24.04.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, வெற்றி மாலையில் ஒருவராக வேண்டுமானால், சதா தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இந்தக் கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள்.
கேள்வி:
தந்தை தனது குழந்தைகளிடம் விடுக்கும் வேண்டுகோள் என்ன?பதில்:
இனிய குழந்தைகளே, தொடர்ந்தும் நன்றாகக் கற்க வேண்டும் எனத் தந்தை உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றார். தந்தையின் தாடியின் கௌரவத்தைப் பேணுங்கள். தந்தையின் பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில், எந்த மோசமான வேலையையும் செய்யாதீர்கள். உண்மையான தந்தைக்கும், உண்மையான ஆசிரியருக்கும், சற்குருவிற்கும் அவதூறு விளைவிக்காதீர்கள். நீங்கள் தொடர்ந்தும் கற்கும்பொழுது, தூய்மையாக இருப்பீர்கள் என்று சத்தியம் செய்யுங்கள்.பாடல்:
உங்களைக் கண்டதனால், நாங்கள் அனைத்தையும் கண்டு விட்டோம்; பூமி, வானம் அனைத்தும் எங்களுக்கே சொந்தம்.ஓம் சாந்தி.
‘உங்களைக் கண்டு கொண்டதனால் நாங்கள் இராச்சியத்தை, அதாவது, முழு உலகின் இராச்சியத்தையும் கண்டு விட்டோம்’ என்று பாடியவர் யார்? தற்பொழுது, நீங்கள் மாணவர்களும் அதேவேளை குழந்தைகளும் ஆவீர்கள். எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்கே வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவரின் முன்னிலையில் அமர்ந்திருந்து இராஜயோகம் கற்கின்றீர்கள். நீங்கள் கற்கவே இங்கு வந்திருக்கின்றீர்கள் என்பதே அதன் அர்த்தம். நீங்கள் உலகின் முடிக்குரிய இளவரசர்களும் இளவரசிகளும் ஆகுவதற்கே கற்கின்றீர்கள். இந்தப் பாடல் பக்தி மார்க்கத்தில் பாடப்பட்டுள்ளது. நீங்கள் உலகின் சக்கரவர்த்திகளும் சக்கரவர்த்தினிகளும் ஆகுவீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் உள்ளது. தந்தை ஞானக் கடல். பரம ஆன்மீக ஆசிரியர் இங்கமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் இந்தக் கல்விக்கூடத்தில் உலகின் முடிக்குரிய இளவரசர்களும், முடிக்குரிய இளவரசிகளும் ஆகுவதற்கே இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சரீரங்களின் புலன்களின் மூலம் புரிந்து கொள்கின்றீர்கள். உங்களுக்கு அதிகளவு போதை இருக்க வேண்டும்! உங்கள் இதயத்தைக் கேளுங்கள்: மாணவர்களாகிய எங்களுக்கு அந்தப் போதை உள்ளதா? இது புதியதொரு விடயமல்ல. ஒவ்வொரு கல்பத்திலும் உலகின் முடிக்குரிய இளவரசர்களும், இளவரசிகளும் ஆகுவதற்காக நாங்கள் தந்தையிடம் வருகின்றோம். அவர் தந்தையாக இருப்பதுடன், ஆசிரியராகவும் உள்ளார். நீங்கள் என்னவாகுவீர்கள் என்று தந்தை உங்களிடம் வினவும்பொழுது, நீங்கள் அனைவரும் நாங்கள் சூரிய வம்ச முடிக்குரிய இளவரசர்கள், இளவரசிகளாகவோ அல்லது இலக்ஷ்மி நாராயணனாகவோ ஆகுவோம் என்றே கூறுகின்றீர்கள். உங்கள் சொந்த இதயத்திடம் கேளுங்கள்: அதற்கான போதிய முயற்சியை நான் செய்கின்றேனா? எல்லையற்ற தந்தை எங்கள் சுவர்க்க ஆஸ்தியை எங்களுக்குக் கொடுப்பதற்காக வந்துள்ளார்; அவர் எங்கள் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். ஆகையால், அவர் அதிமேலான ஆஸ்தியை எங்களுக்கு நிச்சயமாகக் கொடுப்பார். இன்று கற்று, நாளை முடிக்குரிய இளவரசர்களும் இளவரசிகளும் ஆகுவீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு உள்ளதா என்று பாருங்கள். இப்பொழுது இது சங்கமமாகும். இப்பொழுது நீங்கள் இக்கரையில் இருக்கிறீர்கள், மறுகரையான சுவர்க்கத்திற்குச் செல்வதற்காகக் கற்கின்றீர்கள். நீங்கள் அனைத்துத் தெய்வீகக் குணங்களும், 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகும்பொழுதே அங்கே செல்வீர்கள். உங்களிடம் கேளுங்கள்: நான் அந்தளவிற்குத் தகுதி அடைந்துள்ளேனா? பக்தராகிய நாரதர் ஒருவர் மாத்திரமே இருந்தார் என்பதல்ல. நீங்கள் அனைவரும் பக்தர்களாகவே இருந்தீர்கள். தந்தை இப்பொழுது உங்களைப் பக்தி செய்வதிலிருந்து விடுவித்துள்ளார். நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்காகவே அவரின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் உலகின் முடிக்குரிய இளவரசர்கள் ஆகுவதற்கே இங்கே வந்துள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் இல்லறத்தில் தொடர்ந்தும் வாழுங்கள். இளைப்பாறும் ஸ்திதியில் இருப்பவர்கள் ஓர் இல்லறத்தில் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. குமார்களுக்கும் குமாரிகளுக்கும் இல்லறம் இருப்பதில்லை; அவர்கள் மாணவ வாழ்க்கை வாழ்கின்றார்கள். மாணவர்கள் கற்கும்பொழுது, பிரம்மச்சாரிகளாக இருக்கின்றார்கள். இந்தக் கல்வி மிகவும் மேன்மையானது. நீங்கள் கற்கும்பொழுதும் அத்துடன் எல்லாக் காலத்திற்குமாகவும் தூய்மையாக இருக்க வேண்டும். கற்கும்பொழுது, பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தாலும் அவர்கள் பின்னர் விகாரத்தில் ஈடுபடுகின்றார்கள். இங்கே, நீங்கள் பிரம்மச்சாரிகளாக இருந்து, முழுக் கல்வியையும் கற்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் தூய்மைக் கடல். நான் உங்களையும் அவ்வாறு ஆக்குவேன். நீங்கள் அரைக் கல்பத்திற்குத் தூய்மையாக இருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் தந்தையிடம் உறுதியான சத்தியம் செய்துள்ளீர்கள். பாபா, நாங்கள் ஏன் தூய்மையாகி, தூய உலகிற்கு அதிபதிகள் ஆகக்கூடாது? அவர் எடுக்கும் சரீரம் மிகவும் சாதாரணமாக இருந்தாலும், அவர் மிகவும் மகத்துவமான தந்தையாவார். ஆத்மாவிற்குப் போதை உள்ளது. தந்தை உங்களைத் தூய்மையாக்கவே வந்துள்ளார். அவர் கூறுகின்றார்: நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், இறுதியாக இப்பொழுது விலைமாதர் இல்லத்திற்கு வந்துள்ளீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள். இராதையும் கிருஷ்ணரும் தூய இளவரசரும் இளவரசியும் ஆவார்கள். உருத்திராட்ச மாலையையும் விஷ்ணு மாலையையும் பாருங்கள். உருத்திராட்ச மாலையின் பின்னர் விஷ்ணுமாலை வருகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: வெற்றி மாலையில் ஒருவர் ஆகுவதற்கு முதலில் நீங்கள் சதா தந்தையை நினைவுசெய்ய வேண்டும். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். அந்தச் சிப்பிகளைத் துரத்தும் குரங்குகள் ஆகாதீர்கள். குரங்குகள் கொண்டைக் கடலைகளை உண்ணுகின்றன. தந்தை இப்பொழுது உங்களுக்கு இரத்தினங்களைத் தருகின்றார். எனவே, சிப்பிகளையும் கொண்டைக் கடலையையும் தொடர்ந்தும் துரத்திக் கொண்டிருந்தால் உங்கள் நிலைமை என்னவாகும்? நீங்கள் இராவணனின் சிறைக்குச் செல்வீர்கள். தந்தை வந்து உங்களை இராவணனின் சிறையில் இருந்து விடுவிக்கின்றார். அவர் கூறுகின்றார்: உங்கள் புத்தியானது உங்கள் சொந்தச் சரீரம் உட்பட, உங்கள் சரீர உறவினர்கள் அனைவரையும் துறக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் பாரதத்தில் பிரவேசிக்கின்றேன். நான் வந்து பாரத மக்களை உலகின் முடிக்குரிய இளவரசர்களும் இளவரசிகளும் ஆக்குகின்றேன். அவர் உங்களுக்கு மிகவும் இலகுவாகக் கற்பிக்கின்றார். ‘நீங்கள் இங்கே வந்து நான்கு முதல் எட்டு மணித்தியாலங்கள் அமர்ந்திருங்கள்’ என அவர் கூறுவதில்லை; இல்லை. வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுதும், உங்களை ஆத்மாக்களாகக் கருதி என்னை நினைவு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் தூய்மை அற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆகுவீர்கள். விகாரத்தில் ஈடுபடுபவர்கள் தூய்மை அற்றவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். தேவர்கள் தூய்மையானவர்களாக இருந்ததால், அவர்களின் புகழ் பாடப்படுகின்றது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இங்குள்ள சந்தோஷம் தற்காலிகமானதும், குறுகிய காலத்திற்குரியதும் ஆகும். சந்தோஷம் காகத்தின் எச்சத்தைப் போன்றது என்று சந்நியாசிகள் சரியாகவே கூறுகின்றனர். எவ்வாறாயினும், தேவர்களுக்கு எவ்வளவு சந்தோஷம் உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதன் பெயரே, சந்தோஷ உலகமாகும். இது துன்ப உலகம். உலகில் உள்ள வேறு எவருக்கும் இவ்விடயங்கள் பற்றித் தெரியாது. தந்தை மாத்திரமே ஒவ்வொரு கல்பத்திலும் எங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கும், எங்களை ஆத்ம உணர்வுடையவர் ஆக்குவதற்கும் வருகின்றார். உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். நீங்கள் ஆத்மாக்கள் அன்றிச் சரீரங்கள் அல்ல. நீங்கள் உங்கள் சரீரங்களுக்கு அதிபதிகள் ஆவீர்கள். உங்கள் சரீரங்கள் உங்களுக்கு அதிபதிகள் அல்ல. நீங்கள் 84 பிறவிகளை எடுத்தவண்ணம் இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நீங்களும் உங்கள் சரீரங்களும் இரண்டுமே தூய்மையற்றவை ஆகியுள்ளன. சரீர உணர்வுடையவர் ஆகுவதனால், நீங்கள் பாவங்கள் செய்தீர்கள். இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வு உடையவராக வேண்டும். நீங்கள் என்னுடன் வீடு திரும்ப வேண்டும். தந்தை கூறுகின்றார்: ஆத்மாவாகிய உங்களையும், உங்கள் சரீரம் இரண்டையும் தூய்மையாக்கவும் சுத்தமாக்கவும் விரும்பினால், “மன்மனாபவ” ஆக இருங்கள். தந்தை உங்களை அரைக்கல்பத்திற்கு இராவணனிடம் இருந்து விடுவித்திருந்தார், இப்பொழுது மீண்டும் உங்களுக்கு அந்த விடுதலை கிடைத்துள்ளது. அரைக் கல்பத்திற்கு நீங்கள் சுதந்திரமாக ஆட்சி செய்யலாம். அங்கே ஐந்து விகாரங்களின் பெயருமே இருக்க மாட்டாது. இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றி, மேன்மையானவர் ஆகுங்கள். உங்களிடமே கேளுங்கள்: எனக்கு எந்தளவிற்கு விகாரம் உள்ளது? தந்தை கூறுகின்றார்: முதலில், சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். சண்டையிடவோ, விவாதம் செய்யவோ வேண்டாம். அவ்வாறாயின், நீங்கள் எப்படித் தூய்மையாக முடியும்? மாலையில் கோர்க்கப்படுவதற்கு முயற்சி செய்யவே நீங்கள் இங்கே வந்திருக்கின்றீர்கள். நீங்கள் தோல்வி அடைந்தால், மாலையில் கோர்க்கப்பட மாட்டீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் இராச்சியத்தை இழப்பீர்கள். பின்னர் இறுதியில் நீங்கள் அதிகளவில் வருத்தப்படவும் நேரிடும். ஏனைய கல்விகளிலும் ஒரு பதிவேடு வைக்கப்படுகின்றது. ஒருவரது நடத்தையும் பரீட்சிக்கப்படுகின்றது. இதுவும் ஒரு கல்வியே. அதிகாலை எழுந்து, நீங்களாகவே கற்றிடுங்கள். நீங்கள் பகல்வேளையில் வேலைக்குச் செல்ல வேண்டும், எனவே உங்களுக்கு அப்பொழுது நேரம் கிடைப்பதில்லை. மக்கள் அதிகாலையிலேயே பக்தி செய்கின்றார்கள். இந்தப் பாதை இந்த ஞானத்திற்கு உரியது. பக்தியில் வழிபடும்பொழுது, அவர்களின் புத்தியானது யாராவது ஒரு சரீரதாரியையே நினைவு செய்கின்றது. இங்கே நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். பின்னர் உங்கள் தொழில் போன்றவற்றை நினைவு செய்ய ஆரம்பிக்கின்றீர்கள். நீங்கள் தந்தையின் நினைவில் எந்தளவிற்கு நிலைத்து இருக்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்கள் முயற்சியின் மூலம், குழந்தைகளாகிய நீங்கள் முற்றாகத் தூய்மையாகும் பொழுதே, மாலை உருவாக்கப்படும். நீங்கள் முழுமையான முயற்சி செய்யாது விட்டால், பிரஜைகளில் ஒருவராகவே ஆகுவீர்கள். உங்கள் யோகம் நன்றாக இருந்து, நீங்கள் நன்றாகக் கற்று, உங்கள் மூட்டை முடிச்சுக்களை எதிர்காலத்திற்காக மாற்றினால், அதற்கான பலனை எதிர்காலத்தில் நீங்கள் பெறுவீர்கள். ஒருவர் கடவுளின் பெயரில் தானம் செய்யும் பொழுது, அதற்கான பலனை அவர் தனது அடுத்த பிறவியில் பெறுகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது உங்களிடம் நேரடியாகவே வந்துள்ளேன். நீங்கள் இப்பொழுது என்ன செய்தாலும் அது உங்களுக்கானதே. மக்கள் தான தர்மங்களை மறைமுகமாகச் செய்கின்றார்கள். அவ்வாறாக அவர்கள் தந்தைக்கு உதவி செய்கின்றார்கள். இந்த நேரத்தில் நீங்களே தந்தைக்கு அதிகபட்ச உதவியைச் செய்கின்றீர்கள். உங்கள் பணம் அனைத்தும் அழிந்துவிடும் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகையால். அதனைத் தந்தைக்கு உதவி செய்வதற்காகப் பயன்படுத்தினால் என்ன? இல்லாவிட்டால், தந்தையால் வேறு எப்படி இராச்சியத்தை ஸ்தாபிக்க முடியும்? எங்களிடம் இராணுவமோ, ஆயுதங்களோ இல்லை. இங்குள்ள அனைத்தும் மறைமுகமானது. சிலர் மறைமுகமாகத் தமது மகளுக்குச் சீதனம் கொடுக்கின்றார்கள். அவர்கள் பெட்டியைச் சாவியால் பூட்டி, சாவியை அவளது கையினுள் வைக்கின்றார்கள். சிலர் பெருமளவு வெளிப்பகட்டுடன் சீதனத்தைக் கொடுக்கின்றனர், சிலரோ தனிப்பட்ட முறையில் கொடுக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் மணவாட்டிகள். நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்காக வந்துள்ளேன். நீங்கள் மறைமுகமான வழியில் உதவுகின்றீர்கள். வெளிப்பகட்டு எதற்கும் பிரயோசனம் அற்றது என ஆத்மாக்களான நீங்கள் அறிவீர்கள். இந்த உலகம் விகாரம் நிறைந்ததும், தூய்மையற்றதும் ஆகும். உலகச் சனத்தொகை அதிகரிக்கவே வேண்டும். ஆத்மாக்கள் நிச்சயமாகக் கீழே வர வேண்டும். பிறப்பு வீதம் அதிகரிப்பதால், அவர்கள் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று கணக்கிடுகிறார்கள். அவர்களிடம் அசுரப் புத்திகளே உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இறை புத்திகளைப் பெற்றுள்ளீர்கள். உங்களுக்குக் கடவுள் கற்பிப்பதால், நீங்கள் அவருக்கு அதிகளவு மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் மிகவும் நன்றாகக் கற்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களில் பலர் கற்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. நீங்கள் பாபாவினால், முடிக்குரிய இளவரசர்கள், இளவரசிகள் ஆக்கப்படுகின்றீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்! தந்தையை நினைவுசெய்யுங்கள்! நீங்கள் மறந்து விடுகின்றீர்கள் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் கூறுகின்றீர்கள். ஒரு மாணவன் தனது பாடத்தைத் தான் மறந்து விடுகின்றேன் என்று மீண்டும் மீண்டும் கூறுவராயின், ஆசிரியர் என்ன செய்வார்? நீங்கள் பாபாவை நினைவு செய்யாதிருந்தால், உங்கள் பாவங்களை அழிக்க முடியாது. ஓர் ஆசிரியரால், தமது மாணவர்கள் அனைவரும் சித்தி எய்துவதற்குக் கருணை காட்டவோ அல்லது அவர்களுக்கு ஆசீர்வாதம் கொடுக்கவோ முடியுமா? இங்கே கருணை அல்லது ஆசீர்வாதங்கள் என்ற கேள்விக்கு இடமில்லை. தந்தை கூறுகின்றார்: படியுங்கள்! உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யுங்கள். எனினும் நீங்கள் கற்பதும் மிகவும் அவசியமாகும். தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுங்கள். இந்தப் பாதையை பிறருக்கும் காட்டுங்கள். உங்கள் இதயத்திடம் கேளுங்கள்: நான் தந்தைக்கு எவ்வளவு உதவுகின்றேன்? இன்னமும் எத்தனை பேரை நான் என்னைப் போல ஆக்கி உள்ளேன்? திரிமூர்த்தி படம் உங்கள் முன்னிலையில் உள்ளது. அவர் சிவபாபா, இவர் பிரம்மா ஆவார். இந்தக் கல்வியின் மூலம் நீங்கள் இவ்வாறு ஆகுவீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் பின்னர் மீண்டும் இவ்வாறு ஆகுவீர்கள். சிவபாபா பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்து, பிராமணர்களை இவ்வாறு (தேவர்கள்) ஆக்குகின்றார். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது உங்கள் இதயங்களைக் கேட்டுப் பாருங்கள்: நான் தூய்மை ஆகியுள்ளேனா? நான் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கின்றேனா? நான் பழைய சரீரத்தை மறந்து விட்டேனா? இது ஒரு பழைய சப்பாத்து. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகும் பொழுது, முதற்தரமான சப்பாத்தைப் பெறுவீர்கள்; நீங்கள் உங்களுடைய பழைய ஆடைகளைக் களைந்து, புதியதொன்றை அணிவீர்கள். இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. இன்று அவர் பழைய சப்பாத்தில் இருக்கின்றார். நாளை அவர் ஒரு தேவராக விரும்புகின்றார். நீங்கள் தந்தையின் மூலம் எதிர்காலத்தில் அரைக்கல்பத்திற்கு உலகின் முடிக்குரிய இளவரசர்கள், இளவரசிகள் ஆகுகின்றீர்கள். அந்த இராச்சியத்தை எவராலும் உங்களிடம் இருந்து அபகரிக்க முடியாது. எனவே தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். நீங்கள் பாபாவை எவ்வளவு நினைவுசெய்கின்றீர்கள் என்றும் சுயதரிசனச் சக்கரத்தை எவ்வளவு நேரம் சுழற்றுகிறீர்கள் என்றும் பிறரும் அதனைச் செய்ய உதவுகின்றீர்கள் என்றும் உங்களிடமே கேளுங்கள். ஏதோ ஒன்றைச் செய்பவர்கள், அதற்கான வெகுமதியைப் பெறுவார்கள். தந்தை உங்களுக்கு ஒவ்வொரு நாளும் கற்பிக்கின்றார். அனைவரும் முரளியைப் பெறுகின்றார்கள். அச்சா. நீங்கள் அதனைப் பெறாதிருந்தாலும், உங்களுக்கு ஏழு நாட்களுக்கான பாடநெறி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஞானம் உங்கள் புத்தியில் பிரவேசித்துள்ளது. ஆரம்பத்தில், ஒரு பத்தி உருவாக்கப்பட்டது. சிலர் உறுதியாக இருந்தார்கள். ஆனால் ஏனையோர் பலவீனமாக இருந்தார்கள். அதனால் மாயையின் புயல்களால் அவர்கள் சென்று விட்டார்கள். சிலர் ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை தூய்மையாக இருக்கின்றார்கள். பின்னர் அவர்கள் சரீர உணர்வு உடையவர்களாகி, தம்மையே அழித்துக் கொள்கின்றார்கள். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். நீங்கள் மாயையினால் அரைக் கல்பத்திற்குத் தோற்கடிக்கப்பட்டீர்கள். இப்பொழுது நீங்கள் தோற்கடிக்கப்பட்டால், உங்கள் அந்தஸ்தை இழப்பீர்கள். அந்தஸ்து பல தரங்களில், வரிசைக்கிரமமாக உள்ளன. சிலர் அரசர்களாகவும், அரசிகளாகவும் ஆகுகின்றனர், சிலர் ஆலோசகர்கள் ஆகுகின்றனர், சிலர் பிரஜைகளாகவும் ஆகுகின்றார்கள். சிலரிடம் வைரங்களும் இரத்தினங்களும் பதித்த மாளிகைகள் இருக்கும். சில பிரஜைகள் கூட மிகவும் செல்வந்தராக இருக்கிறார்கள். அவர்களிடம் வைரங்கள், இரத்தினங்களிலான மாளிகைகள் இருக்கும். இங்கே, அரசாங்கம் தனது மக்களுக்குக் கடன்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் செல்வந்தரா அல்லது அரசாங்கம் செல்வமிக்கதா? ‘இருண்ட தேசத்தில் குருடர்களே அரசர்கள்’ என்ற கூற்று இந்த நேரத்திற்கே பொருந்துகின்றது. நீங்கள் உலகின் முடிக்குரிய அரசர்கள் ஆகுவதற்குக் கற்கின்றீர்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது இருக்க வேண்டும். ஒரு கல்லூரியில் ஒரு சட்டநிபுணரோ அல்லது பொறியிலாளரோ தான் அவ்வாறு ஆகிக் கொண்டிருப்பதை மறக்கின்றாரா? சிலர் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் பொழுது, மாயையின் புயலில் சிக்கிக் கொள்வதால் கற்பதை நிறுத்தி விடுகின்றார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் நன்றாகக் கற்றால், சிறந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். தந்தையின் தாடியின் கௌரவத்தைக் காப்பாற்றுங்கள். நீங்கள் எந்தத் தீய செயல்களில் ஈடுபட்டாலும், தந்தையின் பெயரைக் களங்கப்படுத்துகிறீர்கள். உண்மையான தந்தைக்கும், உண்மையான ஆசிரியருக்கும், சற்குருவிற்கும் அவதூறு ஏற்படுத்துபவர்களால் ஒருபொழுதும் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. தற்பொழுது நீங்கள் வைரங்கள் போன்றவர் ஆகுகின்றீர்கள். ஆகவே, நீங்கள் சிப்பிகளைத் துரத்திச் செல்லக்கூடாது. பாபாவிற்கு ஒரு காட்சி கிடைத்த பொழுது, அவர் உடனடியாகவே சிப்பிகள் அனைத்தையும் துறந்து விட்டார். “21 பிறவிகளுக்கு எனக்கு ஓர் இராச்சியம் கிடைக்கும் பொழுது இவற்றின் மூலம் நான் என்ன செய்வேன்?” என அவர் நினைத்தார். எனவே அவர் அவற்றைக் கொடுத்து விட்டார். நான் உலக இராச்சியத்தைக் கோருகின்றேன். விநாசம் இடம்பெற வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியும். இப்பொழுது நீங்கள் கற்காது விட்டால், பின்னர் காலம் தாழ்ந்து விடும். அதனால் வருத்தப்பட நேரிடும். குழந்தைகளாகிய நீங்கள் அனைத்திற்கான காட்சிகளையும் காண்பீர்கள். தந்தை கூறுகின்றார்: ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!’ என நீங்கள் அழைத்தீர்கள். நான் இப்பொழுது உங்களுக்காகவே பழைய உலகிற்கு வந்து, தூய்மை ஆகுமாறு உங்களிடம் கூறுகின்றேன். நீங்கள் மீண்டும் மீண்டும் அழுக்கிற்குள் வீழ்கின்றீர்கள். நான் மகாகாலன். நான் உங்கள் அனைவரையும் என்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். தந்தை வந்து உங்களுக்குச் சுவர்க்கத்திற்கான வழியைக் காட்டுகின்றார். இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்ற ஞானத்தை அவர் உங்களுக்குக் கொடுக்கின்றார். இது எல்லையற்ற ஞானம். முன்னைய கல்பத்தில் கற்றவர்கள் மீண்டும் வந்து கற்பார்கள். அந்தக் காட்சிகளையும் நீங்கள் காண்பீர்கள். எல்லையற்ற தந்தை வந்துவிட்டார், நாங்கள் அதிகளவு வணங்கிய, சந்திப்பதற்காகக் காத்திருந்த, அந்தக் கடவுளே இப்போது வந்துவிட்டார், அவரே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எங்கள் தந்தையான அந்தக் கடவுளை நாங்கள் சந்திக்க வேண்டும். இந்த உறுதியான நம்பிக்கை உங்களுக்கு இருக்குமாயின், நீங்கள் அவரைச் சந்திக்க சந்தோஷமாகவும் உற்சாகத்துடனும் ஓடோடி வருவீர்கள். இது ஏமாற்றுவதற்கான விடயமல்ல. பலர் தூய்மை ஆகுவதும் இல்லை, கற்பதும் இல்லை. அவர்கள் பாபாவிடம் செல்வதற்கு மாத்திரமே விரும்புகின்றார்கள்; அவர்கள் சுற்றிப் பார்த்து விட்டுச் செல்வதற்காகவே இங்கே வருகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய இராச்சியத்தை மறைமுகமாகவே ஸ்தாபிக்க வேண்டும். நீங்கள் தூய்மையாகினால், தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். தந்தை மாத்திரமே உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார்; ஏனைய அனைவரும் ஹத்தயோகிகள். தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்கள் என்று கருதி, தந்தையான என்னை நினைவு செய்யுங்கள். உலகின் முடிக்குரிய இளவரசர் ஆகுவதற்கே எல்லையற்ற தந்தையிடம் வந்துள்ளீர்கள் என்ற போதையைக் கொண்டிருங்கள். ஆகவே, ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். மாயை உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டிக்கக் கூடியவள். தந்தை சக்திமிக்கவர், மாயையும் சக்திவாய்ந்தவள். அரைக்கல்பத்திற்கு இராம இராச்சியமும், ஏனைய அரைக் கல்பத்திற்கு இராவண இராச்சியமும் உள்ளன. இவையும் எவருக்கும் தெரியாது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இன்று நீங்கள் கற்கின்றீர்கள், நாளை நீங்கள் முடிக்குரிய இளவரசர்களும் இளவரசிகளும் ஆகுவீர்கள் என்ற போதையை எப்பொழுதும் பேணுங்கள். உங்கள் இதயத்திடம் கேளுங்கள்: நான் போதியளவு முயற்சி செய்கின்றேனா? தந்தையின் மீது அத்தகைய மரியாதை எனக்குள்ளதா? கற்பதில் நான் ஆர்வம் கொண்டிருக்கின்றேனா?2. தந்தையின் பணியில் மறைமுகமான உதவியாளர் ஆகுங்கள். உங்கள் மூட்டை முடிச்சுக்களை எதிர்காலத்திற்காக மாற்றுங்கள். சிப்பிகளைத் துரத்துவதில் நேரத்தை வீணாக்காதீர்கள். ஆனால் வைரம் போன்று ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களின் மனதையும் புத்தியையும் உங்களின் சொந்தக் கட்டளைகளில் இருந்து விடுவித்து வைத்திருப்பதன் மூலம் டபிள் லைற்றாகி சூட்சும வதனத்தை அனுபவம் செய்வீர்களாக.உங்களின் எண்ணத்தின் சக்தியை, அதாவது, உங்களின் மனதையும் புத்தியையும் சதா உங்களின் சொந்தக் கட்டளைகளில் இருந்து விடுபட்டவையாக வைத்திருங்கள். அப்போது, இந்த உலகின் காட்சிகளைத் தெளிவாகப் பார்ப்பதைப் போல், நீங்கள் இங்கே இருந்தாலும் சூட்சும வதனத்தின் காட்சிகளையும் இயற்கைக் காட்சிகளையும் தெளிவாக அனுபவம் செய்வீர்கள். இதை அனுபவம் செய்ய வேண்டும் என உங்களுக்குள் சுமையாக உணராதீர்கள். உங்களின் சுமைகள் அனைத்தையும் தந்தையிடம் கொடுத்துவிட்டு, இலேசாகவும் ஒளியாகவும் ஆகுங்கள். உங்களின் மனமும் புத்தியும் எப்போதும் தூய எண்ணங்கள் என்ற உணவையே உண்ண வேண்டும். ஒருபோதும் வீணானவை அல்லது பாவ எண்ணங்கள் என்ற தூய்மையற்ற உணவை உண்ணாதீர்கள். அப்போது நீங்கள் எந்தவிதமான சுமையில் இருந்தும் இலேசாக இருப்பதுடன் உயர்ந்த ஸ்திதியையும் அனுபவம் செய்யக்கூடியதாக இருக்கும்.
சுலோகம்:
வீணானவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உங்களின் நல்லாசிகளின் களஞ்சியத்தை நிரப்பிக் கொள்ளுங்கள்.அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபம் என்ற விழிப்புணர்வுடன் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.
தொடர்ந்து செயல்படும்போது, நீங்கள் தோல்வி அடைந்தால் அல்லது ஏதாவது கஷ்டத்தை அனுபவம் செய்தால், அதற்கான காரணம், நீங்கள் ஓர் உதவியாளராக மட்டுமே ஆகுகிறீர்கள், ஆனால் உங்களை இறை உதவியாளராக நீங்கள் கருதுவதில்லை. குதாவை (கடவுள்) கீத்மத் (சேவை) இலிருந்து பிரிக்காதீர்கள். பெயரே குதா கித்மத்கார் (கடவுளின் உதவியாளர்) என்றிருக்கும்போது, நீங்கள் ஏன் ஒன்றிணைந்து இருப்பதில் இருந்து பிரிகிறீர்கள்? சதா உங்களின் இந்தப் பெயரை நினையுங்கள். சேவையும் இயல்பாகவே கடவுளின் மந்திர வித்தையால் நிறைந்திருக்கும்.