21.12.24 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, முதலில், நீங்கள் ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு முயற்சி செய்து பின்னர் உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் அதனைச் செய்யத் தூண்டுங்கள். புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பிக்கிறது.
கேள்வி:
சந்தோஷத்தையும் சௌகரியத்தையும் அடைவதற்கான வழி என்ன?பதில்:
தூய்மை ஆகும். எங்கு தூய்மை இருக்கிறதோ, அங்கு சந்தோஷமும் சௌகரியமும் இருக்கும். தந்தை சத்தியயுகமாகிய, தூய உலகத்தை ஸ்தாபிக்கிறார். அங்கு விகாரங்கள் இருக்காது. விகாரமின்றி, எவ்வாறு உலகம் தொடர முடியும் என்று தேவர்களை வழிபடுபவர்களால் ஒருபொழுதும் வினவ முடியாது. இப்பொழுது நீங்கள் சௌகரியமான உலகத்துக்குச் செல்ல வேண்டும். ஆகவே, நீங்கள் இத்தூய்மையற்ற உலகத்தை மறக்க வேண்டும். நீங்கள் சாந்தி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்ய வேண்டும்.ஓம் சாந்தி.
“ஓம் சாந்தி” என்பதன் அர்த்தம் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சிவபாபா “ஓம் சாந்தி” என்று கூறமுடியும், சாலிகிராம் குழந்தைகளும் “ஓம் சாந்தி” என்று கூறுகிறார்கள். “ஓம்சாந்தி” என்று ஆத்மா கூறுகிறார். அவரே மௌனமான தந்தையின் மகன் என்பதே இதன் அர்த்தமாகும். அமைதியைப் பெறுவதற்குக் காடுகளுக்குள் செல்வது போன்ற வேறுபட்ட வழிமுறைகளைக் கையாளத் தேவையில்லை. எவ்வாறாயினும், ஆத்மாக்கள் அமைதியானவர்கள். ஆகவே, வேறு வழிகளை முயற்சிப்பதன் அர்த்தம் என்ன? தந்தை இங்கமர்ந்திருந்து இதை விளங்கப்படுத்துகிறார். வந்து உங்களைச் சந்தோஷமும், சௌகரியமும் உள்ள உலகத்துக்கு அழைத்துச் செல்லுமாறு நீங்கள் அழைத்த அந்தத் தந்தை, இவரேயாவார். மனிதர்கள் அனைவரும் சந்தோஷமாகவும் சௌகரியமாகவும் இருக்க விரும்புகிறார்கள். எவ்வாறாயினும், உங்களுக்கு அமைதியும் சந்தோஷமும் இருக்க முன்னர் நீங்கள் தூய்மையைக் கொண்டிருக்க வேண்டும். தூய்மையாக இருப்பவர்கள், தூய்மையானவர்கள் எனவும் தூய்மையின்றி இருப்பவர்கள், தூய்மையற்றவர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். தூய்மையற்ற உலகினர் அழைக்கிறார்கள்: வந்து எங்களைத் தூய்மையான உலகத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்! அவரே உங்களைத் தூய்மையற்ற உலகிலிருந்து விடுவிப்பவரும் உங்களைத் தூய்மையான உலகத்துக்கு அழைத்துச் செல்பவரும் ஆவார். சத்தியயுகத்தில் தூய்மையும் கலியுகத்தில் தூய்மையின்மையும் உள்ளது. அது விகாரமற்ற உலகமும் இது விகாரமான உலகமும் ஆகும். உலக சனத்தொகை தொடர்ந்தும் அதிகரிக்கிறது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். சத்தியயுகம் விகாரமற்ற உலகம். ஆதலால், அங்கு நிச்சயமாகச் சொற்ப மனிதர்களே இருப்பார்கள். அச்சொற்ப மக்கள் யாராக இருப்பார்கள்? நிச்சயமாகச் சத்தியயுகத்தில் தேவர்களின் இராச்சியம் இருக்கும். அது சௌகரியமான உலகம் எனவும் சந்தோஷதாமம் எனவும் அழைக்கப்படுகிறது. இது துன்பதாமம் ஆகும். பரமாத்மா, பரமதந்தையால் மட்டுமே துன்பதாமத்தைச் சந்தோஷ தாமமாக மாற்ற முடியும். நிச்சயமாகத் தந்தையே உங்களுக்குச் சந்தோஷமாகிய ஆஸ்தியைக் கொடுப்பார். தந்தை கூறுகிறார்: இப்பொழுது துன்பதாமத்தை மறந்து சாந்திதாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யுங்கள். இது மன்மனாபவ என்று அழைக்கப்படுகிறது. தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்குச் சந்தோஷ தாமத்தின் காட்சி ஒன்றைக் கொடுக்கிறார். அவர் துன்பதாமத்தின் விநாசத்தைத் தூண்டி உங்களைச் சாந்திதாமத்துக்கு அழைத்துச் செல்கிறார். நீங்கள் இச்சக்கரத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் 84 பிறவிகளை எடுக்க வேண்டும். சந்தோஷதாமத்தில் முதலில் வருபவர்களே 84 பிறவிகளை எடுப்பவர்கள் ஆவர். இந்தளவை நினைவுசெய்வதால், குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷதாமத்தின் அதிபதிகளாக முடியும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, சாந்திதாமத்தை நினைவுசெய்து பின்னர், உங்கள் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள், அதாவது, சந்தோஷதாமத்தை நினைவு செய்யுங்கள். முதலில் நீங்கள் சாந்தி தாமத்துக்குச் செல்வதால், நீங்கள் பரந்தாமமாகிய, சாந்திதாமத்தின் அதிபதிகளாக உங்களைக் கருதவேண்டும். நடந்தும் உலாவியும் திரியும்போது நீங்கள் உங்களை அந்த இடத்தில் வசிப்பவர்களாகக் கருதினால், தொடர்ந்தும் இவ்வுலகை மறப்பீர்கள். சத்தியயுகமே சந்தோஷதாமம், ஆனால் அனைவருமே சத்தியயுகத்துக்குச் செல்ல முடியாது. தேவர்களை வழிபடுபவர்கள் மட்டும் இவ்விடயங்களை விளங்கிக் கொள்வார்கள். சத்தியமான தந்தை கற்பிக்கும் இக்கல்வியே உண்மையான வருமானமாகும். ஏனைய அனைத்தும் போலியான வருமானங்கள் ஆகும். அழியாத ஞான இரத்தினங்களே உண்மை வருமானத்துக்குரியது. அழியக்கூடிய செல்வமும், சொத்தும் போலியான வருமானம் ஆகும். துவாபர யுகத்திலிருந்து நீங்கள் போலி வருமானத்தைச் சம்பாதித்துக் கொண்டு வருகிறீர்கள். இந்த உண்மையான, அழிவற்ற வருமானத்தின் வெகுமதி, சத்தியயுகத்தின் ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்து திரேதாயுகத்தின் இறுதியில் முடிவடைகிறது. அதாவது, நீங்கள் அரைக் கல்பத்துக்கு வெகுமதியை அனுபவம் செய்கிறீர்கள். பின்னர், நீங்கள் தற்காலிக சந்தோஷத்தை அனுபவம் செய்கின்ற போலியான வருமானம் ஆரம்பிக்கிறது. ஞானக்கடல் மட்டுமே உங்களுக்கு இந்த அழிவற்ற ஞான இரத்தினங்களைக் கொடுக்கிறார். சத்தியமான தந்தை உங்களை ஓர் உண்மை வருமானத்தைச் சம்பாதிக்கச் செய்கிறார். பாரதம் சத்தியபூமியாக இருந்து இப்பொழுது பொய்;மையான பூமி ஆகிவிட்டது. வேறு எந்தப் பூமியையும் சத்தியபூமி எனவும் பொய்மையான பூமி எனவும் அழைக்க முடியாது. சத்தியமான, சக்கரவர்த்தியான, கடவுளே சத்தியபூமியைப் படைப்பவராவார். கடவுள் மட்டுமே சத்தியமான தந்தையாவார்; ஏனைய அனைவரும் பொய்யான தந்தையர்கள் ஆவார்கள். சத்தியயுகத்தில், உங்களுக்கு உண்மையான தந்தையர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் அங்கு எந்தப் பொய்மையோ அல்லது பாவமோ இருப்பதில்லை. இது பாவாத்மாக்களின் உலகமும் அது புண்ணியாத்மாக்களின் உலகமும் ஆகும். ஆகவே, இந்த உண்மை வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு நீங்கள் இப்பொழுது அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். முன்னைய கல்பத்தில் ஒரு வருமானத்தைச் சம்பாதித்தவர்களே, மீண்டும் அதைச் சம்பாதிப்பார்கள். முதலில், நீங்களே இந்த உண்மை வருமானத்தைச் சம்பாதித்துப் பின்னர் உங்கள் குடும்பத்தையும் உங்கள் புகுந்த வீட்டினரையும் இந்த உண்மை வருமானத்தைச் சம்பாதிப்பதற்குத் தூண்ட வேண்டும். புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பிக்கிறது. சர்வவியாபி என்ற கருத்தை நம்புவர்களால் பக்திசெய்ய முடியாது: அனைவரும் கடவுளின் ரூபங்கள் எனில், அவர்கள் யாரை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களை அந்தப் புதைகுழியிலிருந்து அகற்றுவதற்கு முயற்சி செய்யப்பட வேண்டும். எவ்வாறு சந்நியாசிகளால் வீட்டில் புண்ணியம் செய்ய முடியும்? முதலில், அவர்களுடைய இல்லறத்தைப் பற்றிய எதையும் அவர்களால் உங்களுக்குக் கூற இயலாதிருக்கிறது. அவர்களிடம் கேளுங்கள்: உங்களால் ஏன் எங்களுக்குக் கூற முடியாமல் இருக்கிறது? நாங்கள் குறைந்தபட்சம் அறிந்துகொள்ள வேண்டும். “நான் இக்குடும்பத்துக்கு உரியவராகிப் பின்னர், துறவறத்தை மேற்கொண்டேன்” என்று அவர்கள் உங்களுக்குக் கூறினால், அதில் என்ன தீமை உள்ளது? ஒருவர் உங்களை வினவும்பொழுது, நீங்கள் உடனடியாக அவர்களுக்குக் கூற முடியும். சந்நியாசிகளுக்குப் பல சீடர்கள் உள்ளனர். ஒரேயொரு கடவுளே இருக்கிறார் என்று ஒரு சந்நியாசி அவர்களுக்குக் கூறியிருப்பின், அவருடைய சீடர்கள் அவரிடம் கேள்வி எழுப்புவார்கள்: யார் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்தார்கள்? பிரம்மாகுமாரிகளே அதைக் கொடுத்தார்கள் என்று அவர் கூறினால், அவருடைய வியாபாரம் முடிவடைந்து விடும். ஏன் இவ்விதமாகத் தன்னுடைய கௌரவத்தை எவரும் இழக்க விரும்புவார்கள்? அவர்களுக்கு எவரும் உணவு கூடக் கொடுக்கமாட்டார்கள். இதனாலேயே இது சந்நியாசிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. முதலில், உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஞானத்தைக் கொடுத்து ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிப்பதினூடாக, அவர்கள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷம் அடையுமாறு அவர்களைத் தூண்ட வேண்டும். இது மிகவும் இலகுவானதொரு விடயமாகும். ஆயினும், பல்வேறு சமயநூல்களும் ஆலயங்கள் போன்றவையும் இருப்பது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இத்தூய்மையற்ற உலகில் வசிப்பவர்கள் கூறுகிறார்கள்: வந்து எங்களைத் தூய்மையான உலகத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். சத்தியயுகம் இருந்ததிலிருந்து இப்பொழுது 5000 வருடங்கள் ஆகிவிட்டது. கலியுகத்தின் ஆயுட்காலம் நூறாயிரக் கணக்கான வருடங்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே, எங்கு அல்லது எப்பொழுது சந்தோஷதாமம் இருந்தது என்று எவ்வாறு மக்களால் புரிந்துகொள்ள முடியும்? பெரும் பிரளயம் ஒன்று இடம்பெறுகிறது, அதன் பின்னர் சத்தியயுகம் வருகிறது எனவும் எல்லாவற்றுக்கும் முதலில், கடலில் மிதக்கும் ஆலிலையின் மீது ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய பெருவிரலைச் சுவைத்தவாறு அமர்ந்து வருகிறார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அனைத்து விடயங்களையும் மாற்றியுள்ளார்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது நான் உங்களுக்கு வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை பிரம்மாவின் மூலமாகக் கூறுகிறேன். இதனாலேயே விஷ்ணுவின் தொப்புள் கொடியிலிருந்து பிரம்மா தோன்றியதாகக் காண்பிப்பதுடன் அவருடைய கரத்தில் சமயநூல்களையும் காண்பிக்கிறார்கள். இப்பொழுது, இங்கு நிச்சயமாக பிரம்மா இருப்பார். சூட்சும வதனத்தில் சமயநூல்கள் இருக்க மாட்டாது. பிரம்மா இங்கு இருக்க வேண்டும். இலக்ஷ்மி நாராயணனின் இரட்டை ரூபமான, விஷ்ணுவும் இங்கு இருக்கிறார். பிரம்மா விஷ்ணுவாகிப் பின்னர், விஷ்ணு பிரம்மா ஆகுகிறார். இப்பொழுது, பிரம்மா விஷ்ணுவிலிருந்து தோன்றினாரா அல்லது விஷ்ணு பிரம்மாவிலிருந்து தோன்றினாரா என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியதொரு விடயமாகும். எவ்வாறாயினும், நன்றாகக் கற்பவர்கள் மட்டுமே இவ்விடயங்களைப் புரிந்து கொள்வார்கள். தந்தை கூறுகிறார்: உங்கள் சரீரத்தை நீக்கும் வரையில் தொடர்ந்தும் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் 100 வீதம், முற்றிலும் விவேகமற்றவர்களாகவும் கடனாளிகளாகவும் ஆகிவிட்டீர்கள். நீங்கள் முன்னர் ஒரு தடவை விவேகிகளான தேவர்களாக இருந்தீர்கள், இப்பொழுது மீண்டும் அந்த தேவர்கள் ஆகின்றீர்கள். மனிதர்களால் எவரையும் தேவர்களாக மாற்ற முடியாது. நீங்கள் அந்தத் தேவர்களாக இருந்தீர்கள். பின்னர் 84 பிறவிகளை எடுக்கையில், உங்கள் சுவர்க்கக் கலைகள் அனைத்தையும் நீங்கள் முழுமையாகவே இழந்தீர்கள். நீங்கள் சந்தோஷதாமத்தில், மகத்தான சௌகரியத்தில் இருந்தீர்கள், இப்பொழுதோ ஓய்வின்றி இருக்கிறீர்கள். 84 பிறவிகளின் கணக்கை உங்களால் விளங்கப்படுத்த இயலும். இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், மற்றும் ஏனைய அனைத்துப் பிரிவினரும் மதத்தினரும் எத்தனை பிறவிகளை எடுக்கிறார்கள் என்று கணக்கிடுவது இலகுவாகும். பாரதவாசிகள் மட்டுமே சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறார்கள். நாற்று இப்பொழுது நாட்டப்பட்டு வருகிறது. நீங்களே இந்த ஞானத்தின் விளக்கத்தை ஒருமுறை புரிந்துகொண்டு விட்டதும், உங்கள் தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகளுக்கு அதைக் கொடுக்க வேண்டும். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழ்கையில், நீங்கள் ஒரு தாமரை மலரைப் போன்று வாழ வேண்டும். அப்பொழுது “புண்ணியம் வீட்டில் ஆரம்பிக்கிறது” என்பது இருக்கும். நீங்கள் இந்த ஞானத்தை உங்கள் பிறந்த வீட்டினருக்கும் புகுந்த வீட்டினருக்கும் கூற வேண்டும். வியாபாரத்திலும் கூட, அவர்கள் முதலில், தங்கள் சொந்த சகோதரர்களையே வியாபாரத்திலும் பங்காளிகள் ஆக்குவதற்கு முயற்சிக்கிறார்கள். இங்கும் அவ்வாறே உள்ளது. ஒரு குமாரி அவருடைய பிறந்த வீட்டையும் புகுந்த வீட்டையும் ஈடேற்றுபவர் என்னும் புகழ் உள்ளது. தூய்மையற்றவர்களால் எவரையும் ஈடேற்ற முடியாது. ஆகவே எந்தக் குமாரிகள் அதைச் செய்கிறார்கள்? அது பிரம்மாவின் புதல்விகளான, பிரம்மாகுமாரிகளாகிய நீங்களே ஆவீர்கள். கன்னிகளான (தூய்மையான) குமாரிகளுக்கும் அரைக்குமாரிகளுக்கும் இங்கு ஓர் ஆலயமும் கட்டப்பட்டுள்ளது. அது உங்கள் ஞாபகார்த்தம் ஆகும். நாங்கள் மீண்டும் ஒருமுறை பாரதத்தைச் சுவர்க்கமாக்குவதற்கு வந்துள்ளோம். தில்வாலா ஆலயம் முற்றிலும் மிகச் சரியானதாகும். ஆலயத்தின் கூரையில் சுவர்க்கம் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில், சுவர்க்கம் இங்கு கீழேயே உள்ளது. இராஜயோக தபஸ்யாவும் இங்கு கீழேயே நடைபெறுகிறது. தில்வாலா ஆலயத்தைக் கட்டியவர்களுக்கு, அது யாருடைய ஆலயம் என்பது பற்றி அவர்கள் அறிய வேண்டும். அவர்கள் ஆதிதேவ், ஆதிதேவியாகிய, ஜகத்பிதாவும் ஜகதாம்பாவும் உள்ளே அமர்ந்திருப்பதைக் காண்பித்துள்ளார்கள். நல்லது, ஆதிதேவ் யாருடைய குழந்தை: சிவபாபாவின் குழந்தை ஆவார். அரைக் குமாரிகள், குமாரிகள் அனைவரும் இங்கு அமர்ந்திருந்து இராஜயோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: மன்மனாபவ. பின்னர் நீங்கள் வைகுந்தத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள். முக்தியையும் முக்தி தாமத்தையும் நினைவுசெய்யுங்கள். இது உங்கள் துறவறமாகும். சமணர்களின் துறவறம் மிகவும் சிரமமானதாகும். அவர்களுக்குத் தங்கள் தலைமயிரைப் பிடுங்குகின்ற மிகவும் கடினமான சம்பிரதாயம் உள்ளது, இங்கோ இலகு இராஜயோகம் உள்ளது. இது ஓர் இல்லறப் பாதையும் ஆகும். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒரு சமண சாது அவருடைய சொந்த புதிய சமயத்தை ஸ்தாபித்தார். ஆனால் நீங்கள் அதை ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் என்று அழைக்க முடியாது. அது இப்பொழுது மறைந்துவிட்டது. ஒருவர் சமண சமயத்தை ஆரம்பித்த பின்னர், அது தொடர்ந்தது. அதுவும் நாடகத்தில் உள்ளது. ஆதிதேவ் தந்தை என்று அழைக்கப்படுகிறார், ஜகதாம்பா தாய் என்று அழைக்கப்படுகிறார். பிரம்மாவே ஆதிதேவ் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் ஆதாமும் பீபியும் எனவும் ஆதாமும் ஏவாளும் எனவும் அழைக்கப்படுகிறார்கள். இப்பொழுது ஆதாமும் ஏவாளும் தபஸ்யாவில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கிறிஸ்தவர்கள் அறியமாட்டார்கள். அவர்களே மனித வம்சாவழி விருட்சத்தின் பிரதானமானவர்கள் ஆவார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து இந்த இரகசியங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். சிவனுக்கும் இலக்ஷ்மி நாராயணனுக்கும் பல்வேறு ஆலயங்கள் உள்ளன. ஆகவே, அவர்களுடைய வாழ்க்கைச் சரிதங்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஞானக்கடலான தந்தை இங்கமர்ந்திருந்து இதையும் விளங்கப்படுத்துகிறார். ஞானம் நிறைந்தவர் என்று அழைக்கப்படுபவராகிய, பரமாத்மாவாகிய, பரமதந்தையே ஞானக்கடலும் பேரானந்தக் கடலும் ஆவார். சாதுக்கள் அல்லது புனிதர்கள் எவருக்குமே பரமாத்மாவாகிய, பரமதந்தையின் புகழ் தெரியாது. கடவுள் சர்வவியாபி என்று அவர்கள் கூறுவதால், யாருடைய புகழை அவர்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள்? ஏனெனில் அவர்கள் கடவுளை அறியாததால், “சிவோஹம்” (நானே சிவன்) என்று தங்களைப் பற்றித் தாங்களே கூறுகிறார்கள். இல்லாவிட்டால், பரமாத்மாவின் புகழ் மிகவும் மகத்தானதாக இருக்கும். அவரே மனித உலக விருட்சத்தின் விதையாவார். குதா (கடவுள்) எங்களைப் படைத்தார் எனவும் ஆகவே நாங்கள் அவருடைய படைப்பு எனவும் முஸ்லிம்களும் கூறுகிறார்கள். படைப்பினால் ஓர் ஆஸ்தியைப் படைப்புக்குக் கொடுக்க முடியாது. படைப்பவரிடமிருந்தே படைப்பு ஓர் ஆஸ்தியைப் பெறுகிறார் என்பதை எவரும் புரிந்துகொள்வதில்லை. அந்த விதையே சத்தியமும் உணர்வுள்ளவரும் ஆவார். அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொண்டுள்ளார். ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் மனிதர்களிடம் இருக்க முடியாது. அது விதையில் மட்டுமே இருக்க முடியும். விதையானவர் வாழ்வதால், அவர் நிச்சயமாகவே ஞானம் அனைத்தையும் கொண்டிருப்பார். அவரே வந்து, முழு உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். இச்சக்கரத்தை அறிந்து கொள்வதால், நீங்கள் சத்தியயுகத்தில் பூகோளத்தை ஆள்பவர்களாக முடியும், அதாவது, நீங்கள் சுவர்க்கத்தின் அரசர்களாக முடியும் என்று கூறும் பலகையை நீங்கள் போடவும் முடியும். இது அத்தகையதோர் இலகுவான விடயம்! தந்தை கூறுகிறார்: நீங்கள் உயிருடன் வாழும்வரைக்கும் என்னை நினைவு செய்யுங்கள். நானே உங்களுக்கு மனதைப் பண்படுத்தும் மந்திரத்தைக் கொடுக்கிறேன். இப்பொழுது நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நினைவைக் கொண்டிருப்பதாலேயே, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தொடர்ந்தும் நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றினால், உங்களால் மாயையின் தலையை வெட்ட இயலும். நான் ஆத்மாக்களாகிய உங்களைத் தூய்மையாக்கி உங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். பின்னர் நீங்கள் ஒரு சதோபிரதான் சரீரத்தைப் பெறுவீர்கள். அங்கு விகாரங்கள் இருக்காது. மக்கள் வினவுகிறார்கள்: எவ்வாறு உலகம் விகாரமின்றித் தொடர முடியும்? அவர்களுக்குக் கூறுங்கள்: ஒருவேளை நீங்கள் தேவர்களை வழிபடுபவர்களாக இல்லாவிட்டாலும், அவர்கள் முழுமையாக விகாரமற்றவர்கள் என்று கூறி, நீங்கள் இலக்ஷ்மி நாராயணனின் புகழைப் பாடுகிறீர்கள். உலகத் தாயும் உலகத் தந்தையும் விகாரமற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் இராஜயோக தபஸ்யாவைச் செய்வதால், தூய்மையற்றதிலிருந்து தூய்மையாகிச் சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறார்கள். தூய, புண்ணியாத்மாக்கள் ஆகுவதற்கே நீங்கள் தபஸ்யா செய்கிறீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இப்பழைய உலகை உங்கள் புத்தியிலிருந்து அகற்றுவதற்கு, நடந்தும் உலாவியும் திரியும்போது, உங்களை ஓர் சாந்திதாமவாசியாகக் கருதுங்கள். சாந்திதாமத்தையும் சந்தோஷதாமத்தையும் நினைவுசெய்து ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிப்பதுடன், அதை ஏனையோரும் செய்வதற்கும் தூண்டுங்கள்.2. இராஜயோக தபஸ்யா செய்து, உங்களை ஒரு புண்ணியாத்மாக ஆக்குங்கள். எப்பொழுதும் சுயதரிசனச் சக்கரத்தைத் தொடர்ந்தும் சுழற்றுவதனால், மாயையின் தலையை வெட்ட முடியும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் செல்வந்தராகி, நிரம்பியிருக்கும் உணர்வுடன் சதா திருப்தியை அனுபவம் செய்வீர்களாக.சுய இராச்சியத்தின் செல்வம், இந்த ஞானமும், தெய்வீகக்குணங்களும், சக்திகளும் ஆகும். இந்த சகல வகையான செல்வத்தாலும் சுய இராச்சிய அதிகாரத்தின் உரிமையைக் கொண்டுள்ளவர்கள், சதா திருப்தியாக இருப்பார்கள். அவர்களிடம் எந்தவொரு பேறும் குறைவாக இருப்பதன் பெயரோ அல்லது சுவடோ இருக்காது. எந்தவிதமான எல்லைக்குட்பட்ட ஆசைகளே அறியாதவராக இருப்பதே, செல்வந்தராக இருத்தல் எனப்படுகிறது. அவர்கள் சதா அருள்பவர்களாக இருப்பார்கள். ஒருபோதும் பிச்சைக்காரர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் நிலையான, துண்டிக்காத, சந்தோஷமான, அமைதிநிறைந்த சுய இராச்சியத்தின் உரிமையைக் கொண்டிருப்பார்கள். அவர்களின் துண்டிக்காத அமைதியை எந்த வகையான இக்கட்டான சூழ்நிலையாலும் இல்லாமல் செய்ய முடியாது.
சுலோகம்:
ஞானக்கண்ணால் முக்காலங்களையும் மூன்று உலகங்களையும் பார்ப்பவர்கள், ‘மாஸ்ரர் ஞானம் நிறைந்தவர்கள்’ ஆவார்கள்.