இருந்தது. விகாரம் இல்லாமல், எவ்வாறு உலக சனத்தொகை அதிகரிக்கும் என மக்கள் கரிசனை கொள்கின்றார்கள். அரசாங்கமோ சனத்தொகை அதிகரிப்பதை நிறுத்துகின்ற கரிசனையை கொண்டுள்ளது. இருந்தும், ஒவ்வொரு வருடமும் சனத்தொகை அதிகளவில் அதிகரிக்கின்றது. அதனைக் குறைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இங்கே எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: நீங்கள் தூய்மையாகினால், நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குவேன். இந்த வருமானம் மகத்தானது. மாயையை வென்றவர்கள் ஆகுவதனால், உண்மையில் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இராவணனை வெற்றி கொண்டு, இராம இராச்சியத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். இவ்விகாரங்கள் அங்கே இருக்க முடியாது; அவற்றை நீங்கள் வெற்றி கொண்டிருப்பீர்கள். இவ்விடயங்களை அரிதாகவே எவரும் புரிந்து கொள்கின்றனர். அவர்கள் கூறுகின்றார்கள்: அது இல்லாமல் எவ்வாறு உலகம் தொடரும்? அவ்வாறாகப் பேசுபவர்கள் ஆதிசனாதன தேவதேவியர் தர்மத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எங்கு சொற்பொழிவு ஆற்றினாலும், ‘கடவுள் பேசுகின்றார்’ என்று கூறுங்கள். கடவுள் கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி. இதனை வெற்றி கொள்வதன் மூலம், நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். விளக்கம் மிகவும் நேரடியாகவே கொடுக்கப்பட்டுள்ளது, இருந்தும், அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அல்லது ஒருவேளை விளங்கப்படுத்துபவர்கள் அந்தளவு திறமைசாலிகளாக இல்லாதிருக்கலாம். சில குழந்தைகள் 5 சதவீத பெறுமதிக்கேனும் புரிந்து கொள்வதில்லை என்று பாபா புரிந்து கொள்கின்றார். அல்லது அவர்களே முழுமையான யோகிகள் ஆகாததால், அவர்களால் சக்தியைப் பெற முடிவதில்லை. நினைவுசெய்வதன் மூலம் மாத்திரமே, நீங்கள் சக்தியைப் பெறுகின்றீர்கள். பாபா சர்வசக்திவான். நீங்கள் யோகம் செய்தால், உங்களால் சக்தியைப் பெற முடியும். பல குழந்தைகள் மிகக் குறைவாகவே யோகம் செய்கின்றார்கள். எவருமே பாபாவிற்கு உண்மையை எழுதுவதில்லை. அரிதாகவே, எவரும் தமது யோக அட்டவணையை எழுதுகின்றார்கள். ஆசிரியர்களே தமது அட்டவணையை எழுதாத பொழுது, மாணவர்கள் எவ்வாறு அதனை எழுதுவார்கள்? பல மாணவர்கள் யோகத்தில் சக்திமிக்கவர்களாக இருக்கின்றார்கள். தந்தையை நினைவு செய்வதே பிரதான விடயம். ‘யோகம்' என்ற வார்த்தை சமயநூல்களில் இருந்து பெறப்பட்டது. அதனைக் கேட்கும் பொழுது மக்கள் குழப்பம் அடைகின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: எங்களுக்கு யோகம் கற்பியுங்கள்! ஓ ஆனால், யோகம் என்பது கற்கின்ற ஒரு விடயமல்ல. நீங்களாகவே அதிகாலை வேளையில் விழித்தெழுந்து, நீங்களாகவே நினைவு செய்வதற்கு அமருங்கள். அதற்கு ஓர் ஆசிரியர் அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்க வேண்டிய தேவையில்லை. இதனாலேயே ‘நினைவு’ என்ற வார்த்தையே நல்லது. யோகம் என்பது கற்று உணர்வதல்ல. இந்தப் பழக்கத்தை (யோகம் கற்பதற்காக ஆசைப்படுவது) ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி, தந்தையை நினைவு செய்தால், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். அமிர்தவேளையில் பாபாவை நினைவு செய்வது நல்லது. பக்தர்களும் அதிகாலை வேளையில் பக்தி செய்கின்றார்கள். இவரும் தந்தையை நினைவு செய்கின்றார். இவர் ஏன் அந்த ஒரேயொருவரை நினைவு செய்கின்றார்? ஏனெனில் இவர் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறவுள்ளார். பக்தி மார்க்கத்தில் மக்கள் சிவனை நினைவு செய்தாலும், அவரிடமிருந்து தாங்கள் எதனைப் பெறுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. குழந்தைகளாகிய நீங்களே இதனை அறிவீர்கள். தந்தை உங்களுக்கு இந்த ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார்: உங்களுக்கே நன்மை செய்வதற்காக, என்னை நினைவுசெய்யுங்கள். நினைவு செய்வதனால் மாத்திரமே, நீங்கள் சக்தியைப் பெறுகின்றீர்கள், சக்தியின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஞானத்தின் மூலம் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. நீங்கள் இந்த ஞானத்தின் மூலம், ஓர் அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். நினைவு செய்வதனால், நீங்கள் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். இதில் பல குழந்தைகளும் தோல்வி அடைகின்றார்கள். மிகவும் நல்ல பல மகாராத்திகளுமே 5 சதப் பெறுமதிக்கேனும் பாபாவை நினைவு செய்வதில்லை. சிலர் ஒரு சதப் பெறுமதிக்கேனும் (ஓர் அணாவில் 1/6 பங்கு) பாபாவை நினைவு செய்வதில்லை. இதற்குப் பெருமளவு முயற்சி தேவை. விளக்கத்தை மிக விரைவாகப் புரிந்து கொள்ள முடியும், ஆனால் நீங்கள் நினைவு செய்தலில் நிலைத்திருந்தாலே, படகு அக்கரை சேரும். அப்பொழுதே பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும், அப்பொழுதே நீங்கள் புண்ணியாத்மாக்கள் ஆகுவீர்கள். நீங்கள் தந்தையை அழைக்கின்றீர்கள்: வந்து, தூய்மை அற்றவர்களான எங்களைத் தூய்மையாக்குங்கள். பலரும் தூய்மை ஆகுவார்கள். ஆனால் மிகவும் நன்றாக நினைவில் நிலைத்திருப்பவர்களே, உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகிறார்கள். பந்தனத்தில் உள்ளவர்கள் உங்களை விட மிகவும் அதிகளவில் பாபாவை நினைவு செய்கின்றார்கள். நீங்கள் நினைவைக் கொண்டிருப்பதால் மாத்திரமே, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தூய்மையாக இருத்தல் அசாத்தியம் என்று எவரேனும் கூறினால், அவர்களுடன் நீங்கள் பேசவும் கூடாது. பாரதம் விகாரம் அற்றிருந்த பொழுது, அது சதோபிரதானாக இருந்தது, ஆனால் செல்வந்தர்களின் புத்தியில் இந்த ஞானம் பதிவது மிகவும் கடினம். ஏனெனில், நினைவு செய்வதற்கு முயற்சி தேவைப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுது, அவர்களுக்கான உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள். உண்மையில், இங்குள்ள சட்டங்கள் மிகவும் கடுமையானவை. நீங்கள் பிறவிபிறவியாகப் பாவாத்மாக்களுக்குத் தானம் செய்து, தொடர்ந்தும் பாவாத்மாக்கள் ஆகியுள்ளீர்கள். இனியும் நீங்கள் பாவாத்மாக்களுக்குப் பணம் கொடுக்கக்கூடாது. எவ்வாறாயினும், அது அவர்களின் பாட்டனாரின் ஆஸ்தியாயின், அதனை நீங்கள் கொடுக்கவே வேண்டும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: முதன்முதலில், உங்கள் லௌகீகக் கடமைகளை நிறைவேற்றிய பின்னர் உங்களை அர்ப்பணியுங்கள். பல மில்லியன் எண்ணிக்கையானோரில் ஒரு கைப்பிடி அளவினரே இவ்வாறாக வெளிப்படுகின்றார்கள். இலக்கு மிகவும் உயர்ந்தது. தந்தையைப் (பிரம்மா) பின்பற்றுங்கள்! பற்றை வென்றவர் ஆகுதல் என்பது உங்கள் மாமியாரின் வீட்டிற்குச் செல்வதைப் போன்றதல்ல, அதற்குப் பெரும் முயற்சி தேவை. ஓர் உலக அதிபதி ஆகுதல் என்பது அத்தகைய பெரும் பேறாகும். ஒவ்வொரு கல்பத்திலும் உலக அதிபதிகள் ஆகியவர்கள், மீண்டும் அவ்வாறே ஆகுவார்கள். வெகுசிலரின் புத்தியில் மாத்திரமே நாடகத்தின் உட்கருத்து நிலைத்திருக்கும். செல்வந்தர்களை அத்தனை இலகுவில் ஈடேற்ற இயலாது. ஏழைகள் விரைவில் கூறுகின்றார்கள்: பாபா, இவை யாவும் உங்களுடையதே. அவ்வாறாயின், அவர்களும் சேவை செய்ய வேண்டும். தூய்மையாகுவதற்கு நினைவு செய்தலும் அவசியம். இல்லாவிட்டால், அதிகளவு தண்டனை அனுபவம் செய்யப்படும். தண்டனை அனுபவம் செய்யப்படுமாயின், அந்தஸ்தும் குறைக்கப்படுகின்றது. நினைவு செய்தலில் நிலைத்து இருக்காதவர்களே, தண்டனையை அனுபவம் செய்கின்றார்கள். நீங்கள் எவ்வளவிற்கு இந்த ஞானத்தைப் பெற்றுக் கொண்டாலும், அதன் மூலம் பாவங்கள் அழிக்கப்படுவதில்லை. அடிவாங்கி, தாழ்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வது என்பது எவ்வகையான ஆஸ்தியாக இருக்கும்? தந்தையிடம் இருந்து முழு ஆஸ்தியையும் பெற்றுக் கொள்வதற்கு, நீங்கள் தந்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும். அதிமேலான தந்தையின் மேன்மையான வாசகங்களை நீங்கள் தலைமேல் வைத்திருக்க வேண்டும். இந்நேரத்திலேயே ஸ்ரீகிருஷ்ண ஆத்மாவும் தனது ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றார். நான் இலக்ஷ்மி நாராயணனின் ஆத்மாக்களுக்கும், அவர்களின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் மீண்டும் ஒருமுறை கற்பித்து, அவர்களின் ஆஸ்தியை அவர்களுக்குக் கொடுக்கின்றேன். உங்கள் மத்தியிலும் இளவரசர்கள், இளவரசிகள் ஆகுபவர்களும் இருக்கின்றார்கள். இராஜ குடும்பத்தில் இருந்து வருபவர்களின் நடத்தை மிகவும் பொறுமையானதாக உள்ளது. அவர்கள் மறைமுகமான போதையைக் கொண்டிருக்கின்றார்கள். பாபா அதிகளவு எளிமையுடன் வாழ்கின்றார். இன்னமும் சொற்ப காலமே உள்ளது என்பதும், தான் சென்று, உலகச் சக்கரவர்த்தியாக வேண்டும் என்பதும் இவருக்குத் தெரியும். இவரும் தூய்மை அற்றவராகவே இருந்தார். இவர் பாபாவின் இரதம், இதனாலேயே இவர் இங்கே கதியில் அமர வேண்டும். வேறு எங்கு பாபா அமர்வார்? இவரும் உங்களைப் போன்ற ஒரு மாணவரே, இவர் கற்கின்றார். பல குழந்தைகளும் தந்தையை இனங்காணவில்லை. தந்தையுடன் தர்மராஜும் இருக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாமல் விட்டால், என்னை அவமதித்தால், தர்மராஜ் உங்களைப் பெருமளவு தண்டிப்பார்: நீங்கள் நேரடியாக எனக்கும், எனது குழந்தைக்கும் கீழ்ப்படியவில்லை. தந்தைக்கு நீண்டகாலம் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட ஒரேயொரு புத்திரனே உள்ளார். இவரின் மீது அவருக்கு அன்பு உள்ளது. இவரை நீங்கள் அவமதித்தால், அதிகளவு தண்டனை பெற நேரிடும்! மேலும் சிறிது கஷ்டங்கள் அதிகரிக்கும் பொழுது, இன்னும் எத்தனை பேர் இங்கே ஓடோடி வருவார்கள் எனப் பாருங்கள். நீங்கள் அனைவரும் இங்கு ஓடோடியே வந்தீர்கள்; இவர் மந்திரவித்தை போன்ற எதனையும் செய்யவில்லை. சிவபாபாவே மந்திரவாதி ஆவார். இவரினுள் சிவபாபா பிரவேசிக்கின்றார் என்பது பலருக்கும் தெரியாது. சிவபாபாவின் முன்னிலையில் நீங்கள் பிழை ஏதும் செய்தால், நீங்கள் தகுதியற்ற குழந்தை என அவர் கூறுவார். இவரினுள் இருவர் உள்ளனர். இதனாலேயே தந்திகள் ‘பாப்தாதா’ என விலாசம் இடப்படுகின்றன. அவ்வாறிருந்தும், எவ்வாறு பாப்பும், தாதாவும் இணைந்துள்ளார்கள் என்பதைச் சில குழந்தைகள் அறியாதிருக்கின்றார்கள். தந்தை தாதாவின் மூலம் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். இந்தத் தலைப்பை நீங்களாகவே தேர்ந்தெடுக்க வேண்டும்: யார் பாப்தாதா என்பது உங்களுக்குத் தெரியுமா? பாப்தாதா என நீங்கள் கூறும்பொழுது நீங்கள் யாரைக் குறிப்பிடுகின்றீர்கள் என அவர்கள் கேட்க அனுமதியுங்கள். பாப்தாதா என்பது ஒருவரின் பெயராக இருக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்தும் பொழுது, சிவபாபா தாதாவின் ஊடாக ஆஸ்தியைக் கொடுக்கின்றார் என்பது அவர்களின் புத்தியில் இருக்க வேண்டும். விநாசம் இப்பொழுது இடம்பெற வேண்டும். அது இடம்பெறும் முன்னர், பாபா இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார், நீங்களும் அதனைக் கற்க வேண்டும். அரைக் கல்பமாக நீங்கள் அழைத்துக் கொண்டிருக்கின்ற தந்தை இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்க வந்துள்ளார். இருந்தாலும், தங்களுக்கு இதனைப் புரிந்து கொள்வதற்கு நேரம் இல்லை எனச் சிலர் கூறுகின்றார்கள். அப்பொழுது நீங்கள் கூறுவீர்கள்: நீங்கள் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. உங்கள் பாக்கியத்தில் சுவர்க்கத்தின் சந்தோஷம் இல்லை. இங்கே நீங்கள் தலை வணங்குதல் என்ற கேள்விக்கே இடமில்லை. மக்கள் நிச்சயமாகச் சந்நியாசிகளின் கால்களில் விழுந்து வணங்குகின்றார்கள். இவர் மறைமுகமானவர். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, உங்கள் செல்வாக்கு பெருமளவு பரவும், அந்நேரத்தில் பெருமளவு கூட்டம் அங்கு இருக்கும். கூட்டம் அதிகளவு உள்ள இடத்தில் பலரும் மரணிக்கின்றார்கள். பிரதம மந்திரி போன்றோரை ஒரு நொடிப்பொழுது பார்ப்பதற்கு, அத்தகைய பெருங்கூட்டம் கூடுகின்றது. இங்கே, குழந்தைகளான உங்களுடன் பாபா மிகவும் மறைமுகமான முறையில் அமர்ந்திருக்கின்றார். இங்கே நீங்கள் யாரைப் பார்ப்பீர்கள்? இவர் ஒரு நகைவியாபாரியாக இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். பிரம்மாவின் மூலம் எவ்வாறு மனித உலகம் படைக்கப்பட்டது என்று சமயநூல்களில் கூறப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் இவரில் பிரவேசித்து, அதனைப் படைக்கின்றேன். இதுவும் எழுதப்பட்டுள்ளது, ஆனால் கற்புத்தி உடையவர்கள் அதனைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை வந்து, உங்களைத் தூய்மையாக்கி, அதன்பின்னர் உங்களை இடம்மாற்றுகின்றார். அவர் ஒரு புதிய படைப்பைப் படைப்பதில்லை. இதுவே தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்கான வழியாகும். பல உருவப்படம் நிச்சயமாக இருக்க வேண்டும். உங்களிடம் பெரியதொரு படம் இருந்தால், விளங்கப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும். கற்புத்தி உடையவர்களைத் தெய்வீகப் புத்தி உடையவர்களாக மாற்றுதல் இலகுவான விடயமல்ல. சிலர் வந்து, பித்துப் பிடித்தவர்கள் போல் சுற்றிப் பார்த்து விட்டு, மீண்டும் சென்று விடுகின்றார்கள். பிரஜைகள் ஆகுபவர்களின் புத்தியில் ஏதோ ஒன்று நிற்கும். நாங்கள் பிராமணர்கள், நாங்களே தேவர்கள் ஆகப் போகின்றவர்கள். ‘ஹம்சோ-சோஹம்' என்பதன் அர்த்தத்தை பாபா மிகத் தெளிவாக எங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். அம்மக்கள் ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே எனக் கூறுகின்றார்கள். அவ்வளவுதான். இங்கே ஆத்மாக்களாகிய நீங்கள் சதாகாலமும் இருப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களாகிய நாங்கள் முதலில் பிராமணர்கள், அதன்பின்னர், நாங்கள் தேவர்களாகவும், அதன்பின்னர் சத்திரியர்களாகவும் ஆகுகின்றோம். நாங்கள் பல்வேறு குலங்களினூடாகச் செல்கின்றோம்! நாங்கள் 84 பிறவிச் சக்கரத்தின் ஊடாகச் செல்கின்றோம். தாமதித்து வருபவர்கள் சராசரியாக எத்தனை பிறவிகள் எடுப்பார்கள்? இதனை நீங்கள் கணக்கிட முடியும். பாபா விரும்புகின்ற மிகவும் நல்ல படங்கள் உருவாக்கப்பட வேண்டும். இப்படங்களை உருவாக்க உதவி செய்வதற்கு இரண்டு அல்லது நான்கு மிக நல்ல குழந்தைகளும் இருக்க வேண்டும். செலவை ஏற்க பாபா ஆயத்தமாக இருக்கிறார். அதன்பின்னர் பாபாவே பொக்கிஷக் களஞ்சியத்தை நிறைத்துக் கொள்வார். பாபா கூறுகின்றார்: பிரதானமான படம், ஒளி ஊடுருவும் (திரான்ஸ்லைட்) வகையில் உருவாக்கப்பட வேண்டும். அவற்றைப் பார்க்கும் பொழுது மக்கள் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். முழுக் கண்காட்சித் தொகுதிகளும் இவ்வாறு உருவாக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், பாபா குழந்தைகளை உஷாராக்கவும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. தந்தையின் நினைவே பிரதான விடயம். நினைவுசெய்தல் மூலமே நீங்கள் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையாகி, உலக அதிபதிகள் ஆகுவீர்கள்; வேறு வழியில்லை. நடந்தும், உலாவியும் திரியும் பொழுதெல்லாம், பாபாவை நினைவு செய்யுங்கள். சக்கரமும் நினைவு செய்யப்பட வேண்டும். நீங்கள் மிகவும் இராஜரீகமான சுபாவத்தைக் கொண்டிருக்க வேண்டும். முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் பொழுது, சிலர் பேராசையிலும், ஏனையோர் பற்றிலும் அகப்பட்டுக் கொள்கின்றார்கள். சிலர் தாங்கள் விரும்புகின்ற பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாக இருக்கின்றார்கள். அது கிடைக்காது விட்டால், அவர்கள் நோயாளியாகி விடுகின்றார்கள். இதனாலேயே நீங்கள் அத்தகைய பழக்கங்களை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்கு நன்மை அளிப்பதற்கு, தந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியுங்கள். ஒருபோதும் பாப்தாதாவிற்குக் கீழ்ப்படிவற்றவர்கள் ஆகாதீர்கள். பேராசையின் அல்லது பற்றின் பழக்கத்தைக் கொண்டிருக்காதீர்கள்.2. உங்கள் சுபாவத்தை மிகவும் இராஜரீகம் ஆக்குங்கள். அதிகாலையில் விழித்தெழுந்து, தந்தையை நினைவு செய்வதைப் பயிற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
ஆத்மாக்கள் அனைவருக்கும் சக்திகளின் தானத்தை வழங்குகின்ற மாஸ்டர் விதை ஆகுவீர்களாக.மீண்டும் ஒருமுறை சகல பக்தர்களுக்கும், ஆத்மாக்களுக்கும், காய்ந்து, வாடிய இலைகளுக்கும் உங்கள் விதை வடிவத்தின் ஸ்திதியினால் சக்திகளின் தானத்தை வழங்குங்கள். அவர்கள் சகல பேறுகளையும் அனுபவம் செய்வதற்கு அடிப்படையாக இருப்பது, ஆசைகள் என்றால் என்னவென்று அறியாதிருக்கின்ற உங்கள் ஸ்திதி ஆகும். நீங்கள் ஆசைகள் என்றால் என்னவென்றே அறியாதிருந்தால், உங்களால் அனைவரது ஆசைகளையும் பூர்த்தி முடியும். ஆசைகள் என்றால் என்னவென்றே அறியாதிருப்பது என்றால், விதை வடிவத்தின் அதிசக்திவாய்ந்த ஸ்திதியைக் கொண்டிருப்பதாகும். எனவே, மாஸ்டர் விதையாகி பக்தர்களின் குரலைச் செவிமடுத்து, அவர்கள் ஏதாவது ஒரு பேற்றினை கொண்டிருக்க அவர்களுக்கு உதவுங்கள்.
சுலோகம்:
சதா பரமாத்மா என்ற பாதுகாப்பு குடையின் கீழ் இருப்பது என்றால், உங்களுடைய அலௌகீக வாழ்வின் பாதுகாப்பை அனுபவம் செய்வதாகும்.அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
இந்த நேரத்தை மிகவும் பெறுமதியானது எனக் கருதி இதனைப் பயன்படுத்தினால், உங்களால் முழுமை அடைய முடியும். உங்களுக்குத் தடையாக இருக்கின்ற, எந்த வீணான எண்ணங்களில் இருந்தும் உங்களை விடுவித்துக் கொள்வதற்கு, என்றுமே அக அல்லது புற ஓய்வை எடுக்காதீர்கள். நீங்கள் ஓய்வாக இல்லாதிருந்தால், எதுவுமே வீணாக மாட்டாது. இரண்டாவதாக, எப்பொழுதும் உங்களை ஒரு விருந்தாளியாகக் கருதுங்கள்.